வயதானவர்கள் மத்தியில் திருத்தந்தை பிரான்சிஸ்  வயதானவர்கள் மத்தியில் திருத்தந்தை பிரான்சிஸ்  

மன நோயாளிகள் மத்தியில் பணியாற்றுவோருக்கு திருத்தந்தை நன்றி

மன நோயாளிகளைப் பாரமரிப்பது, திறமையான ஒரு தொழில் மட்டுமல்ல, மாறாக, அது அறிவியலையும், முழு மனித சமுதாயத்தையும் இணைக்கின்ற, ஓர் உண்மையான பணி - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மன நோயாளிகளைப் பாரமரிப்பது, திறமையான ஒரு தொழில் மட்டுமல்ல, மாறாக, அது அறிவியலையும், மனித சமுதாயம் முழுவதையும் இணைக்கின்ற, ஓர் உண்மையான பணி என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மன நலம் குறித்து, ஜூன் 25, இவ்வெள்ளியன்று நடைபெற்ற ஒரு கருத்தரங்கிற்கு அனுப்பிய செய்தியில் கூறியுள்ளார்.

உரோம் நகரில், இத்தாலிய நலவாழ்வு அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட, மன நலம் குறித்த, இரண்டாவது தேசிய கருத்தரங்கிற்கு, திருத்தந்தை அனுப்பிய செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மன நோயாளர் பராமரிப்புப் பணிகளில் மனிதருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்பது மட்டுமல்ல, இவர்கள், மன நோயாளிகள் என்ற, ஆறாத தழும்பை எதிர்கொள்ளும் ஆபத்திலும் உள்ளனர் என்றுரைத்துள்ள திருத்தந்தை, 'குழும கலாச்சாரம்' வளர்க்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

மனநலம் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் பணியாற்றும் மருத்துவர்கள், தனிமனிதருக்கும், சமுதாயத்திற்கும், மிகப்பெரும் நன்மை செய்கின்றனர் என்றுரைத்த திருத்தந்தை, இந்த பெருந்தொற்று காலத்தில், மனத்தளவில் அதிகம் துன்புறும் இந்நோயாளிகள் பராமரிக்கப்படுவதைப் பற்றிய விழிப்புணர்வு அதிகம் உருவாக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

மன நோய் குறித்த அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்பவர்களுக்கு மட்டுமல்லாமல், அந்நோயால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் குடும்பத்தினர், அவர்கள் மத்தியில் பணியாற்றும் தன்னார்வலர்கள், மற்றும், நிறுவனங்கள் ஆகியவற்றுக்கும், நலவாழ்வு அமைப்புமுறையில் பாதுகாப்பு வழங்கப்படவேண்டும் என்றும், திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

இந்நோயாளிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை, சமுதாயத்தின் பல்வேறு அமைப்புகள் புரிந்துகொள்வதற்கு, இந்த கருத்தரங்கு உதவும் என்று, தான் நம்புவதாகவும், திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

இந்நோயாளிகள் மத்தியில் பணியாற்றும் அனைவருக்கும், கத்தோலிக்கத் திருஅவையும் தானும், நன்றி தெரிவிப்பதாக உரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவர்களின் பணிகளை ஊக்கப்படுத்தியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 June 2021, 15:27