தேடுதல்

திருத்தந்தையின் புதன் மறைக்கல்வியுரை - 'நற்செய்தி ஒன்றே'

நற்செய்திக்கு நாம் விசுவாசமாக இருக்கவேண்டியதை வலியுறுத்திக்கூறும் புனித பவுலைப் பொருத்தவரையில், நற்செய்தியை எடுத்துரைப்பதே அவரின் வாழ்வாக இருந்தது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

வழக்கமாக ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கோடை விடுமுறை காலத்தில் இருப்பதால், அம்மாதத்தில், மறைக்கல்வியுரைகள் இடம்பெறவில்லை என்பது நாம் அறிந்ததே. ஆகஸ்ட் மாதத்தின் முதல் மறைக்கல்வியுரை, 4ம் தேதி புதன்கிழமையன்று, திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கில் இடம்பெற்றது. பெருமெண்ணிக்கையில் திருப்பயணிகள், சுற்றுலாப்பயணிகள் என மக்கள் கூட்டம் அரங்கை நிறைத்திருக்க, புனித பவுல் காலத்தியருக்கு எழுதிய திருமுகம் குறித்த தன் மறைக்கல்வியுரையை, 'நற்செய்தி ஒன்றே' என்ற தலைப்பில் துவக்கினார், திருத்தந்தை பிரான்சிஸ். முதலில் புனித பவுல் காலத்தியருக்கு எழுதிய திருமுகத்தின் முதல் பிரிவிலிருந்து ஒரு பகுதி பல்வேறு மொழிகளில் வாசிக்கப்பட்டது.

கிறிஸ்துவின் பொருட்டு அருள் கூர்ந்து உங்களை அழைத்த அவரை விட்டுவிட்டு இவ்வளவு குறுகிய காலத்தில் வேறு ஒரு நற்செய்தியை ஏற்றுக் கொண்டுவிட்டீர்களே! எனக்கே வியப்பாய் இருக்கிறது. வேறு ஒரு நற்செய்தி இருக்கிறது என்று நான் சொல்ல வரவில்லை. மாறாகச் சிலர் உங்கள் மனத்தைக் குழப்பிக் கிறிஸ்துவின் நற்செய்தியைத் திரித்துக் கூற விரும்புகின்றனர் என்பதுதான் உண்மை. நாங்கள் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியினின்று மாறுபட்ட ஒன்றை நாங்களோ, விண்ணிலிருந்து வந்த தூதரோ, யார் அறிவித்தாலும் அவர்கள் சபிக்கப்படுக! (கலாத். 1,6-8)

பின்னர், திருத்தந்தை தன் எண்ணங்களை அங்கு குழுமியிருந்தோருடன் பகிர்ந்து கொண்டார்.

அன்பு சகோதரரே, சகோதரிகளே, காலத்தியருக்கு புனித பவுல் எழுதிய திருமுகத்தைப் பற்றிய நம் மறைக்கல்வித் தொடரில் இன்று, நற்செய்திக்கு நாம் விசுவாசமாக இருக்க வேண்டியதை புனித பவுல் வலியுறுத்திக் கூறுவது பற்றி காண்போம். புனித பவுலைப் பொருத்தவரையில், நற்செய்தியை எடுத்துரைப்பதே அவரின் வாழ்வாக இருந்தது. நம் பாவங்களுக்காக இறந்து, அடக்கம் செய்யப்பட்டு, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து, திருத்தூதர் பேதுருவுக்கும் காட்சியளித்த  (1 கொரி. 15:3-5) இயேசு கிறிஸ்துவில் இறைவனின் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேறின என்பதையே கலாத்தியருக்கு போதித்தார் புனித பவுல். இதனால்தான் தன் திருமடலின் துவக்கத்திலேயே புனித பவுல் கலாத்தியரிடம், நற்செய்தி கொணர்ந்த விடுதலையிலிருந்து அவர்கள் விலகிச் செல்லக்கூடாது என்பதை வலியுறுத்துகிறார். திருத்தூதர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நற்செய்தி, நம்மையும் சேர்த்து அனைவருக்கும், புதிய வாழ்வு குறித்த உறுதியையும், இயேசுவின் சிலுவையிலிருந்து வழிந்தோடும் புதுவாழ்வு, மற்றும் விடுதலையையும், தூயஆவியாரின் கொடையையும் வழங்குகிறது.

இவ்வாறு, தன் புதன் மறைக்கலவியுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், லெபனோன் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில், சென்ற ஆண்டு, ஆகஸ்ட் 4ம் தேதி இடம்பெற்ற வெடிவிபத்தை நினைவுகூர்ந்து, அந்நாட்டிக்காக செபிக்கும்படி மக்களிடம் விண்ணப்பித்து, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 August 2021, 11:15

அண்மைய மறைக்கல்வியுரைகள்

அனைத்தையும் படிக்கவும் >