திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ் 

கோவிட்-19 நோயாளிகளுக்காக திருத்தந்தை இறைவேண்டல்

ஜூலை 14ம் தேதி நிலவரப்படி, அர்ஜென்டீனாவில் கோவிட்-19 பெருந்தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தைத் தாண்டியுள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அர்ஜென்டீனா நாட்டில், கோவிட்-19 பெருந்தொற்று நோயாளிகளுக்காக, தினமும் செபமாலை பக்திமுயற்சி ஒன்றைத் தொடங்கியுள்ள "Entretiempo" என்ற இயக்கத்திற்கு, நன்றி, மற்றும், ஊக்கமூட்டும் வார்த்தைகள் அடங்கிய மின்னஞ்சல் ஒன்றை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ளார்.

பெருந்தொற்று நோயாளிகள் துன்புறும் நிலைகண்டு, எவ்வித முன்னேற்பாடும் இல்லாமல், திடீரென்று தாங்கள் துவக்கியுள்ள இந்த பக்திமுயற்சி பற்றி, Entretiempo" இயக்கத்தின் தலைவர் Rodrigo Fernández Madero அவர்கள், ஜூலை 27, இச்செவ்வாய் நண்பகல் வேளையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பினார்.

அந்த மடல் தனக்கு கிடைத்த அடுத்த 24 மணி நேரத்திற்குள்ளாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் கைப்பட பதில் மடல் ஒன்றை எழுதி, அதை மின்னஞ்சல் வழியாக அனுப்பியுள்ளார்.

என் அன்புக்குரிய சகோதரரே, உங்களது மின்னஞ்சலுக்கு நன்றி, நான் உங்களை ஆசீர்வதிக்கிறேன், செபமாலை செபிப்பதற்காக நன்றிகள் பல. உங்களுக்கும், Entretiempo குழுவிலுள்ள அனைவருக்கும் எனது வாழ்த்தும், ஆசீரும். உங்களது நற்பணியைத் தொடர்ந்தாற்றுங்கள் என்று, திருத்தந்தை அம்மடலில் எழுதியுள்ளார்.

ஜூலை 14ம் தேதி நிலவரப்படி, அர்ஜென்டீனாவில் கோவிட்-19 பெருந்தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தைத் தாண்டியது. அந்நாட்டில் இவ்வாண்டு ஏப்ரல், மே ஆகிய மாதங்களுக்கிடையில் பெருந்தொற்று தாக்குதல் உச்சத்தை எட்டியது.   

இந்த ஜூலை மாதம் 3ம் தேதி Entretiempo இயக்கத்தைச் சேர்ந்த இருவர் கொரோனா பெருந்தொற்றுக் கிருமியால் தாக்கப்பட்டதையடுத்து, அன்று முதல் தினமும் இரவு பத்து மணிக்கு மெய்நிகர் வழியாக செபமாலை பக்திமுயற்சியை இந்த அமைப்பினர் நடத்துகின்றனர். தொடக்கத்தில் ஏறத்தாழ நூறு பேர் செபித்தனர். தற்போது 250க்கும் மேற்பட்டோர் செபித்து வருகின்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 July 2021, 14:22