பகிர்பவை எல்லாம் பலுகுகின்றன என்பது உண்மை

இயேசு, ஒன்றுமில்லாமையிலிருந்து, ஐயாயிரம் பேருக்கு, உணவை உருவாக்கவில்லை, மாறாக, ஐந்து அப்பங்கள், மற்றும் இரண்டு மீன்களை அடிப்படையாக வைத்தே, இந்த புதுமையை ஆற்றினார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

நாம் நம்மிடம் இருப்பதை மற்றவர்களுடன் பகிரும்போது, இறைவன் அவற்றைப் பலுகிப் பெருகச் செய்கிறார் என, ஞாயிறு நற்செய்தி வாசகத்தை (யோவா 6:1-15) மேற்கோள்காட்டி, தன் நண்பகல் மூவேளை செப உரையை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

5 அப்பங்களையும் 2 மீன்களையும் பலுகச்செய்து, ஐயாயிரம் பேருக்கு இயேசு உணவளித்த புதுமையைக் குறித்து, ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதுமை எத்தகைய சுழலில் எவ்வாறு இடம்பெற்றது என்பது குறித்து சிந்திப்பது நலமாக இருக்கும் என தனது விளக்கத்தைத் துவக்கினார்.

இயேசு, ஒன்றுமில்லாமையிலிருந்து, ஐயாயிரம் பேருக்கு, உணவை உருவாக்கவில்லை,  மாறாக, தன்னிடம், சீடர்கள் கொணர்ந்த ஐந்து அப்பங்கள், மற்றும் இரண்டு மீன்களை அடிப்படையாக வைத்தே, இந்தப் புதுமையை ஆற்றினார் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவரிடம் தரப்பட்டது, எண்ணிக்கையில், மிகச்சிறிதாக இருந்தாலும், இயேசுவுக்கு, அதுவே போதுமானதாக இருந்தது, என எடுத்துரைத்தார்.

ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் வைத்திருந்த சிறுவனின் இடத்தில் நம்மை நிறுத்திப் பார்ப்போம் என்ற அழைப்பை முன்வைத்த திருத்தந்தை, சிறுவன், தான் சாப்பிட வீட்டிலிருந்து கொண்டுவந்தது அனைத்தையும், சீடர்கள் அவனிடம் இருந்து கேட்பது, மனித அறிவுக்கு நியாயமற்றதாக தெரியலாம், ஆனால், இறைவனுக்கல்ல, ஏனெனில் அதன் வழியே, அனைவருக்கும் உணவு வழங்க முடிந்தது என விளக்கினார்.

நாம் இயேசுவின் முன் நம்மிடம் இருக்கும் சிறு வளங்களையும் பகிரும்போது, அவற்றை, அவர்  பலுகிப் பெருகச் செய்கிறார், இதைத்தான், நாம், ஆபிரகாமிலிருந்து, அன்னை மரியா வரையும், இந்த புதுமையில் வரும் சிறுவனிலும், காண்கிறோம் என எடுத்துரைத்து, அனைத்தையும் மேலும் மேலும் குவிக்க விரும்பும் மனித இயல்புகளுக்கு மத்தியில், இருப்பதையும் பகிரும்படி கேட்பது, இயேசுவின் செயலாக உள்ளது என்றார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அப்பம் பலுகியதில் அல்ல, மாறாக, தன்னிடம் இருந்ததையும் கொடுத்து அன்பை அதிகரித்ததன் வழியாகவே, இயேசுவால், அந்தப் புதுமையை நிகழ்த்த முடிந்தது என உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றும் பொருட்களை பெரிய அளவில் தயாரிப்பதில் அல்ல, மாறாக, அவற்றைப் பகிர்வதிலேயே, பிரச்சனைக்களுக்குரிய தீர்வு அடங்கியுள்ளது என விளக்கமளித்தார்.

நாம் வளங்களை சரியாகப் பகிராமையால் ஏற்படும் பசிச் சாவுகள் குறித்த நினைவுகள் நமக்கு வருகின்றன என்றுரைத்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றைய உலகில், போதிய சத்துணவின்றி, ஒவ்வொரு நாளும், 5 வயதிற்குட்பட்ட ஏழாயிரம் குழந்தைகள் வரை உயிரிழந்து வருவது குறித்த ஆழந்த கவலையையும் வெளியிட்டார்.

இத்தகைய துயர் நிலைகளைப் பார்க்கும் நாம், இன்றைய நற்செய்தியில் காணும் சிறுவனைப்போல் பகிர முன்வரும்போது, அதாவது, நம் திறமைகளையும், உடைமைகளையும், இயேசுவோடும், மற்றவர்களோடும், பகிர முன்வரும்போது, அவையனைத்தும், இறைவனால் பலுகிப் பெருகவைக்கப்படும் என, மேலும் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 July 2021, 12:40

மூவேளை செபம் என்பது, கடவுள் மனுவுரு எடுத்த பேருண்மையை நினைவுகூர்ந்து ஒரு நாளில் மூன்றுமுறை : மூவேளை செபத்திற்கென மணி ஒலிக்கும் காலை 6 மணி, நண்பகல் மற்றும் மாலை 6 மணியளவில் செபிக்கும் செபமாகும். ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார் எனத் தொடங்கும் மூவேளை செபத்தின் முதல் வரியிலிருந்து, மூவேளை என்ற பெயர் வந்துள்ளது. இந்த முதல்வரியானது, இயேசு கிறிஸ்து மனுஉரு எடுத்தது மற்றும் மூன்று முறை அருள் நிறைந்த மரியே எனச் சொல்லும் எளிய பகுதியை உள்ளடக்கியது. இந்தச் செபம்,  புனித பேதுரு வளாகத்தில், ஞாயிறு மற்றும் பெருவிழா நாள்களின் நண்பகலில்  திருத்தந்தையால் சொல்லப்படுகின்றது. மூவேளை செபத்தைச் சொல்வதற்கு முன்னர், திருத்தந்தை,  அந்நாளைய வாசகங்களிலிருந்து தூண்டுதல்பெற்ற சிறு உரையும் நிகழ்த்துவார். அதைத் தொடர்ந்து திருப்பயணிகளை வாழ்த்துவார். கிறிஸ்துவின் உயிர்ப்பு முதல், தூய ஆவியார் பெருவிழா வரை,  மூவேளை செபத்திற்குப் பதிலாக அல்லேலூயா வாழ்த்தொலி செபம் செபிக்கப்படுகிறது. இச்செபம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நினைவாகச் செக்கப்படுகிறது. இச்செபத்தின் இறுதியில், தந்தைக்கும் மகனுக்கும், தூய ஆவியாருக்கும்... மூன்று முறை சொல்லப்படுகின்றது.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >