தேடுதல்

Vatican News
 மூவேளை செபவுரையின்போது -060621 மூவேளை செபவுரையின்போது -060621  (AFP or licensors)

ஆப்பிரிக்காவுக்கு இன்று தேவைப்படுவது வன்முறையல்ல, மாறாக, அமைதி

மீண்டும் மீண்டும் வன்முறைத் தாக்குதல்களால் துயர்களை அனுபவிக்கும் புர்கினா பாசோ மக்களோடு தன் அருகாமையைத் தெரிவித்த திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

புர்கினா பாசோ நாட்டின் மீது மீண்டுமொருமுறை இடம்பெற்றுள்ள தாக்குதலில் 130க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளது குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டிற்காக அனைவரும் செபிக்குமாறு உருக்கமாக அழைப்பு விடுத்தார்.

ஆப்பிரிக்காவுக்கு இன்று தேவைப்படுவது வன்முறையல்ல, மாறாக, அமைதி என, ஜூன் 6, ஞாயிறு மூவேளை செப உரைக்குப்பின் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மீண்டும் மீண்டும் வன்முறைத் தாக்குதல்களால் துயர்களை அனுபவிக்கும் புர்கினா பாசோ மக்களோடு தன்  அருகாமையைத் தெரிவிப்பதாகவும் எடுத்துரைத்தார்.

வெள்ளிக்கிழமைக்கும் சனிக்கிழமைக்கும் இடைப்பட்ட இரவில் Solhan என்ற கிராமத்தில் நடந்த தாக்குதலில் 7 குழந்தைகள் உட்பட, 132பேர் உயிரிழந்துள்ளது குறித்து கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புர்கினா பாசோ நாட்டிற்காக செபிக்குமாறு அழைப்பு விடுத்தார்.

ஐ.நா. அமைதிக்காப்பாளர்கள் ஆயிரக்கணக்கானோர் நிறுத்தப்பட்டுள்ளபோதிலும், குறிப்பாக, புர்கினா பாசோ, மாலி, நைஜர் ஆகிய நாடுகளில், இஸ்லாமிய ஜிகாத் குழுவினரின் தாக்குதல்கள் தொடர்ந்து வருவதாகவும், கடந்த ஈராண்டுகளில் மட்டும் 11 இலட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குடிபெயர்நதவர்களாக மாறியுள்ளதாகவும் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ஜூன் 8ம் தேதி, செவ்வாய்க்கிழமையன்று உலகின் அமைதிக்காக, ஒரு நிமிடத்தை அனைவரும் அவரவர் மத பாரம்பரியங்களுக்கு இயைந்தவகையில் அர்ப்பணிக்கவேண்டும் என அனைத்துலக கத்தோலிக்க செயல்பாட்டு அமைப்பு வின்ணப்பித்துள்ளதைப் பற்றிக் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பூமி, மற்றும் மியான்மார் நாட்டிற்காக அனைவரும் செபிக்குமாறு அழைப்புவிடுத்தார்.

06 June 2021, 13:36