காணொளிச் செய்தி வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம் காணொளிச் செய்தி வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம் 

'யோவான் 17 இயக்கம்' - திருத்தந்தையின் காணொளிச்செய்தி

யோவான் 17 இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், ஒரு விருந்து, ஐஸ் கிரீம் அல்லது காபி ஆகியவற்றை சேர்ந்து உண்ணும் வேளையில், அவர்களுக்குள் நிலவும் உடன்பிறந்த உணர்வை மீண்டும் கண்டுகொள்பவர்கள் – திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அன்பு இவ்வுலகை மாற்றும் வலிமைகொண்டது, ஆனால், அந்த மாற்றம், முதலில் நம்மிடமிருந்து துவங்கவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு அனுப்பிய ஒரு காணொளிச்செய்தியில் கூறியுள்ளார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் நியூ யார்க் மாநிலத்தில் அமைந்துள்ள புனித யோசேப்பு அருள்பணித்துவ பயிற்சிக் கல்லூரியில், ஜூன் 8, 9 ஆகிய இருநாள்கள் நடைபெற்ற ஒரு தியான நிகழ்வுக்கு, திருத்தந்தை அனுப்பிய காணொளிச்செய்தியில், உடன்பிறந்த உறவு இவ்வுலகில் உருவாக்கக்கூடிய நன்மைகளைக் குறித்து பேசியுள்ளார்.

"நாம் ஒன்றாய் இருப்பது போல் அவர்களும் ஒன்றாய் இருக்க" (காண்க. யோவான் 17:11) இயேசு எழுப்பிய வேண்டுதல் காணப்படும் யோவான் நற்செய்தியின் 17ம் பிரிவை அடித்தளமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள, 'யோவான் 17 இயக்கம்' என்ற கிறிஸ்தவ ஒன்றிப்பு முயற்சி ஏற்பாடு செய்திருந்த இந்த தியான நிகழ்வுக்கு, திருத்தந்தை தன் காணொளிச் செய்தியை அனுப்பினார்.

யோவான் 17 இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், ஒரு விருந்து, ஐஸ் கிரீம் அல்லது காபி ஆகியவற்றை சேர்ந்து உண்ணும் வேளையில், அவர்களுக்குள் நிலவும் உடன்பிறந்த உணர்வை மீண்டும் கண்டுகொள்பவர்கள் என்று தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாடுகளில் நிலவும் போர்ச்சூழல்களால், இத்தகைய விருந்தை உண்ணமுடியாமல் போனாலும், இவ்வியக்கத்தைச் சேர்ந்தவர்கள், மற்றவர்களை உடன்பிறந்தோராகக் காணும் திறமைபெற்றவர்கள் என்று கூறினார்.

அன்பின் அடித்தளமாக இறையியல் சிந்தனைகளை வளர்த்துக்கொள்வது அவசியம் என்று தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, அத்தகைய இறையியல் பின்னணி இல்லாதபோதும், இயேசுவுடன் நாம் கொள்ளும் சந்திப்பு, நம்மை அன்பில் பிணைக்கும் ஆற்றல் பெற்றது என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

யோவான் 17 இயக்கம், 2013ம் ஆண்டு, பெந்தக்கோஸ்து சபையின் போதகர் ஜோ தோசினி (Joe Tosini) அவர்களால் துவக்கப்பட்டது. இவர், கத்தோலிக்கர் அல்ல எனினும், 2013ம் ஆண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்காக சிறப்பாக செபிக்கும்படி தூண்டப்பட்டார். அதைத் தொடர்ந்து, அவர் பலமுறை திருத்தந்தையைச் சந்தித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 June 2021, 14:14