கின்ஷாஸா உயர் மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயர் கர்தினால் Laurent Monsengwo Pasinya கின்ஷாஸா உயர் மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயர் கர்தினால் Laurent Monsengwo Pasinya 

கர்தினால் Monsengwo - நீதி, மற்றும் அமைதியின் மனிதர்

தெளிவான சிந்தனையும், ஆழ்ந்த ஆன்மீகமும் கொண்டிருந்த கர்தினால் Monsengwo அவர்கள், திருஅவையின் பணிகள் எங்கு தேவைப்பட்டாலும் தன்னையே வழங்க தயாராக இருந்தார் – திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

காங்கோ மக்கள் குடியரசின் கின்ஷாஸா உயர் மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயர் கர்தினால் Laurent Monsengwo Pasinya அவர்கள், நீதி, அமைதி மற்றும் ஒற்றுமையின் மனிதராக, வறியோர் மீது தனிப் பற்று கொண்டவராக வாழ்ந்தார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

ஜூலை 11, கடந்த ஞாயிறன்று, பிரான்ஸ் நாட்டின் மருத்துவமனையொன்றில், கர்தினால் Monsengwo அவர்கள், தன் 81வது வயதில், இறையடி சேர்ந்ததையொட்டி, கின்ஷாஸா உயர் மறைமாவட்டத்தின் இன்றைய பேராயர் கர்தினால் Fridolin Ambongo Besengu அவர்களுக்கு, திருத்தந்தை தன் இரங்கல் செய்தியை அனுப்பியுள்ளார்.

தெளிவான சிந்தனையும், ஆழ்ந்த ஆன்மீகமும் கொண்டிருந்த கர்தினால் Monsengwo அவர்கள், திருஅவையின் பணிகள் எங்கு தேவைப்பட்டாலும் தன்னையே வழங்க தயாராக இருந்த உண்மையான மேய்ப்பராக வாழ்ந்தார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இரங்கல் செய்தி கூறுகிறது.

காங்கோ நாட்டின் திருஅவையில் மட்டுமின்றி, அந்நாட்டின் சமுதாய, அரசியல் தளங்களிலும் கர்தினால் Monsengwo அவர்களின் தாக்கம் உணரப்பட்டதென்று கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரையாடல், மற்றும், ஒப்புரவு ஆகிய வழிகளில், நாட்டை முன்னேற்றுவதற்கு அவர் அயராது உழைத்தார் என்றும் கூறியுள்ளார்.

1939ம் ஆண்டு, அக்டோபர் 7ம் தேதி பிறந்த Laurent Monsengwo அவர்கள், 1963ம் ஆண்டு, தன் 24வது வயதில் அருள்பணியாளராக திருப்பொழிவு பெற்றபின், உரோம் நகரில் Biblicum என்றழைக்கப்படும் பாப்பிறை விவிலிய நிறுவனத்தில் பயின்று, காங்கோ நாட்டில் முனைவர் பட்டம் பெற்ற முதல் அருள்பணியாளராக திகழ்ந்தார்.

1980ம் ஆண்டு, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள் காங்கோ நாட்டில் மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தின்போது, தன் 40வது வயதில், ஆயராக அருள்பொழிவு பெற்ற Monsengwo அவர்கள், 2010ம் ஆண்டு, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால், கர்தினாலாக உயர்த்தப்பட்டார்.

2013ம் ஆண்டு, மார்ச் மாதம், திருஅவையின் தலைவராகப் பொறுப்பேற்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனக்கு ஆலோசனை வழங்க, அவ்வாண்டு ஏப்ரல் மாதம் நிறுவிய 9 பேர் அடங்கிய கர்தினால்கள் குழுவில் ஒருவராக, கர்தினால் Monsengwo அவர்களை நியமித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 July 2021, 15:09