புனித பேதுரு கல்லறைக் கோவிலில் செபிக்கும் திருத்தந்தை, லெபனான் கிறிஸ்தவத் தலைவர்கள் புனித பேதுரு கல்லறைக் கோவிலில் செபிக்கும் திருத்தந்தை, லெபனான் கிறிஸ்தவத் தலைவர்கள் 

லெபனான் அமைதிக்கென வத்திக்கானில் இறைவேண்டல் நாள்

"அமைதிக்கென ஆண்டவராகிய கடவுள் திட்டங்கள் வகுத்துள்ளார்: லெபனான் அமைதிக்கென இணைவோம்" என்ற மையக்கருத்துடன், ஓர் இறைவேண்டல் நாள், வத்திக்கானில் நடைபெற்றது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

"அமைதிக்கென ஆண்டவராகிய கடவுள் திட்டங்கள் வகுத்துள்ளார்: லெபனான் அமைதிக்கென இணைவோம்" என்ற மையக்கருத்துடன், ஓர் இறைவேண்டல் நாள், ஜூலை 1, இவ்வியாழனன்று, வத்திக்கானில் நடைபெற்றது.

இந்த இறைவேண்டல் நாளுக்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்த அழைப்பை ஏற்று, வத்திக்கானுக்கு வருகைதந்த லெபனான் நாட்டின் அனைத்து கிறிஸ்தவ சபைகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும், வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லத்தில், காலை 8.30 மணியளவில் வரவேற்கப்பட்டனர்.

காலை 9 மணியளவில், புனித பேதுரு பெருங்கோவிலுக்கு திருத்தந்தையோடு சென்ற பிரதிநிதிகள், புனித பேதுரு கல்லறைக் கோவிலில் மெழுகுதிரிகளை ஏற்றிவைத்து, மெளனமாக செபித்தபின், அனைவரும் இணைந்து, 'விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே' என்ற செபத்தை இணைந்து செபித்தனர்.

இதைத் தொடர்ந்து, 10 மணியளவில், வத்திக்கான் கிளமெந்தீனா அரங்கத்திற்குச் சென்ற பிரதிநிதிகள், அங்கு, மூடிய கதவுகளுக்குப் பின், திருத்தந்தையைச் சந்தித்து, கலந்துரையாடினர்.

மதியம் 1 மணியளவில், திருத்தந்தையும், லெபனான் கிறிஸ்தவத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளும் சாந்தா மார்த்தா இல்லத்தில் மதிய உணவருந்தியபின், மீண்டும் பிற்பகல் 4 மணியளவில், கிளமெந்தீனா அரங்கத்தில், மூடிய கதவுகளுக்குப் பின், தங்கள் சந்திப்பைத் தொடர்ந்தனர்.

மாலை 6 மணிக்கு, புனித பேதுரு பெருங்கோவிலில், நடைபெற்ற கிறிஸ்தவ ஒன்றிப்பு இறைவேண்டல் வழிபாட்டுடன், இந்த ஒருநாள் இறைவேண்டல் நிகழ்வு, நிறைவுபெற்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 July 2021, 13:14