தேடுதல்

மறைக்கல்வியுரை : மோசேயின் சட்டத்திலிருந்து விடுதலை

உடன்படிக்கை என்பது, சட்டத்தை கடைப்பிடிப்பதை அடிப்படையாகக் கொண்டதல்ல, மாறாக, இறைவனின் வாக்குறுதிகள் நிறைவேறுவதில் நாம் கொள்ளும் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

புனித பவுல் காலத்தியருக்கு எழுதிய திருமுகம் குறித்து புதிய தொடர் ஒன்றை தன் புதன் மறைக்கலவி உரைகளில் வழங்கிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை மாத கோடை விடுமுறைக்குப்பின், கடந்தவாரம், 'நற்செய்தி ஒன்றே' என்ற தலைப்பில் தன் எண்ணங்களைப் பகிர்ந்திருந்தார். இவ்வாரம், 'மோசேயின் சட்டம்' என்ற தலைப்பில் மறைக்கல்வி உரையை திருத்தந்தை வழங்குவதற்கு முன்னர், புனித பவுல் காலத்தியருக்கு எழுதிய திருமுகத்தின் 3ம் பிரிவிலிருந்து ஒரு பகுதி பல மொழிகளில், முதலில் வாசிக்கப்பட்டது

அப்படியானால் திருச்சட்டத்தின் பயன் என்ன? குற்றங்களை எடுத்துக்காட்ட அது பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது. வாக்குறுதிக்கு உரியவரான வழிமரபினர் வரும்வரை அது நீடிக்க வேண்டியிருந்தது. வாழ்வு அளிக்க வல்லதொரு சட்டம் தரப்பட்டிருந்தால் அந்தச் சட்டத்தின் வழியாகவே மனிதர் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆகியிருக்கலாம். ஆனால், இயேசு கிறிஸ்துவின்மீது நம்பிக்கை கொள்வோருக்கு வாக்களிக்கப்பட்டவை நம்பிக்கையால் கிடைக்கவேண்டும் என்பதற்காகவே அனைத்தும் பாவத்தின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டுள்ளது என மறைநூல் கூறுகிறது. (கலாத் 3,19.21-22)

அதன் பின் திருத்தந்தையின் சிந்தனைப் பகிர்வு இடம்பெற்றது.

அன்பு சகோதரரே, சகோதரிகளே, புனித பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்தில், கிறிஸ்தவ வாழ்வின் புதியத் தன்மை குறித்து திருத்தூதர் வலியுறுத்துவதை நாம் கண்டோம். இதைப் புரிந்துகொள்ள, தூய ஆவியார், நம் இதயத்தில் செயல்பட்டதற்கு நன்றியுரைப்போம். மோசேயின் சட்டத்தின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியுமாறு கலாத்தியர்களை வலியுறுத்தியவர்களுக்கு எதிராக, மக்களுடன் கடவுள் ஏற்படுத்திய உடன்படிக்கைக்கு சேவை புரிவதில் சட்டம் அடங்கியுள்ளதாக புனித பவுல் பதிலளிக்கிறார். உடன்படிக்கை என்பது, சட்டத்தை கடைப்பிடிப்பதை அடிப்படையாகக் கொண்டதல்ல, மாறாக, இறைவனின் வாக்குறுதிகள் நிறைவேறுவதில் நாம் கொள்ளும் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. பாஸ்கா மறையுண்மையான, கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்த்தெழுதல் ஆகியவற்றின் வழியாக, இறைவன் தன் வாக்குறுதிகளை உறுதியாக நிறைவேற்றியுள்ள நிலையில், நற்செய்தியை நம்புகிறவர்கள் அனைவரும், சட்டத்தின் கோரிக்கைகளிலிருந்து விடுதலையடைந்தவர்களாகிறார்கள். அன்பின் புதிய கட்டளையில் சட்டத்தை நிறைவுக்குக் கொணரும் தூய ஆவியாரின் அருள்பொழிவிற்கு நாம் வழங்கும் பதிலிலிருந்து, கிறிஸ்தவ வாழ்வின் புதிய தன்மை பிறக்கிறது.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வியுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆகஸ்ட் 11, இப்புதனன்று, அசிசி நகரின் புனித கிளாரா திருவிழா திருஅவையில் சிறப்பிக்கப்பட்டதை நினைவூட்டி, இயேசுவுடன் கூடிய ஒன்றிப்பில் மன உறுதியுடனும் தாராளமனத்துடனும் நாமும் செயல்பட புனித கிளாராவின் எடுத்துக்காட்டு நமக்கு உதவுவதாக என எடுத்துரைத்தார். மேலும், அன்னமரியா விண்ணுலகிற்கு எடுத்துச் செல்லப்பட்ட பெருவிழாவை சிறப்பிக்க, நம்மை தயாரித்துவரும் இவ்வேளையில், அனைத்து மக்களையும் அன்னை மரியாவின் பரிந்துரைக்கு சமர்ப்பிப்பதாக கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 August 2021, 12:37

அண்மைய மறைக்கல்வியுரைகள்

அனைத்தையும் படிக்கவும் >