தேடுதல்

நம்மைக் கடந்துசெல்லும் கடவுளை அடையாளம் கண்டு கொள்வது

திருத்தந்தை : இயேசுவின் சொந்த ஊரைச் சேர்ந்தவர்கள், அவரைப்பற்றி தெரிந்து வைத்திருந்தார்களேயொழிய, அவர் யார் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஜூலை மாதம் 4ம் தேதி, ஞாயிற்றுக்கிழமையன்று, உரோம் நகரில் கோடைக்கால வெயில் சிறிது உக்கிரமாகவே இருந்தபோதிலும், பெரிய அளவில் திருப்பயணிகள் கூட்டம், வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தை நிறைத்திருக்க, இஞ்ஞாயிறு திருப்பலி நற்செய்தி வாசகத்தை மையப்படுத்தி, தன் நண்பகல் மூவேளை செப உரையை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசுவின் ஊர் மக்கள் அவர் மீது நம்பிக்கையின்றி இருந்ததை, இன்றைய நற்செய்தி வாசகம் (மாற் 6:1-6) நமக்குக் காட்டுகின்றது என தன் மூவேளை செபஉரையைத் துவக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வேறு இடங்களில் போதித்துவிட்டுச் சொந்த ஊருக்குத் திரும்பிய இயேசு, தொழுகைக்கூடத்தில் கற்பிக்கத் துவங்கியபோது, மக்களிடம் எழுந்த பதிலிருப்பைக் குறித்து தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

“இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன? இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே!' என ஊர்க்காரர்கள் இயேசுவைப்பற்றிப் பேசி, அவரை ஏற்றுக்கொள்ளத் தயங்கும் நிலையில், “சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்” என இயேசு பதிலுரைப்பதை சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசுவின் சொந்த ஊரைச் சேர்ந்தவர்கள், அவரைப்பற்றி தெரிந்து வைத்திருந்தார்களேயொழிய, அவரைப் புரிந்துகொள்ளவில்லை என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒருவரைப்பற்றி நாம் பலவிடயங்களைத் தெரிந்து வைத்திருந்தாலும், அவரின் தனித்தன்மையை அடையாளம் கண்டுகொண்டு ஏற்கிறோமா என்பது முக்கியத்துவம் நிறைந்தது என  விளக்கிக் கூறினார்.

ஒருவரைப்பற்றி எல்லாம் தெரியுமென நாம் எண்ணிக்கொண்டு, அவரைக்குறித்த முற்சார்பு எண்ணங்களை நமக்குள் வளர்த்துக் கொள்வதைப்போல், இயேசுவின் காலத்தில் அவரது ஊர்மக்களும், 30 ஆண்டுகளாக தங்களுக்குத் தெரிந்த இயேசுவைப்பற்றி மேலோட்டமாக தெரிந்திருந்தார்களேயொழிய, அவர் யார் என்பதை அவர்கள் புரிந்துவைத்திருக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.

நம் தொடர் பழக்கவழக்கங்கள் தரும் சுகத்திற்கும், முற்சார்பு எண்ணங்களின் ஆதிக்கத்திற்கும் நாம் முதலிடம் கொடுக்கும்போது, புதியவனவற்றை ஏற்பதற்கு திறந்தமனம் கொண்டிருப்பது சிரமமாகின்றது என எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பலவேளைகளில், மாற்றத்தைக் கொணரும் முயற்சிகளுக்கு நாம் தயங்குவதால், பழைய முற்சார்பு எண்ணங்களிலேயே தொடர ஆவல் கொள்கின்றோம், என எடுத்துரைத்தார்.

இயேசு தரும் புதியவைகளுக்கும், அவை தரும் ஆச்சரியங்களுக்கும் நாம் முன்வரவில்லையென்றால், கடவுளுடனான நம் உறவு சோர்வுற்றதாய் மடிந்துவிடும் ஆபத்து உள்ளது என்பதையும் வலியுறுத்திக் கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவை அவரின் சொந்த ஊர் மக்கள் ஏற்றுக்கொள்ளாததற்கு முக்கிய காரணம், இறைவன் மனுவுரு எடுத்ததை, குறிப்பாக, இறைவனை ஒரு மனித உடலுக்குள் குறுக்க முடியுமென்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாததேயாகும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

கடவுள் மனுவுருவானவர், ஏழ்மையானவர், கனிவானவர், நம் வாழ்வில் அவர் நுழைகிறார், என்பதை உணராமல் நாம் செயல்படும்போது, அவர் நம்மைக் கடந்து செல்வதை நம்மால் அடையாளம் கண்டுகொள்ள முடியாது என்பதையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.

நம் தினசரி வாழ்வில் எளிமையுடன் மறைந்திருந்து செயலாற்றும் இறைவனை வரவேற்க திறந்த உள்ளம் கொண்டவர்களாக, நம் முற்சார்பு எண்ணங்களிலிருந்து விடுதலைப் பெற்றவர்களாக செயல்பட, அன்னை மரியா நமக்கு உதவுவாராக என வேண்டி, தன் மூவேளை செப உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 July 2021, 12:52

மூவேளை செபம் என்பது, கடவுள் மனுவுரு எடுத்த பேருண்மையை நினைவுகூர்ந்து ஒரு நாளில் மூன்றுமுறை : மூவேளை செபத்திற்கென மணி ஒலிக்கும் காலை 6 மணி, நண்பகல் மற்றும் மாலை 6 மணியளவில் செபிக்கும் செபமாகும். ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார் எனத் தொடங்கும் மூவேளை செபத்தின் முதல் வரியிலிருந்து, மூவேளை என்ற பெயர் வந்துள்ளது. இந்த முதல்வரியானது, இயேசு கிறிஸ்து மனுஉரு எடுத்தது மற்றும் மூன்று முறை அருள் நிறைந்த மரியே எனச் சொல்லும் எளிய பகுதியை உள்ளடக்கியது. இந்தச் செபம்,  புனித பேதுரு வளாகத்தில், ஞாயிறு மற்றும் பெருவிழா நாள்களின் நண்பகலில்  திருத்தந்தையால் சொல்லப்படுகின்றது. மூவேளை செபத்தைச் சொல்வதற்கு முன்னர், திருத்தந்தை,  அந்நாளைய வாசகங்களிலிருந்து தூண்டுதல்பெற்ற சிறு உரையும் நிகழ்த்துவார். அதைத் தொடர்ந்து திருப்பயணிகளை வாழ்த்துவார். கிறிஸ்துவின் உயிர்ப்பு முதல், தூய ஆவியார் பெருவிழா வரை,  மூவேளை செபத்திற்குப் பதிலாக அல்லேலூயா வாழ்த்தொலி செபம் செபிக்கப்படுகிறது. இச்செபம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நினைவாகச் செக்கப்படுகிறது. இச்செபத்தின் இறுதியில், தந்தைக்கும் மகனுக்கும், தூய ஆவியாருக்கும்... மூன்று முறை சொல்லப்படுகின்றது.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >