திருத்தந்தை பிரான்சிஸ், Edgar Morin  திருத்தந்தை பிரான்சிஸ், Edgar Morin  

Edgar Morinன் நூறாவது பிறந்த நாளுக்கு திருத்தந்தை செய்தி

ஜூலை 08, வருகிற வியாழனன்று, தனது நூறாவது பிறந்த நாளைச் சிறப்பிக்கும் Edgar Morin அவர்கள், 2019ம் ஆண்டு ஜூன் 27ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்துள்ளார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பிரான்ஸ் நாட்டு சமூகவியலாளர், மற்றும், மெய்யியலாளரான Edgar Morin அவர்களின் நூறாவது பிறந்த நாளையொட்டி, ஜூலை 02, இவ்வெள்ளியன்று, யுனெஸ்கோ அமைப்பு நடத்திய மெய்நிகர் கூட்டத்திற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நல்வாழ்த்து செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

திருத்தந்தையின் பெயரில், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் கையெழுத்திட்ட இச்செய்தியை, யுனெஸ்கோ அமைப்பில், திருப்பீடத்தின் நிரந்தரப் பிரதிநிதியாகப் பணியாற்றும், பேராயர் Francesco Follo அவர்கள், இந்த மெய்நிகர் கூட்டத்தில் வாசித்தார்.

Edgar Morin அவர்கள், தனக்கு வழங்கியுள்ள இந்த நீண்ட ஆயுளில், மாறிவரும் இவ்வுலகத்தின் போக்குகளை ஆழமாக ஆய்வுசெய்து, இந்த மாற்றங்கள் கொணரும் நம்பிக்கைகள், மற்றும், ஆபத்துக்கள் குறித்து உலகினருக்கு எடுத்துரைத்துள்ளதற்கு, திருத்தந்தை, தன் நன்றியைத் தெரிவித்துள்ளார்.

அறிவியல், மற்றும், தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பற்றிய கண்ணோட்டத்தில், மனித சமுதாயத்திற்கு வழங்கியுள்ள மாபெரும் வாய்ப்புக்களைக் குறிப்பிட்டுள்ளதோடு, பேரிடர்களைத் தவிர்ப்பதற்கு, நன்னெறி, மற்றும், அறிவுசார்ந்த வளர்ச்சி அவசியம் என்பதை Morin அவர்கள் வலியுறுத்தியுள்ளார் என, திருத்தந்தையின் செய்தி கூறுகிறது.

பண்பாடுள்ள ஒரு சமுதாயத்தை உருவாக்கும் திட்டங்களில், பணத்தின் வல்லமை அல்ல, மாறாக, மனிதர் மையப்படுத்தப்படுவது முக்கியம் என்பதை மோரின் அவர்கள் வலியுறுத்தியுள்ளார் எனவும், இவர், உலகளாவிய கல்விக்கொள்கையை உருவாக்கும் திட்டத்தில் ஆர்வமாக உள்ளார் எனவும், திருத்தந்தையின் செய்தி மேலும் கூறுகிறது.

ஜூலை 08, வருகிற வியாழனன்று, தனது நூறாவது பிறந்த நாளைச் சிறப்பிக்கும் Edgar Morin அவர்கள், 2019ம் ஆண்டு ஜூன் 27ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, வத்திக்கானில் சந்தித்துப் பேசியுள்ளார். அச்சமயத்தில் அவர், இறைவா உமக்கே புகழ் எனப்படும் Laudato si’ திருத்தந்தையின் திருமடல், காலத்திற்கேற்றது என்று பாராட்டிப் பேசியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 July 2021, 15:41