புனித பேதுரு, பவுல் திருவிழா திருப்பலியின்போது - 290621 புனித பேதுரு, பவுல் திருவிழா திருப்பலியின்போது - 290621 

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா – திருத்தந்தையின் மறையுரை

திருத்தந்தை : இயேசுவைச் சந்தித்ததால் பலம்பெற்று விடுதலையடைந்த மாபெரும் புனிதர்கள் பேதுரு மற்றும் பவுலைப்போல், நாமும் இயேசுவால் விடுதலையடைந்துள்ளோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இயேசுவின் மிகப்பெரும் சீடர்களும், திருஅவையின் இரு பெரும் தூண்களுமாகிய புனிதர்கள் பேதுரு மற்றும் பவுலின் வாழ்வை உற்று நோக்கும்போது, அவர்களின் திறமையோ, கொடைகளோ பெரிதாகத் தெரியவில்லை, மாறாக, அவர்கள் இயேசுவைச் சந்தித்ததால் உருவான வாழ்வு மாற்றமே உயர்வாகத் தெரிகின்றது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

ஜூன் 29, இச்செவ்வாயன்று சிறப்பிக்கப்பட்ட புனிதர்கள் பேதுரு, மற்றும் பவுலின் பெருவிழாவையொட்டி, வத்திக்கான், புனித பேதுரு பெருங்கோவிலில் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தங்களை குணப்படுத்தி, விடுதலை வழங்கிய இயேசுவின் அன்பை அனுபவித்த இவ்விரு புனிதர்களும், மற்றவர்களின் விடுதலைக்குரிய பணியை ஏற்று நடத்தினர் என உரைத்தார்.

கலிலேயாவின் மீனவர் புனித பேதுரு, தன் தொழிலில் பல வேளைகளில் எதுவும் கிட்டாமல் தோல்வியை சந்தித்தாலும் (லூக் 5:5; யோவா 21:5), சில வேளைகளில், அச்சத்திற்கு உட்பட்டாலும் (மத் 14:30),  உலக சிந்தனைகளால் ஆட்கொள்ளப்பட்டு இயேசுவின் சிலுவையின் அர்த்தத்தை புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ளத் தவறினாலும் (மத் 16:22), வாழ்வையேத் தருவேன் எனக் கூறிய பேதுரு, இயேசுவை மறுதலித்தபோதிலும் (மாற் 14:66-72), இயேசு அவரை முழுமையாக ஏற்றுக்கொண்டு, தன் சகோதரர்களை விசுவாசத்தில் உறுதிப்படுத்தும் பணியையும் (லூக் 22:32), மனிதர்களைப் பிடிப்பவராக்குவேன் என்ற உறுதியையும் தருகிறார், என்று, தன் மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இறைவனைச் சந்திப்பதற்கு உதவும் கதவுகளை திறக்கும் திறவுகோலை இயேசுவிடமிருந்துப் பெற்ற புனித பேதுரு, பல்வேறு தளைகளிலிருந்து தான் விடுதலைப் பெற்றவராக, மற்றவர்களின் விடுதலைக்காக முன்னோக்கிச் சென்றார் என்று கூறியத் திருத்தந்தை, இயேசு கொணர்ந்த விடுதலையை, புனித பவுலும் அனுபவித்தார் என்பதை எடுத்துரைத்தார்.

தன் மதப்பாரம்பரியங்கள் மீது கொண்டிருந்த ஆர்வத்திற்கு அடிமையாக இருந்து, கிறிஸ்தவர்களை சித்ரவதைப்படுத்திய சவுல், பின்னர் சிறியவர் என பொருள்படும் பவுலாக மாறினார், என்றுரைத்த திருத்தந்தை, இயேசுவினால் விடுதலை அடைந்த புனித பவுல், எத்தனை பெருந்துன்பங்களின் மத்தியிலும் கடவுள் தன் அருகே இருப்பதை எப்போதும் உணர்ந்தார் என்பதை, பல்வேறு எடுத்துக்காட்டுக்களுடன் விளக்கினார்.

இயேசுவைச் சந்தித்ததால் பலம்பெற்று விடுதலையடைந்த மாபெரும் புனிதர்கள் பேதுரு மற்றும் பவுலைப்போல், நாமும் இயேசுவால் விடுதலையடைந்துள்ளோம் என்பதை நினைவூட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்முடைய தேவையற்ற அச்சங்களிலிருந்தும், வெளிவேடங்களிலிருந்தும், கடினப்படுத்தும் சில மத உணர்வுகளிலிருந்தும் நாம் தினம் தினம் விடுதலை அடைய வேண்டியுள்ளது என எடுத்துரைத்தார்.

நகர்களுக்கும் சமுதாயங்களுக்கும் விடுதலை வழங்கும் பணியில் ஈடுபடுவதற்கு முன்னர், நமக்கு விடுதலையை வழங்கவரும் இயேசுவை அனுமதித்து, தூயஆவியாரின் விடுதலைப்பாதையில் நடைபோடவேண்டும் என்ற அழைப்பை முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நாளில் புதிய பேராயர்கள், பாலியம் எனும் கழுத்துப்பட்டையை பெறுவதையும், கான்ஸ்தாந்திநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு சபையின் பிரதிநிதிகள் திருவிழா திருப்பலியில் தன்னோடு பங்கெடுத்ததையும் சிறப்பாகக் குறிப்பிட்டுப் பேசினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 June 2021, 12:10