போஸ்னியாவின் Medjugorje நகரில் விசுவாசிகள் கூட்டம் போஸ்னியாவின் Medjugorje நகரில் விசுவாசிகள் கூட்டம் 

உலக ஆசைகள், இறைவனையும் சக மனிதர்களையும் புறந்தள்ளுகின்றன

திருத்தந்தை : நன்மைத்தனம், மற்றும் உண்மை மகிழ்வின் ஆதாரத்தைத் தேடிச்செல்பவர்கள், அதன் முதல்படியாக, மற்றவர்களுக்கு, நன்மைத்தனங்களை ஆற்றுவதில் கவனம் செலுத்தவேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
“போதகரே, நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்வதற்கு நான் என்ன நன்மை செய்யவேண்டும்?”, என இயேசுவை நோக்கி கேட்ட பணக்கார இளைஞனைப்போல் நாம் ஒவ்வொருவரும் இருக்க, இயேசுவோ, நம் மீது கனிவான பார்வையை திருப்பி, தன்னை பின்செல்ல அழைக்கிறார் என, இளையோருக்கு செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
போஸ்னியாவின் Medjugorje நகரில் ஆகஸ்ட் 1, இஞ்ஞாயிறு முதல், 6ம் தேதிவரை Mladifest என்ற பெயரில் இடம்பெற்றுவரும் இளையோர் கொண்டாட்டங்களையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள செய்தியொன்றில் இவ்வாறு கூறியுள்ளார்.
இயேசுவைப் பின்செல்வது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பிய பணக்கார இளைஞனின் இடத்தில் நாம் ஒவ்வொருவரும் உள்ளோம் என்பதை தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை, நன்மைத்தனம், மற்றும் உண்மை மகிழ்வின் ஆதாரத்தை தேடிச்செல்பவர்கள், அதன் முதல்படியாக மற்றவர்களுக்கு நன்மைத்தனங்களை ஆற்றுவதில் கவனம் செலுத்துமாறு விண்ணப்பித்துள்ளார்.
“நல்ல போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்யவேண்டும்?” (மாற் 10:17) என அந்த இளைஞன் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் இயேசு, “நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவருமில்லையே' என எடுத்துரைத்து, அவ்விளைஞனை கடவுளை நோக்கித் திருப்புகிறார் என்பதை சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.
நம் இதயத்தை இவ்வுலகச் செல்வங்கள் குறித்த ஆசையால் நிரப்பும்போது, அங்கு இறைவனுக்கும் சக மனிதர்களுக்கும் இடமில்லாமல் போகிறது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்பிய இயேசு, அந்த பணக்கார இளைஞரிடம் இருப்பதையெல்லாம் ஏழைகளுக்கு கொடுத்துவிட்டு, அதன் வழியே, விண்ணுலகில் செல்வம் சேர்க்க கேட்டுக்கொண்டதுடன், அதன்பின் தன்னை வந்து பின்செல்ல பணித்ததையும் குறிப்பிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நிலைவாழ்வைப் பெறும் வழி குறித்து அறிந்துகொள்ள துணிச்சலுடன் கேள்வி கேட்ட இளைஞர், இயேசுவின் பதிலை ஏற்கும் துணிச்சலின்றி வாடிய முகத்துடன் சென்றதைக் குறிப்பிட்ட திருத்தந்தை, இவ்வுலகச் செல்வங்களோடு தனக்கிருந்த முடிச்சுக்களை அவிழ்த்துவிட்டு, இயேசுவோடு இறுக்கமான முடிச்சுப்போட அவர் மனம் இசைவு அளிக்கவில்லை என விளக்கமளித்தார்.
ஒவ்வோர் இளையோரையும் நோக்கி, இயேசு தன்னைப் பின்செல்லும்படி கேட்கிறார் என உரைத்த திருத்தந்தை, இத்தகையப் பாதையில் இயேசுவை முழுமையாகப் பின்பற்றிய அன்னை மரியாவின் வாழ்வு எடுத்துக்காட்டுகளை பின்பற்றுவதோடு, அவரின் பரிந்துரையையும் நாடுவோம் என, இளையோர் அனைவரையும் விண்ணப்பித்துள்ளார்.
 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 August 2021, 14:08