கோவிட்-19க்குப்பின் சமத்துவ உலகு அமைக்கப்பட திருத்தந்தை அழைப்பு

மரணத்தை வாழ்வாகவும், ஆயுதங்களை உணவாகவும் மாற்றுவதற்கு அரசியல் தலைவர்களுக்கு திருத்தந்தை அழைப்பு

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 பெருந்தொற்று காலத்திற்குப்பின், நல்லதோர் உலகை மீண்டும் கட்டியமைப்பது குறித்து, சுலோவாக்கியா குடியரசின் தலைநகர் பிராட்டிஸ்லாவாவில் (Bratislava), ஜூன் 15, இச்செவ்வாயன்று, GLOBSEC அமைப்பு துவங்கியுள்ள 16வது கூட்டத்திற்கு, காணொளிச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒன்றோடொன்று தொடர்புடையதாக இருக்கும், சமுதாய, பொருளாதார, சுற்றுச்சூழல், மற்றும், அரசியல் ஆகிய விவகாரங்களில், பெருந்தொற்று உருவாக்கியுள்ள கடும் நெருக்கடிகளை சந்தித்துவரும் நாம், இப்பெருந்தொற்று முடிவுற்றபின்னர், உலகின் மீள்கட்டமைப்பு குறித்து சிந்திப்பது மிகவும் முக்கியம் என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் முதலில் தன் நன்றியையும், நல்வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.

பார்த்தல், தீர்ப்பிடுதல், செயல்படுதல் ஆகிய மூன்று தலைப்புக்களின் அடிப்படையில் தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புவதாக, தன் காணொளிச் செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு முன்னர், படைத்தவர், அயலவர், மற்றும், படைப்பு ஆகியவற்றின் மீது நமக்கிருக்கும் கடமைகளை எவ்வாறெல்லாம் மீறியிருக்கிறோம் என்பதை, நேர்மையாகச் சிந்திக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.  

பார்த்தல்

உலகின் பெருமளவான வளங்கள், ஒரு சிறிய குழுமத்திடம் இருப்பதையும், பல நேரங்களில் மக்களும், வளங்களும் எவ்வித தயக்கமுமின்றி சுரண்டப்படுவதையும், தன்னலம், மற்றும், சமத்துவமற்ற நிலையில் அமைக்கப்பட்ட, ஒரு பொருளாதார மற்றும், சமுதாய வாழ்வு அமைப்பையும், பசிக்கொடுமையை அடிப்படையாக வைத்து இலாபம் தேடப்படுவதையும் காண்கிறேன் என்று திருத்தந்தை கூறியுள்ளார்.  

இயற்கை அனைவருக்கும் சொந்தமானது என்ற உணர்வின்றி, அதை அழிப்பதையும், நுகர்வதையும், அதன் மீது அக்கறையற்ற ஒரு வாழ்க்கை முறையையும் காண்கிறேன் என்று கூறியுள்ள திருத்தந்தை, இந்நிலை, ஏழைகள், மற்றும், வருங்காலத் தலைமுறைகளுக்கு சூழலியல் கடனை உருவாக்கியுள்ளது என்று கூறியுள்ளார்.  

தீர்ப்பிடுதல்

இந்த பெருந்தொற்று முடிவுற்றபின், இந்த உலகம் பழைய நிலையைவிட மோசமானதாக அல்லது, அதைவிட சிறந்ததாக இருக்கும் என்றுரைத்துள்ள திருத்தந்தை, ஒவ்வொரு மனிதரின் வளர்ச்சிக்கு, உண்மையான, மற்றும், நியாயமான வாய்ப்புகளை வழங்கக்கூடிய, சமத்துவமான ஒரு வருங்காலத்தை உருவாக்க, இப்போதைய நெருக்கடிகள் வழிகளைத் திறந்துவிட்டுள்ளன என்றும் கூறியுள்ளார்.

செயல்படுதல்

இப்போதைய நெருக்கடிகள் வழங்கியுள்ள வாய்ப்புக்களை வீணாக்காமல், அனைத்து மனிதரின், முழு வளர்ச்சியை மையப்படுத்திய திட்டம் அமைக்கப்படுவது அவசியம் என்றும், ஒவ்வொரு செயலுக்கும், தொலைநோக்குப் பார்வை தேவைப்படுகின்றது என்றும், எடுக்கப்படும் அனைத்து தீர்மானங்களும், மரணத்தை வாழ்வாகவும், ஆயுதங்களை உணவாகவும் மாற்றவல்லதாகவும், நம் பொதுவான இல்லத்தைப் பாதுகாப்பதாகவும் இருக்கவேண்டும் என்று திருத்தந்தை கேட்டுக்கொண்டுள்ளார்.     

இக்கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள், அனைத்து மக்களும், ஒருவரொருவரோடும், படைப்போடும் நல்லுறவுடன் வாழ உதவும் என்ற தன் நம்பிக்கையையும், திருத்தந்தை, தன் காணொளிச்செய்தியில் எடுத்துரைத்துள்ளார்.

ஜூன் 15, இச்செவ்வாய் முதல், 17, வருகிற வியாழன் வரை நடைபெறும் GLOBSECன் 16வது கூட்டத்தில், சனநாயகம், பொருளாதார வளர்ச்சி, பாதுகாப்பு போன்றவற்றில் நம்பிக்கையைப் புதுப்பிக்கவும், அவற்றை மீண்டும் கட்டியெழுப்பவும் கலந்தாய்வுகள் மேர்கொள்ளப்பட்டு வருகின்றன.

இக்கூட்டத்தில் ஏறத்தாழ நூறு நாடுகளின் தலைவர்கள், பிரதமர்கள், அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள் கலந்துகொள்கின்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 June 2021, 14:51