திருத்தந்தை பிரான்சிஸ், கர்தினால் ரெய்ன்ஹார்டு மார்க்ஸ்  திருத்தந்தை பிரான்சிஸ், கர்தினால் ரெய்ன்ஹார்டு மார்க்ஸ்  

கர்தினால் மார்க்ஸ், பேராயர் பணியை தொடர்ந்து ஆற்ற அழைப்பு

இக்காலத்தில், நாம் திருஅவையை சீரமைக்க அழைக்கப்படுகிறோம், ஒவ்வொரு சீரமைப்பும், அவரவரிடமிருந்து தொடங்கவேண்டும் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஜெர்மனியின் தெற்கேயுள்ள மியூனிக் மற்றும், ஃபிரைசிங் (Munich and Freising) பேராயர் கர்தினால் ரெய்ன்ஹார்டு மார்க்ஸ் (Reinhard Marx) அவர்கள், பேராயர் பணியிலிருந்து விலகுவதாக தன்னிடம் சமர்ப்பித்த மடலை ஏற்காது, அவர், தொடர்ந்து அப்பணியை ஆற்றுமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜெர்மனியில் இடம்பெறும் பாலியல் முறைகேடுகள் விவகாரத்தில் தலத்திருஅவையின் அணுகுமுறை போதுமானதாக இல்லை என, தான் கருதுவதாகவும், அதனால், தன் பேராயர் தலைமைப்பணி பொறுப்பிலிருந்து விலகுவதாகவும், கர்தினல் மார்க்ஸ் அவர்கள், இவ்வாண்டு மே மாதம் 21ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, மடல் ஒன்றை அனுப்பியிருந்தார்.

சூன் 10, இவ்வியாழனன்று, அம்மடலுக்கு, இஸ்பானிய மொழியில் தன் கைப்பட, பதில் அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாலியல் முறைகேடுகள் குறித்த விவகாரத்தால், திருஅவை முழுவதும் நெருக்கடியில் உள்ளது என்றும், இப்பிரச்சனையைக் களையாமல், திருஅவையால் ஓர் அடியும் முன்னோக்கி எடுத்துவைக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இப்பிரச்சனையை, சமூகவியல், மற்றும் உளவியலால் களைவதற்கு முயற்சிப்பது பயனற்றது, மாறாக, கிறிஸ்துவின் பாடுகள், மரணம், மற்றும் உயிர்ப்பு ஆகிய பாஸ்கா நம்பிக்கையால் அது அகற்றப்படவேண்டும் என்று எழுதியுள்ள திருத்தந்தை, இதனை தனியாக நின்று அல்ல, மாறாக, குழுமமாகச் செயல்பட்டு அதிலிருந்து மீண்டுவரவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

திருஅவையில் இடம்பெறும் சிறாருக்கெதிரான பாலியல் முறைகேடுகளை, அண்மைக்காலம்வரை, திருஅவை கையாண்டுள்ள முறைபற்றி கர்தினால் மார்க்ஸ் அவர்கள் விளக்கியுள்ளதை தான் ஏற்பதாகத் தெரிவித்துள்ள திருத்தந்தை, இந்த குற்றத்தைப் புறக்கணித்துவிட்டு இருக்கஇயலாது என்றும் கூறியுள்ளார்.

பாவத்தின் உண்மைநிலையின்முன் தன்னையே தாழ்த்திக்கொள்வதற்கு அஞ்சாத ஆயர் அவர்களின் கிறிஸ்துவ துணிச்சலுக்கு நன்றி என, கர்தினால் மார்க்ஸ் அவர்களுக்கு எழுதியுள்ள திருத்தந்தை, இந்த பிரச்சனையை தனியாகவும், குழுமமாகவும் கையாள்வதே, பலன்தரும் ஒரே வழி என்று குறிப்பிட்டுள்ளார். 

கடந்த காலத்தின் பல வரலாற்றுப் பிழைகளின் முன்பாக, “என் பாவமே” என்று பலமுறை சொல்லப்பட்டு வருகிறது, ஆனால், இக்காலத்தில், நாம் திருஅவையை சீரமைக்க அழைக்கப்படுகிறோம், ஒவ்வொரு சீரமைப்பும், அவரவரிடமிருந்து தொடங்கப்படவேண்டும், திருஅவையில் இடம்பெறும் சீரமைப்பு, பிரச்சனையில் நுழைவதற்கு அஞ்சாத ஆண்கள் மற்றும் பெண்களால் நடைபெறுகின்றது என்றும், திருத்தந்தையின் மடலில் கூறப்பட்டுள்ளது.

நான், தங்களின் பணியை உறுதிசெய்திருப்பது மற்றும், பணி ஓய்வை ஏற்காதது பற்றி, உரோம் ஆயர் (தங்களை அன்புகூரும் சகோதரரான), புரிந்துகொள்ளவில்லை என்று தாங்கள் நினைத்தால், ஆண்டவர்முன் பேதுரு தன்னை பாவி என்று சரண் அடைந்தபோது, ஆண்டவர் அவரை எவ்வாறு ஏற்றார் என்பதை நினைத்துப் பாருங்கள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கர்தினால் மார்க்ஸ் அவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அச்சமயத்தில் ஆண்டவர் பேதுருவிடம், “என் ஆடுகளை மேய்” என்று கூறினார் என்பதை நினைவுபடுத்தி, தன் மடலை நிறைவு செய்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கர்தினால் மார்க்ஸ் அவர்கள், தனது தலைமைப்பணியைத் தொடர்ந்து ஆற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

திருத்தந்தை இஸ்பானிய மொழியில் எழுதிய இம்மடலை, திருப்பீடம், ஜெர்மன் மற்றும், இத்தாலிய மொழிகளில் வெளியிட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 June 2021, 15:27