இளையோர் நடுவில் திருத்தந்தை பிரான்சிஸ் - ஆகஸ்ட் 4 மறைக்கல்வி உரையின்போது... இளையோர் நடுவில் திருத்தந்தை பிரான்சிஸ் - ஆகஸ்ட் 4 மறைக்கல்வி உரையின்போது... 

அனைத்துலக இளையோர் நாள் – திருத்தந்தையின் டுவிட்டர்

"உணவு, நீர், மருந்து மற்றும் வேலை ஆகியவை, அளவின்றி வழிந்தோடி, மிகவும் தேவையில் இருப்போரை அவை முதலில் சென்றடையும் கனவை உண்மையாக்கும் ஓர் உலகை, இளையோரின் உதவியோடு நாம் உருவாக்கமுடியும்"

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஐ.நா. நிறுவனம் வழங்கியுள்ள பரிந்துரையின் பேரில், ஒவ்வோர் ஆண்டும், ஆகஸ்ட் 12ம் தேதி சிறப்பிக்கப்படும் அனைத்துலக இளையோர் நாளை முன்னிட்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டுவிட்டர் செய்தியொன்றை இவ்வியாழனன்று வெளியிட்டுள்ளார்.

"உணவு, நீர், மருந்து மற்றும் வேலை ஆகியவை, அளவின்றி வழிந்தோடி, மிகவும் தேவையில் இருப்போரை அவை முதலில் சென்றடையும் கனவை உண்மையாக்கும் ஓர் உலகை, இளையோரின் உதவியோடும், புதியவற்றை படைக்க அவர்கள் கொண்டிருக்கும் திறனோடும், நாம் உருவாக்கமுடியும்" என்ற சொற்கள், திருத்தந்தை வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் பதிவாகியிருந்தன.

ஒவ்வோர் ஆண்டும், ஆகஸ்ட் 12ம் தேதி, அனைத்துலக இளையோர் நாள் சிறப்பிக்கப்படும் வேளையில், வழிபாட்டு ஆண்டின் இறுதி ஞாயிறன்று கொண்டாடப்படும் கிறிஸ்து அரசர் திருநாளை, கத்தோலிக்கத் திருஅவை, இளையோர் நாளாக சிறப்பிக்கிறது.

அத்துடன், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் உலக இளையோர் நாள் நிகழ்வுகளை, அடுத்து, 2023ம் ஆண்டு போர்த்துக்கல் நாட்டின் தலைநகர் லிஸ்பனில் கொண்டாட, திருஅவை, ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது என்பது, குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு நாளும், @pontifex என்ற வலைத்தள முகவரியில், திருத்தந்தை வழங்கிவரும் டுவிட்டர் செய்திகள், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, இஸ்பானியம், போர்த்துகீசியம், ஜெர்மன், போலந்து, இலத்தீன் மற்றும் அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் வெளியாகின்றன.

ஆகஸ்ட் 12, இவ்வியாழன் முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 3,357 என்பதும், அவரது டுவிட்டர் பதிவுகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 88 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

ஐ.நா. நிறுவனத்தின் பொது அவை, 1999ம் ஆண்டு நிறைவேற்றிய ஒரு தீர்மானத்தின்படி, ஒவ்வோர் ஆண்டும், ஆகஸ்ட் 12ம் தேதி, அனைத்துலக இளையோர் நாள் சிறப்பிக்கப்படுகிறது.

ஒவ்வொரு நாட்டின் அரசும், ஏனைய அமைப்புக்களும் இளையோரின் மீது தங்கள் கவனத்தைத் திருப்பும்வண்ணம், ஐ.நா.நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த உலக நாளன்று, இளையோர் பங்கேற்கும் கருத்தரங்குகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் ஏனைய கலாச்சார விழாக்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 August 2021, 13:49