மனிதவர்த்தகத்திற்குப் பலியானவர்கள் மனிதவர்த்தகத்திற்குப் பலியானவர்கள் 

மனிதவர்த்தகத்திற்கு எதிரான உலக நாள் – திருத்தந்தை குறுஞ்செய்தி

மனிதவர்த்தகத்திற்குப் பலியானவர்கள் பராமரிப்பு, மற்றும், மனித வர்த்தகத்தை ஒழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ‘தலித்தா கூம்’ அமைப்போடு இணைந்து பணியாற்ற திருத்தந்தை அழைப்பு

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மனிதவர்த்தகத்திற்குப் பலியானவர்கள் பராமரிப்பு, மற்றும், மனிதவர்த்தகத்தை ஒழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள, ‘தலித்தா கூம்’ (Talitha Kum) உலகளாவிய அமைப்போடு எல்லாரும் இணைந்து பணியாற்றுமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று அழைப்புவிடுத்துள்ளார்.

ஜூலை 30, இவ்வெள்ளியன்று கடைப்பிடிக்கப்பட்ட, மனிதவர்த்தகத்திற்கு எதிரான உலக நாளை மையப்படுத்தி, தன் டுவிட்டர் வலைப்பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள திருத்தந்தை, இவ்வாறு விண்ணப்பித்துள்ளார்.

“மனிதவர்த்தகத்திற்கு எதிரான உலக நாளில், மனிதவர்த்தகப் பொருளாதாரம், பராமரிப்புப் பொருளாதாரமாக மாற்றப்படுவதற்கு, மனிதவர்த்தகத்திற்குப் பலியானவர்களோடு இணைந்து பணியாற்ற அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்” என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் செய்தியில் பதிவுசெய்துள்ளார்.

மனித வர்த்தகம்

“மனிதவர்த்தகத்திற்குப் பலியானவர்களின் குரல்கள், அதனை ஒழிப்பதற்குரிய பாதையை வழிநடத்தட்டும்” என்ற தலைப்பில், ஜூலை 30, இவ்வெள்ளியன்று, மனிதவர்த்தகத்திற்கு எதிரான உலக நாள் கடைப்பிடிக்கப்பட்டது. இந்த உலக நாள், 2007ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.

இன்றைய உலகில், குற்றக்கும்பல்களுக்கு நிதி திரட்டித்தரும் முக்கிய வளங்களில் ஒன்றான மனிதவர்த்தகத்தால், அவற்றுக்கு ஒவ்வோர் ஆண்டும் 150 பில்லியன் டாலர் வருவாய் கிடைக்கிறது என்று கணிக்கப்பட்டுள்ளது.. இக்கும்பல்களுக்கு, போதைப்பொருள் வர்த்தகம், மற்றும், ஆயுத விற்பனையால் கிடைக்கும் நிதியைவிட, மனிதவர்த்தகத்தால் அதிகம் கிடைக்கிறது. அதோடு மனிதவர்த்தகம் என்ற இந்த நவீனகால அடிமைமுறை, இன்று வேகமாகவும் வளர்ந்துவருகிறது என்று செய்திகள் கூறுகின்றன.

தலித்தா கூம் அமைப்பு

கத்தோலிக்க பெண் துறவு சபைகள் தலைவர்களின் UISG என்ற கூட்டமைப்பு,  மனிதவர்த்தகத்தை ஒழிப்பதற்கென்று, 2009ம் ஆண்டு, ‘தலித்தா கூம்’ என்ற ஓர் அமைப்பை உருவாக்கியது. 90 நாடுகளில் தீவிரமாகப் பணியாற்றிவருகின்ற இந்த அமைப்பின் உதவியுடன், பல நாடுகளில் மனிதவர்த்தகத்திற்கு உள்ளான 17,000 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு, கல்வி வசதி மற்றும், வேலைவாய்ப்பு ஆகியவையும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 July 2021, 13:48