பாகிஸ்தான் சிறார் பாகிஸ்தான் சிறார் 

கற்பதற்கும், விளையாட்டுக்கும், கனவுக்கும் குழந்தைகளின் உரிமைகள்

பாலர் தொழிலாளர், புலம்பெயர்வோர், எத்தியோப்பியாவில் வன்முறைக்கு உள்ளாகியிருப்போர் ஆகியோருக்காக திருத்தந்தையின் இறைவேண்டல்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கட்டாய வேலைக்குத் தள்ளப்படும் பாலர் தொழிலாளர், ஆபத்தானச் சூழல்களில் மத்தியதரைக் கடலைக் கடக்கும் புலம்பெயர்வோர், மற்றும் எத்தியோப்பியாவில் Tigray பகுதியின் வன்முறைக்கு உள்ளாகியிருப்போர் ஆகியோருக்காக தன் செபங்களை அர்ப்பணித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

புனித பேதுரு வளாகத்தில் ஜூன் 13, இஞ்ஞாயிற்றுக்கிழமையன்று குழுமியிருந்த மக்களை நோக்கி, இவ்வகையில் துயருறுவோருக்காக செபிக்குமாறு நண்பகல் மூவேளை செபஉரையின் இறுதியில் அழைப்பு விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எத்தியோப்பியாவில் இடம்பெறும் மிகப்பெரும் மனிதாபிமான நெருக்கடியால், ஏழைமக்கள் பசியால் மடியும் ஆபத்து உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டினார்.

எத்தியோப்பியாவில் Tigray பகுதிதியில் ஏற்கெனவே பஞ்சம் நிலவி வருவதால், தற்கால வன்முறைகள் உடனடியாக முடிவுக்கு வந்து, அனைவருக்கும் உணவும், நல ஆதரவும் கிடைக்கும்வண்ணம், சமுதாய இணக்கநிலை உருவாகவேண்டும் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை.

மக்களின் துன்பங்களை அகற்றுவதில் ஈடுபாட்டுடன் செயல்படும் அனைவருக்கும் தன் நன்றியை வெளியிடுவதாகவும் அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்,

ஜூன் 12, இச்சனிக்கிழமை, சிறாரை தொழிலில் ஈடுபடுத்தும் நிலைக்கு எதிரான உலக நாள் கடைபிடிக்கப்பட்டதைக், குறித்தும் தன் மூவேளை செப உரைக்குப்பின் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கல்வி கற்பதற்கும், விளையாடுவதற்கும், கனவு காண்பதற்கும் குழந்தைகளுக்கு இருக்கும் உரிமைகளைப் பறித்து, அவர்கள் சுரண்டப்படுவது குறித்து எவரும் பாராமுகமாக இருக்கமுடியாது என்று கூறினார்.

அனைத்துலக தொழிலாளர் அமைப்பின் கணிப்புப்படி, இன்றைய உலகில் 15 கோடி சிறார் பணிகளில் சுரண்டலுக்கு உள்ளாகியுள்ளனர் என்பதையும், இவ்வெண்ணிக்கை, இத்தாலி, பிரான்ஸ், இஸ்பெயின் ஆகிய மூன்று நாடுகளின் மொத்த மக்கள்தொகைக்கு ஈடாகும் என்பதையும் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இத்தகைய நவீன கால அடிமைத்தனத்திற்கு எதிராக, அனைவரின் ஒன்றிணைந்த முயற்சி இன்றியமையாதது என கூறினார்.

2015ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், புலம்பெயர்ந்தோருடன் கடலில் மூழ்கிய படகின் ஒரு பகுதி, ஜூன் 13ம் தேதி ஞாயிறன்று, இத்தாலியின் சிசிலி தீவில் ஒப்படைக்கப்படும் நிகழ்வைக் குறித்தும் தன் நண்பகல் மூவேளை செப உரையில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மத்தியத்தரைக்கடலில் புலம்பெயர்ந்த மக்கள் உயிரிழந்து வருகின்றனர் என்பதும், இக்கடல், ஐரோப்பாவின் மிகப்பெரும் கல்லறைத் தோட்டமாக மாறி வருகிறது என்பதும், மக்களின் மனங்களை விழிப்படையவைத்து, அக்கறையின்மை எனும் சுவரை உடைத்தெறியட்டும் எனவும் அழைப்புவிடுத்தார்.

ஜூன் 14, இத்திங்களன்று உலகில் சிறப்பிக்கப்படும் உலக இரத்த தான தினம் குறித்தும் தன் மூவேளை செப உரையின் இறுதியில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வத் தொண்டர்களுக்கும், தாராளமானதுடன், தொடர்ந்து, இரத்த தானம் வழங்கும் நல்மனம் கொண்டோருக்கும், தன் நன்றியை வழங்குவதாகவும் தெரிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 June 2021, 13:18