தேடுதல்

இயேசுவை வாழ்வில் வரவேற்க வேண்டும் என்பதே செய்தி

பலவேளைகளில் நம் புறத்தேவைகளுக்காகவும், அந்தந்த நேரத்தின் தேவைகளுக்காகவும் மட்டும் இறைவனைத் தேடிச்செல்பவர்களாக உள்ளோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

நம்முடைய பொருள்தேவைகளில் மட்டும் கவனம் செலுத்தாமல், இறைவனைத் தேடுவதிலும், அவருடன் கொள்ளும் உறவை ஆழப்படுத்துவதிலும் முக்கியக் கவனம் செலுத்தவேண்டும் என, ஞாயிறு மூவேளை செபஉரையின்போது அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆகஸ்ட் மாதம், முதல் தேதி, ஞாயிறன்று, புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு, திருப்பலி நற்செய்தி வாசகத்தை (யோவா 6, 24-35) மையப்படுத்தி, நண்பகல் மூவேளை செபஉரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அப்பத்தை பலுகச்செய்த புதுமையின் வெளிஅர்த்தத்தை மட்டுமே பிடித்துக்கொண்டு, இயேசுவின் பின்னாலேயே செல்ல விரும்பிய மக்கள், அப்புதுமையின் உண்மை அர்த்தத்தை புரிந்துகொள்ள தவறியிருந்தார்கள் என்றார்.

இன்றைய நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ளதைப்போல், அப்பம் உண்ணுதல் போன்ற வெளித் தேவைகளுக்காக இயேசுவைத் தேடிச்சென்ற மக்களைப்போல், நாமும் பலவேளைகளில் நம் புறத்தேவைகளுக்காகவும், அந்தந்த நேரத்தின் தேவைகளுக்காகவும் மட்டும் இறைவனைத் தேடிச்செல்பவர்களாக உள்ளோம் எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நாம் எதற்காக கடவுளை நாடுகின்றோம்,  நம் உண்மையான நோக்கம் என்ன?, நம் தேவைகளின்போது அவரைத் தேடிவிட்டு, நம் தேவைகள் நிறைவேறிய உடன் அவரை மறந்துவிடுகிறோமா, என்பது குறித்த கேள்விகளை நமக்குள்ளேயே நாம் கேட்க வேண்டியுள்ளது, என்ற திருத்தந்தை, இறைவனுடன் நாம் கொண்டிருக்கும் உறவும் அன்பும், நம் தேவைகள் மற்றும் கணித்தல்களை  உள்ளடக்கிய தர்க்கவாதங்களைத் தாண்டியது என எடுத்துரைத்தார்.

“எங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருப்பதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என மக்கள் இயேசுவிடம் கேட்டதையும், “கடவுள் அனுப்பியவரை நம்புவதே கடவுளுக்கேற்ற செயல்”என இயேசு கூறி தன்னிடம் நம்பிக்கைக் கொள்ளுமாறுக் கூறியதையும், சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  இயேசுவை நம் வாழ்வில் வரவேற்கவேண்டும் என்பதே, இங்கு நமக்கு தரப்படும் முக்கியச் செய்தி என்றார்.

இயேசுவை வரவேற்று, அவரை நம் வாழ்வில் அன்புகூர்வதற்கு அழைக்கப்படுவதுபோல், நம் சமுதாய உறவுகளிலும், மற்றவர்களை வரவேற்கவும், அன்புகூரவும், நாம் அழைப்புப் பெற்றுள்ளோம் என எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் தேவைகளுக்காக மற்றவர்களைப் பயன்படுத்தாதிருக்கவும், நம் அக்கறைகளின் மையமாக நம் சக மனிதர்களைக் கொண்டிருக்கவும் இறைவனின் உதவியை நாடுவோம் என கேட்டுக்கொண்டார்.

நம் வாழ்வின் அப்பமாகிய இயேசுவை நாம் வரவேற்று, அவரோடு கொள்ளும் நட்புணர்விலிருந்து, மற்றவர்களை சுதந்திரமாக அன்புகூர்வதைக் கற்றுக்கொள்வோம் என விண்ணப்பித்து, தன் மூவேளை செபஉரையை நிறைவுசெய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 August 2021, 12:49

மூவேளை செபம் என்பது, கடவுள் மனுவுரு எடுத்த பேருண்மையை நினைவுகூர்ந்து ஒரு நாளில் மூன்றுமுறை : மூவேளை செபத்திற்கென மணி ஒலிக்கும் காலை 6 மணி, நண்பகல் மற்றும் மாலை 6 மணியளவில் செபிக்கும் செபமாகும். ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார் எனத் தொடங்கும் மூவேளை செபத்தின் முதல் வரியிலிருந்து, மூவேளை என்ற பெயர் வந்துள்ளது. இந்த முதல்வரியானது, இயேசு கிறிஸ்து மனுஉரு எடுத்தது மற்றும் மூன்று முறை அருள் நிறைந்த மரியே எனச் சொல்லும் எளிய பகுதியை உள்ளடக்கியது. இந்தச் செபம்,  புனித பேதுரு வளாகத்தில், ஞாயிறு மற்றும் பெருவிழா நாள்களின் நண்பகலில்  திருத்தந்தையால் சொல்லப்படுகின்றது. மூவேளை செபத்தைச் சொல்வதற்கு முன்னர், திருத்தந்தை,  அந்நாளைய வாசகங்களிலிருந்து தூண்டுதல்பெற்ற சிறு உரையும் நிகழ்த்துவார். அதைத் தொடர்ந்து திருப்பயணிகளை வாழ்த்துவார். கிறிஸ்துவின் உயிர்ப்பு முதல், தூய ஆவியார் பெருவிழா வரை,  மூவேளை செபத்திற்குப் பதிலாக அல்லேலூயா வாழ்த்தொலி செபம் செபிக்கப்படுகிறது. இச்செபம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நினைவாகச் செக்கப்படுகிறது. இச்செபத்தின் இறுதியில், தந்தைக்கும் மகனுக்கும், தூய ஆவியாருக்கும்... மூன்று முறை சொல்லப்படுகின்றது.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >