தேடுதல்

உடலை உண்டு இரத்தத்தைக் குடிப்பது எப்படி என்பதே இடறல்

இயேசுவின் சீடருள் பலர், அவரைவிட்டு விலகினர் என்பதைக்காணும் நாம், இயேசுவின் மீது, இந்த அவநம்பிக்கை ஏற்பட என்ன காரணம் என்பது குறித்து சிந்திப்போம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

அப்பம் பலுகிய புதுமையைத் தொடர்ந்த இயேசுவின் போதனைக்கு மக்களும் இயேசுவின் சீடர்களும் வழங்கியப் பதிலுரையைக் குறித்து இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவா 6:60-69) காண்கிறோம் என, தன் ஞாயிறு மூவேளை செப உரையைத் துவக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வானகத்திலிருந்து வரும் வாழ்வின் அப்பத்தை, தன் உடல் மற்றும் இரத்தம் வழியாக வழங்கவிருப்பதை இயேசு சுட்டிக்காட்டுகிறார் எனத் தொடர்ந்து கூறினார்.

எனது சதையை உண்டு இரத்தத்தைக் குடித்தாலொழிய வாழ்வு அடைய மாட்டீர்கள் என்று கூறிய இயேசுவின் வார்த்தைகளால் இடறல்பட்ட மக்கள், அவரைப் பின்பற்றுவதிலிருந்து விலகிச்சென்றபோது, தன் சீடர்களை நோக்கி, நீங்களும் விலகிச்சென்று விடுவீர்களா என இயேசு கேட்டதையும், அதற்கு பேதுரு வழங்கிய பதிலையும் குறிப்பிட்டு, தன் மூவேளை செப உரையைத் தொடர்ந்தார்.

“நீங்களும் போய் விட நினைக்கிறீர்களா?” என்று இயேசு கேட்க, சீடர்களின் சார்பாகப் பேசும் புனித பேதுரு, “ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. நீரே கடவுளுக்கு அர்ப்பணமானவர் என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். அதை நம்புகிறோம்” (யோவா 6:68-69) என்று கூறுவதையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசுவின் சீடருள் பலர் அவரைவிட்டு விலகினர் என்பதைக்காணும் நாம், இயேசுவின்மீது இந்த அவநம்பிக்கை  ஏற்பட என்ன காரணம் என்பது குறித்து சிந்திப்போம் என்ற அழைப்பையும் முன்வைத்த திருத்தந்தை, இறைவன் மனுவுருவெடுத்ததே, அவரைப் பின்பற்றியவர்களுக்கு இடறலாக இருந்ததுபோல், இன்றும் நம்மில் பலருக்கு அது இடறலாய் இருக்கிறது எனபதை எடுத்துரைத்தார்.

இயேசுவே உண்மையான வாழ்வுதரும் அப்பம் என்பதையும், அவருடனான நெருங்கிய உறவிலேயே நாம் இறைவனுடன் ஒன்றிப்பை காணமுடியும் என இயேசு எடுத்துரைத்து,  கடவுளைப் பின்பற்றுவது என்பது, அவரை கனவுகளிலோ, அல்லது, பிரம்மாண்டமான அவரது வல்லமையின் கற்பனைகளிலோ அல்ல, இயேசுவின் மனிதத்தன்மையிலும், அதன் பயனாக வாழ்வின் பாதையில் நாம் சந்திக்கும் நம் சகோதரர் சகோதரிகளிடமும் நாம் இறைவனை அடையாளம் கண்டுகொள்ளவேண்டும் என விண்ணப்பித்தார்.

மனுவுருவெடுத்து தன்னையேத் தாழ்த்தி நம் பாவங்களைச் சுமந்த இறைவனை, வாழ்வுக்கும் வரலாற்றுக்கும் வெளியே தேடுவதை, இறைவன் விரும்பவில்லை, மாறாக, இயேசுவுடனும், நம் சகோதரர் சகோதரிகளுடனும் கொள்ளும் உறவில் கன்டுகொள்ள அழைப்புவிடுக்கிறார் என உரைத்தார் திருத்தந்தை.

ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் வைத்து, ஆயிரக்கணக்கானோரின் பசியாற்றிய இயேசுவின் செயலைப் பார்த்த மக்கள் அவரைத் தூக்கிக்கொண்டாட விரும்பினார், ஆனால் இயேசுவோ, தான் வழங்க உள்ள தன் உடல் எனும் அப்பத்தின் அடையாளமே இந்த அப்பம் எனவும், நாமும் நம்மையே பிறருக்கு வழங்குவதில் அவரை பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டு, தன் மூவேளை செப உரையை நிறைவுச் செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 August 2021, 12:56

மூவேளை செபம் என்பது, கடவுள் மனுவுரு எடுத்த பேருண்மையை நினைவுகூர்ந்து ஒரு நாளில் மூன்றுமுறை : மூவேளை செபத்திற்கென மணி ஒலிக்கும் காலை 6 மணி, நண்பகல் மற்றும் மாலை 6 மணியளவில் செபிக்கும் செபமாகும். ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார் எனத் தொடங்கும் மூவேளை செபத்தின் முதல் வரியிலிருந்து, மூவேளை என்ற பெயர் வந்துள்ளது. இந்த முதல்வரியானது, இயேசு கிறிஸ்து மனுஉரு எடுத்தது மற்றும் மூன்று முறை அருள் நிறைந்த மரியே எனச் சொல்லும் எளிய பகுதியை உள்ளடக்கியது. இந்தச் செபம்,  புனித பேதுரு வளாகத்தில், ஞாயிறு மற்றும் பெருவிழா நாள்களின் நண்பகலில்  திருத்தந்தையால் சொல்லப்படுகின்றது. மூவேளை செபத்தைச் சொல்வதற்கு முன்னர், திருத்தந்தை,  அந்நாளைய வாசகங்களிலிருந்து தூண்டுதல்பெற்ற சிறு உரையும் நிகழ்த்துவார். அதைத் தொடர்ந்து திருப்பயணிகளை வாழ்த்துவார். கிறிஸ்துவின் உயிர்ப்பு முதல், தூய ஆவியார் பெருவிழா வரை,  மூவேளை செபத்திற்குப் பதிலாக அல்லேலூயா வாழ்த்தொலி செபம் செபிக்கப்படுகிறது. இச்செபம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நினைவாகச் செக்கப்படுகிறது. இச்செபத்தின் இறுதியில், தந்தைக்கும் மகனுக்கும், தூய ஆவியாருக்கும்... மூன்று முறை சொல்லப்படுகின்றது.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >