பங்கு அருள்பணியாளர்களின் பாதுகாவலரான புனித யோவான் மரிய வியான்னி பங்கு அருள்பணியாளர்களின் பாதுகாவலரான புனித யோவான் மரிய வியான்னி 

அருள்பணியாளர்களுக்காக சிறப்பாக செபியுங்கள் - திருத்தந்தை

புனித வியான்னி அவர்களின் எடுத்துக்காட்டினால் தூண்டப்பட்டு, அருள்பணியாளர்கள் அனைவரும், மீட்பளிக்கும் நற்செய்தியைப் பறைசாற்றும் பணியில் ஆர்வமாய் ஈடுபட அவர்களுக்காக செபிப்போம் – திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

"ஆகஸ்ட் 4ம் தேதியாகிய இன்று, புனித யோவான் மரிய வியான்னி அவர்களின் திருநாளையொட்டி, உங்கள் பங்கு அருள்பணியாளருக்காகவும், இன்னும் உலகின் அனைத்து அருள்பணியாளர்களுக்காகவும், சிறப்பான முறையில் இறைவேண்டல் செய்யும்படி, உங்கள் ஒவ்வொருவரையும் நான் அழைக்கிறேன்" என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் புதன் மறைக்கல்வி உரையின் இறுதியில் கூறினார்.

கோடை விடுமுறைக்குப்பின், புதன் மறைக்கல்வி உரை வழங்கும் தன் பணியைத் தொடர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பங்கு அருள்பணியாளருக்கும், பொதுவாக, அனைத்து அருள்பணியாளருக்கும் பாதுகாவலராகக் கருதப்படும் புனித யோவான் மரிய வியான்னி அவர்களின் திருநாள், ஆகஸ்ட் 4 இப்புதனன்று, சிறப்பிக்கப்பட்டதையொட்டி, இந்த அழைப்பை விடுத்தார்.

புனித Curé D'Ars, அதாவது, ‘அர்ஸ் நகரின் அருள்பணியாளர்’ என்றழைக்கப்படும் புனித வியான்னி அவர்களின் எடுத்துக்காட்டினால் தூண்டப்பட்டு, அருள்பணியாளர்கள் அனைவரும், மீட்பளிக்கும் நற்செய்தியை பறைசாற்றும் பணியில் ஆர்வமாய் ஈடுபட அவர்களுக்காக செபிப்போம் என்று, திருத்தந்தை அழைப்புவிடுத்தார்.

1786ம் ஆண்டு, மே 8ம் தேதி பிறந்த யோவான் மரிய வியான்னி அவர்கள், தன் 29வது வயதில் அருள்பணியாளராக அருள்பொழிவு பெற்று, பிரான்ஸ் நாட்டின் தென்கிழக்குப் பகுதியில், 230 பேர் மட்டுமே வாழ்ந்துவந்த அர்ஸ் என்ற சிறு கிராமத்தில் பங்கு அருள்பணியாளராக நியமிக்கப்பட்டார்.

ஒவ்வொரு நாளும் 16 மணி நேரங்கள் ஒப்புரவு அருளடையாளம் வழங்குவதற்கு தன்னையே அர்ப்பணித்து வாழ்ந்த இந்த புனித அருள்பணியாளரைத் தேடி, பிரான்ஸ் நாட்டின் அனைத்து ஊர்களிலிருந்தும் மக்கள் வந்தவண்ணம் இருந்ததால், அர்ஸ் கிராமம், 'ஆன்மாக்களின் பெரும் மருத்துவமனை' என்ற பெயர் பெற்றது.

1859ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி, தன் 73வது வயதில் இறையடி சேர்ந்த யோவான் மரிய வியான்னி அவர்களை, திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள் புனிதராக உயர்த்தி, அவரை, பங்கு அருள்பணியாளர்களின் பாதுகாவலர் என்றும் அறிவித்தார்.

2019ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி, புனித யோவான் வியான்னி அவர்கள் இறையடி சேர்ந்ததன் 160 ஆண்டு நிறைவு சிறப்பிக்கப்பட்ட வேளையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைத்து அருள்பணியாளருக்கும் எழுதிய ஒரு மடலில், இறைமக்களைப் பேணிக்காக்கவும், அவர்களுடன் இணைந்து பயணிக்கவும் அழைப்புவிடுத்தார்.

இன்றைய உலகில், முழுமனதுடன் பணிகள் செய்யும் அருள்பணித்துவத்தின் அழகை நாம் மீண்டும் கண்டுணர, புனித யோவான் மரிய வியான்னி அவர்கள் உதவிசெய்கிறார் என்று திருத்தந்தை இம்மடலில் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 August 2021, 12:40