ஜெமெல்லி மருத்துவமனையின் நுழைவாயில் ஜெமெல்லி மருத்துவமனையின் நுழைவாயில் 

திருத்தந்தையின் உடல்நலனில், திருப்தி அளிக்கும் முன்னேற்றம்

"இந்நாள்களில் என்னை வந்துசேர்ந்த அக்கறை நிறைந்த செய்திகள், என்னை மிகவும் தொட்டன. தங்கள் செபங்களையும் அருகாமையையும் வெளியிட்டுள்ள ஒவ்வொருவகுக்கும் நான் நன்றி கூறுகிறேன்" – திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

உரோம் நகரின் ஜெமெல்லி மருத்துவமனையில், ஜூலை 4, இஞ்ஞாயிறு மாலை அனுமதிக்கப்பட்டு, அறுவைசிகிச்சைக்கு உட்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடல்நலனில், திருப்தி அளிக்கும் முன்னேற்றம் தெரிகிறது என்று, வத்திக்கான் செய்தித் துறையின் தலைவர், மத்தேயோ ப்ரூனி அவர்கள், ஜூலை 7, இப்புதனன்று, அறிக்கையொன்றை வெளியிட்டார்.

திருத்தந்தை விரைவில் உடல்நலம் பெற்று திரும்பிவர, உலகின் பல பகுதிகளிலிருந்தும், அவருக்கு, செபம் கலந்த வாழ்த்துக்கள், வந்தவண்ணம் உள்ளன.

இதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை 7, இப்புதனன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், "இந்நாள்களில் என்னை வந்துசேர்ந்த அக்கறை நிறைந்த செய்திகள், என்னை மிகவும் தொட்டன. தங்கள் செபங்களையும் அருகாமையையும் வெளியிட்டுள்ள ஒவ்வொருவகுக்கும் நான் நன்றி கூறுகிறேன்" என்ற சொற்கள் இடம்பெற்றன.

ஜூலை 4, கடந்த ஞாயிறன்று வழங்கிய மூவேளை செப உரையில் கூறிய இரு கருத்துக்களை டுவிட்டர் செய்திகளாக வெளியிட்ட திருத்தந்தை, கடந்த இரு நாள்கள், டுவிட்டர் பதிவுகளை வெளியிடாமல் இருந்தபின், இன்று, மீண்டும், தன் டுவிட்டர் செய்தியை, ஒரு நன்றிப்பதிவாக வெளியிட்டுள்ளார்.

ஒவ்வொரு நாளும், @pontifex என்ற வலைத்தள முகவரியில், திருத்தந்தை வழங்கிவரும் டுவிட்டர் செய்திகள், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, இஸ்பானியம், போர்த்துகீசியம், ஜெர்மன், போலந்து, இலத்தீன் மற்றும் அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் வெளியாகின்றன.

ஜூலை 7, இப்புதன் முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 3.334 என்பதும், அவரது டுவிட்டர் பதிவுகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 88 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 July 2021, 14:44