திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் மற்றும் கர்தினால் எதுவார்தோ மார்த்தினெஸ் சொமாலோ - கோப்புப் படம் திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் மற்றும் கர்தினால் எதுவார்தோ மார்த்தினெஸ் சொமாலோ - கோப்புப் படம் 

கர்தினால் மார்த்தினெஸ் மறைவுக்கு திருத்தந்தை இரங்கல்

அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு பேராயத்தின் தலைவராக பணியாற்றிய கர்தினால் மார்த்தினெஸ் அவர்கள், திருப்பீடத்தின் Camerlengo எனப்படும் மிக முக்கிய பொறுப்பை வகித்து வந்தார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

எனக்கு முன்னதாக தலைமைப்பணியாற்றிய ஐந்து திருத்தந்தையர்களுக்கு வெவ்வேறு வழிகளில் உதவிசெய்த கர்தினால் எதுவார்தோ மார்த்தினெஸ் சொமாலோ (Eduardo Martínez Somalo) அவர்களின் மரணத்தையொட்டி, என் ஆழ்ந்த அனுதாபங்களை பதிவுசெய்கிறேன் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவரகள், ஆகஸ்ட் 11, இப்புதனன்று அனுப்பிய இரங்கல் தந்தியில் கூறியுள்ளார்.

திருப்பீடத்தில் பல பொறுப்பான பணிகளைப் புரிந்து, ஒய்வுபெற்றிருந்த கர்தினால் மார்த்தினெஸ் அவர்கள், ஆகஸ்ட் 10, இச்செவ்வாயன்று, தன் 94வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.

2007ம் ஆண்டு, தன் 80வது வயதில், கர்தினால் மார்த்தினெஸ் அவர்கள் பணியிலிருந்து ஓய்வுபெற விழைவதாக அனுப்பியிருந்த மடலுக்கு, அப்போது திருத்தந்தையாகப் பணியாற்றிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் பதில் அளித்த வேளையில், கர்தினால் மார்த்தினெஸ் அவர்கள் மிகவும் கண்ணியமான முறையில் தன் பணிகளைச் செய்தவர் என்று கூறியிருந்தார்.

1927ம் ஆண்டு, மார்ச் மாதம் 31ம் தேதி, இஸ்பெயின் நாட்டில் பிறந்த மார்த்தினெஸ் அவர்கள், அருள்பணித்துவ பயிற்சி காலத்தில், உரோம் நகரில், பாப்பிறை இஸ்பானிய கல்லூரியிலும், கிரகோரியன் பாப்பிறை பல்கலைக் கழகத்திலும் பயின்றார்.

திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்களால் 1988ம் ஆண்டு கர்தினாலாக உயர்த்தப்பட்ட மார்த்தினெஸ் அவர்கள், அத்திருத்தந்தையின் பல்வேறு பன்னாட்டு திருத்தூதுப் பயணங்களில் உடன்சென்றார்.

இறைவழிபாடு மற்றும் அருளடையாள பேராயத்தின் தலைவராகவும், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு பேராயத்தின் தலைவராகவும் பணியாற்றிய கர்தினால் மார்த்தினெஸ் அவர்கள், 1993ம் ஆண்டு முதல், 2007ம் ஆண்டு முடிய திருப்பீடத்தின் Camerlengo எனப்படும் மிக முக்கிய பொறுப்பை வகித்து வந்தார்.

கர்தினால் மார்த்தினெஸ் அவர்கள், Camerlengo பொறுப்பில் இருந்தவேளையில், திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள் இறையடி சேர்ந்ததையடுத்து, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் வரை, அந்த இடைப்பட்ட காலத்தில், திருஅவையின் பொறுப்பாளராக இருந்து, கர்தினால்களின் கான்கிளேவ் அவையின் ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தார்.

இவர் கர்தினாலாக பணியாற்றிய காலத்தில், 1991ம் ஆண்டு நடைபெற்ற சிறப்பு  ஐரோப்பிய ஆயர்கள் மாமன்றத்தையும், 1994ம் ஆண்டு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வை மையப்படுத்தி நடைபெற்ற உலக ஆயர்கள் மாமன்றத்தையும் ஒருங்கிணைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தார்.

கர்தினால் எதுவார்தோ மார்த்தினெஸ் சொமாலோ அவர்களின் மறைவையடுத்து, திருஅவையில் 219 கர்தினால்கள் உள்ளனர். இவர்களில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுள்ளவர்கள் 123 பேர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 August 2021, 14:22