ஓய்வெடுக்கவும் இரக்கம் காட்டவும் வேண்டிய வாழ்க்கைக் கூறுகள்

எல்லாமே நாம்தான் என்றெண்ணி, ஓய்வேயின்றி, ஓடிக்கொண்டிருக்கும்போது, இயேசுவையே மறந்துவிடும் ஆபத்து உள்ளது - திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஜூலை 18, இஞ்ஞாயிறு வழங்கப்பட்டுள்ள நற்செய்தியை மையப்படுத்தி, ஓய்வெடுக்க வேண்டியது, மற்றும் இரக்கம்காட்ட வேண்டியதன் அவசியம் குறித்து, மூவேளை செபவுரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த விசுவாசிகளுக்கு, அந்நாளின் நற்செய்தி வாசகம் (மாற் 6:30-34) குறித்து மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நாள் நற்செய்தி வழங்கும் வாழ்வின் இரு முக்கியக் கூறுகள் குறித்து விளக்கினார்.

திருத்தூதர்கள் இயேசுவிடம் திரும்பிவந்து, தாங்கள் செய்தவை கற்பித்தவை எல்லாவற்றையும் தெரிவித்தபோது, அவர்களை நோக்கி, “நீங்கள் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள்” என இயேசு கூறிய வார்த்தைகளை சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல விடயங்களில் நம்மை இழந்து, ஓய்வைக் குறித்து நாம் கவலையின்றி இருப்பதால் வரும் ஆபத்து பற்றி இயேசு இங்கு நமக்கு சொல்லித்தருகிறார் என்று கூறினார்.

திருஅவையிலும் இது பலவேளைகளில் இடம்பெறுகிறது, எல்லாமே நாம்தான் என்றெண்ணி, ஓய்வேயின்றி, ஓடிக்கொண்டிருக்கும்போது, இயேசுவைக் குறித்துக் கவலைப்படாமல் அவரையே மறந்துவிடும் ஆபத்து உள்ளது என்றுரைத்த திருத்தந்தை, ஓய்வெடுப்பது உடலுக்கு மட்டுமல்ல, இதயத்திற்கும் தேவை என்பதையும் வலியுறுத்தி, அந்த ஒய்வு, அமைதியில் நம்மை செபத்தை நோக்கி அழைத்துச்செல்ல வேண்டும் என்பதையும் எடுத்துரைத்தார்.

நாம் தினசரி பணிகளிலிருந்து ஓய்வெடுத்து மற்றவர்கள் குறித்து நம் பார்வையை திருப்பவும், மனதிற்குள் மௌனச் சுழல்களை வளர்க்கவும், இயற்கை குறித்து தியானிக்கவும், இறைவனுடன் கொண்டுள்ள உரையாடலில் நம்மை புதுப்பிக்கவும், தன் செயல் வழியாகவும் நமக்குக் கற்றுத்தரும் இயேசு, மற்றவர் மீது இரக்கத்துடன் செயல்படவேண்டிய வாழ்க்கை பாடத்தையும் நமக்கு சொல்லித்தருகிறார் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தூதர்களை ஓய்வெடுக்க அனுப்பிய இயேசு, ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்த மக்கள் மீது பரிவுகொண்டு அவர்களுக்கு பலவற்றைக் கற்பித்ததை நாம் இன்றைய நற்செய்தியில் காண்கிறோம் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மக்களின் தேவை குறித்து அக்கறையுள்ளவராக இயேசு இருந்ததை இது காண்பிக்கிறது என மேலும் எடுத்துரைத்தார்.

உண்மையாகவே ஓய்வெடுப்பது என்ன என்பது குறித்து நம் கற்றுக்கொள்ளும்போது, நாம் இரக்கமுடையவர்களாகவும் மாறுகிறோம், ஏனெனில், ஓய்வுநேரத்தில், நாம், இறைவனுடன் கொள்ளும் தொடர்பில், நம் உணர்வுகள் மரத்துப்போகாமல், உயிர்துடிப்புடையதாக மாறி, ஒய்வு, ஆழ்ந்த தியானம், மற்றும் இரக்கம் நிறைந்ததாக மாறுகிறோம் எனவும் எடுத்துரைத்து, இந்த கோடை ஓய்வுகாலத்தை அதற்கென பயன்படுத்துவோம் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 July 2021, 13:11

மூவேளை செபம் என்பது, கடவுள் மனுவுரு எடுத்த பேருண்மையை நினைவுகூர்ந்து ஒரு நாளில் மூன்றுமுறை : மூவேளை செபத்திற்கென மணி ஒலிக்கும் காலை 6 மணி, நண்பகல் மற்றும் மாலை 6 மணியளவில் செபிக்கும் செபமாகும். ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார் எனத் தொடங்கும் மூவேளை செபத்தின் முதல் வரியிலிருந்து, மூவேளை என்ற பெயர் வந்துள்ளது. இந்த முதல்வரியானது, இயேசு கிறிஸ்து மனுஉரு எடுத்தது மற்றும் மூன்று முறை அருள் நிறைந்த மரியே எனச் சொல்லும் எளிய பகுதியை உள்ளடக்கியது. இந்தச் செபம்,  புனித பேதுரு வளாகத்தில், ஞாயிறு மற்றும் பெருவிழா நாள்களின் நண்பகலில்  திருத்தந்தையால் சொல்லப்படுகின்றது. மூவேளை செபத்தைச் சொல்வதற்கு முன்னர், திருத்தந்தை,  அந்நாளைய வாசகங்களிலிருந்து தூண்டுதல்பெற்ற சிறு உரையும் நிகழ்த்துவார். அதைத் தொடர்ந்து திருப்பயணிகளை வாழ்த்துவார். கிறிஸ்துவின் உயிர்ப்பு முதல், தூய ஆவியார் பெருவிழா வரை,  மூவேளை செபத்திற்குப் பதிலாக அல்லேலூயா வாழ்த்தொலி செபம் செபிக்கப்படுகிறது. இச்செபம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நினைவாகச் செக்கப்படுகிறது. இச்செபத்தின் இறுதியில், தந்தைக்கும் மகனுக்கும், தூய ஆவியாருக்கும்... மூன்று முறை சொல்லப்படுகின்றது.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >