முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்  

ஜெர்மன் தலத்திருஅவை - முன்னாள் திருத்தந்தை கவலை

திருஅவையின் சாட்சியப்பணிகளைப்பற்றி பேசாமல், கட்டமைப்பை மட்டும் வலியுறுத்தி, கருத்துக்களை வெளியிட்டுவந்தால், ஜெர்மன் திருஅவையிலிருந்து வெளியேறும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் - முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஜெர்மன் தலத்திருஅவை நிறுவனங்களில் நம்பிக்கை குறைந்துவருவதைக் குறித்து, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், Herder Korrespondenz என்ற ஜெர்மன் மாத இதழுக்கு, எழுத்து வடிவில் வழங்கிய பேட்டியொன்றில், தன் கவலையை வெளியிட்டுள்ளார்.

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், இவ்வாண்டு ஜூன் மாதம், தன் அருள்பணித்துவ வாழ்வைத் துவங்கி 70 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதையடுத்து, Herder Korrespondenz மாத இதழ் அவரிடம் எழுத்துவடிவில் மேற்கொண்ட ஒரு பேட்டியில், 'கட்டமைக்கப்பட்ட திருஅவை' என்ற கருத்தில் தன் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இம்மாத இதழில் பணிபுரியும் Tobias Winstel அவர்களுடன் திருத்தந்தை மேற்கொண்ட இந்த பேட்டியில், ஜெர்மன் நாட்டில் திருஅவையின் பெயரால் இயங்கும் பல்வேறு மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் பிறரன்பு நிறுவனங்களில் முக்கியமான பொறுப்பில் உள்ள பலர், திருஅவை ஆற்றும் பணிகளின் இலக்கு என்ன என்பதை புரிந்துகொள்ளாமல் இருப்பது, திருஅவையின் சாட்சியப்பணிக்கு ஆபத்தாக உள்ளது என்று கூறியுள்ளார்.

'கட்டமைக்கப்பட்ட திருஅவை' என்ற பொருளில் பயன்படுத்தப்படும் “Amtskirche” என்ற ஜெர்மன் சொல்லைப்பற்றி தன் பேட்டியில் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட முன்னாள் திருத்தந்தை, கத்தோலிக்கத் திருஅவை, பல்வேறு கட்டமைப்புக்களுடன் செயல்பட்டாலும், அந்த கட்டமைப்புக்களின் உதவியுடன் செய்யப்படும் பணிகளே முன்னிலைப்படுத்தப்படவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜெர்மன் தலத்திருஅவையில் பொறுப்பில் இருப்போர், திருஅவையின் உள்ளத்தையும் ஆன்மீகத்தையும் வெளிப்படுத்தும் சாட்சியப்பணிகளைப்பற்றி பேசாமல், கட்டமைப்பை மட்டும் வலியுறுத்தி, தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வந்தால், திருஅவையிலிருந்து வெளியேறும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கவலையை வெளியிட்டுள்ளார் முன்னாள் திருத்தந்தை.

தான் பணியிலிருந்து விலகுவதற்கு முன், இறுதி முறையாக 2011ம் ஆண்டில் ஜெர்மன் நாட்டிற்கு திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட வேளையில், Freiburg எனுமிடத்தில் வழங்கிய ஓர் உரையை, தன் பேட்டியில், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் நினைவுகூர்ந்தார்.

ஜெர்மன் தலத்திருஅவை, கட்டமைப்பு மற்றும் நிறுவனமயமாக்கல் ஆகிய எண்ணங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவதைப்பற்றியும், அதனால், இறைவனின் அழைப்புக்கு செவிமடுக்க இயலாமல் இருப்பது குறித்தும், தன் 2011ம் ஆண்டு உரையில் குறிப்பிட்டதை தன் பேட்டியில் நினைவுகூர்ந்தார், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

ஒவ்வொரு நாள் வாழ்விலும் வெளிப்படும் மத நம்பிக்கையை புறந்தள்ளிவிட்டு, கோட்பாடுகளை மட்டும் தூய்மையானதாக வலியுறுத்தும்போது, அது, மத நம்பிக்கையை இழப்பதற்கும் வழிவகுக்கிறது என்று, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 July 2021, 13:30