ஜூலை 29, இவ்வியாழன் இறையடி சேர்ந்த கர்தினால் Albert Vanhoye ஜூலை 29, இவ்வியாழன் இறையடி சேர்ந்த கர்தினால் Albert Vanhoye  

கர்தினால் Vanhoye மறைவுக்கு திருத்தந்தை இரங்கல்

1963ம் ஆண்டில் உரோம் பாப்பிறை விவிலிய நிறுவனத்தில் பேராசிரியராகப் பணியைத் தொடர்ந்த கர்தினால் Albert Vanhoye அவர்கள், அந்நிறுவனத்தின் தலைவராக, 1984ம் ஆண்டு முதல், 1990ம் ஆண்டுவரை பணியாற்றினார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஜூலை 29, இவ்வியாழன் நண்பகல்வேளையில், உரோம் நகரின், பீட்டர் கனிசியுஸ் இயேசு சபை இல்லத்தில், தன் 98வது வயதில் இறைவனடி சேர்ந்த, இயேசு சபை கர்தினால் Albert Vanhoye அவர்களின் ஆன்மா நிறையமைதி அடைய இறைவேண்டல் செய்வதாகவும், அவர் திருஅவைக்கு ஆற்றியுள்ள சிறப்பான பணிகளுக்கு நன்றி கூறுவதாகவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

உரோம் நகரில் இயேசு சபையினரின் பீட்டர் கனிசியுஸ் இல்லத்தின் தலைவர் அருள்பணி Manuel Morujao அவர்களுக்கு, திருத்தந்தை அனுப்பியுள்ள இரங்கல் செய்தியில், இவ்வில்லத்தினருக்கும், இயேசு சபையினர் அனைவருக்கும், கர்தினால் Vanhoye அவர்களின் குடும்பத்தினருக்கும் தன் தோழமையுணர்வைத் தெரிவித்துள்ளார்.

கர்தினால் Vanhoye அவர்கள், ஆண்டவருக்கும், திருஅவைக்கும் மிகுந்த அர்ப்பணத்தோடும், அன்போடும் ஆற்றியுள்ள பணிகளை மனதாரப் பாராட்டுகிறேன் என்றுரைத்துள்ள திருத்தந்தை, ஆர்வமுள்ள துறவியாக, புனித இஞ்ஞாசியாரின் ஆன்மீக மகனாக, மிகச் சிறந்த ஆசிரியராக, விவிலிய வல்லுனராக, பாப்பிறை விவிலிய நிறுவனத்தின் மதிப்புமிக்க தலைவராக, திருப்பீட தலைமையகத்தின் சில துறைகளில் ஞானத்தோடு ஒத்துழைத்தவராக.. இவ்வாறு அவர் ஆற்றியுள்ள சிறப்பான பணிகளை நன்றியோடு நினைவுகூர்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

நற்செய்தியை பேரார்வத்தோடு போதிப்பதில் இவருக்கு இருந்த ஆர்வத்தை நினைத்துப் பார்க்கிறேன் என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, கர்தினால் Vanhoye அவர்களின் இறுதிக்காலத்தில் அன்போடு பணியாற்றிய அனைவரையும் சிறப்பாக நினைக்கின்றேன் என்று கூறியுள்ளார்.

கர்தினால் Albert Vanhoye

பிரான்ஸ் நாட்டின் Hazebrouckல் 1923ம் ஆண்டில் பிறந்த கர்தினால் Albert Vanhoye அவர்கள், 1941ம் ஆண்டு இயேசு சபையில் சேர்ந்தார். 1954ம் ஆண்டில் அருள்பணித்துவ வாழ்வுக்குத் திருநிலைப்படுத்தப்பட்ட இவர், உரோம் இயேசு சபையினரின் பாப்பிறை விவிலிய நிறுவனத்தில், முதுகலைபட்டம் பெற்றார். பின்னர் இவர், அந்நிறுவனத்தில், எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்து, முனைவர் பட்டமும் பெற்றார்.

1963ம் ஆண்டில் உரோம் பாப்பிறை விவிலிய நிறுவனத்தில் பேராசிரியராகப் பணியைத் தொடர்ந்த கர்தினால் Albert Vanhoye அவர்கள், அந்நிறுவனத்தின் தலைவராக, 1984ம் ஆண்டு முதல், 1990ம் ஆண்டுவரை பணியாற்றினார். இவர் தன் பேராசிரியர் பணியில், 23 முனைவர் பட்ட ஆய்வுக்கட்டுரைகளை வழிநடத்தியுள்ளார்.

பாப்பிறை விவிலியக்குழுவின் செயலராகப் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ள இவர், திருப்பீடத் தலைமையகத்தின் பல்வேறு துறைகளில் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். இவர், 2006ம் ஆண்டில் கர்தினாலாக உயர்த்தப்பட்டார்.

அடக்கச்சடங்கு திருப்பலி

இயேசு சபை கர்தினால் Albert Vanhoye அவர்களது அடக்கச்சடங்கு திருப்பலியை, ஜூலை 31, இச்சனிக்கிழமை உள்ளூர் நேரம் காலை 11 மணிக்கு, வத்திக்கானின் தூய பேதுரு பெருங்கோவிலில், கீழைவழிபாட்டுமுறை பேராயத் தலைவர் கர்தினால் லெயோனார்தோ சாந்த்ரி அவர்கள் தலைமையேற்று நிறைவேற்றுவார்.

கர்தினால் Vanhoye அவர்களின் இறப்போடு, திருஅவையில் மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை 220 ஆகவும், இவர்களில் புதிய ஒரு திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய, எண்பது வயதுக்குட்டவர்களின் எண்ணிக்கை 123 ஆகவும் மாறின.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 July 2021, 13:55