கிறிஸ்துவின் திருஉடல் திருஇரத்தம் திருவிழா திருப்பலி - 060621 கிறிஸ்துவின் திருஉடல் திருஇரத்தம் திருவிழா திருப்பலி - 060621 

இறை அருகாமையும், முடிவற்ற வாழ்வை வழங்கும் உணவும் நீரும் தேவை

இறைவனின் எல்லையற்ற அன்பை வெளிப்படுத்தும் திருநற்கருணையைப் பெறும் நாம், நம் சகோதரர் சகோதரிகளின் துயர்களைப் பகிர்பவர்களாக இருக்கவேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இவ்வுலக வாழ்வுப் பயணத்தில் நம் அருகே இறைவனின் இருப்பும், அவர் அன்பும், முடிவற்ற வாழ்வை வழங்கும் உணவும் நீரும் நமக்குத் தேவை என்பதை கிறிஸ்துவின் திருஉடல் திருஇரத்தம் திருவிழா நினைவுபடுத்தி நிற்கின்றது என உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்துவின் திருஉடல் திருஇரத்தம் திருவிழாவான ஜூன் 6, இஞ்ஞாயிறன்று, வத்திக்கான், தூய பேதுரு பெருங்கோவிலில் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்றைய நற்செய்தியில் காணப்படும் மூன்று உருவகங்கள் குறித்து விளக்கமளித்தார்.

பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே சென்று ஏற்பாடு செய்யவேண்டும், என சீடர்கள் இயேசுவிடம் கேட்டபோது,  நீங்கள் புறப்பட்டு நகருக்குள் செல்லுங்கள், மண்குடத்தில் தண்ணீர் சுமந்துகொண்டு ஓர் ஆள் உங்களுக்கு எதிரே வருவார், அவர் பின்னே செல்லுங்கள், எனக்கூறிய இயேசு, தண்ணீர் சுமப்பவரை ஒரு வழிகாட்டியாக காட்டுவது, இறைவனுக்காக நாம் கொண்டிருக்கும் தாகத்தை எடுத்துரைக்கும் உருவகமாக உள்ளது என உரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இரண்டாவது உருவகமாக, பாஸ்கா விருந்துக்கு வழங்கப்பட்ட மேல்மாடியின் பெரிய அறையை சுட்டிக்காட்டிய திருத்தந்தை, ஒரு சிறு அப்பத்திற்கு மிகப் பெரிய அறை கொடுக்கப்பட்ட நிகழ்வு, இறைவன் தன்னையே சிறியதாக்கி நம்மிடம் வரும்போது, நம் இதயங்கள் பரந்து விரிந்து பெரியதாகி, அவரை வரவேற்க முன்வரவேண்டும் என்பதைக் காட்டுவதாக உள்ளது என்றார்.

திருஅவையும் மிகப்பெரும் இடம்கொண்டதாக, திறந்த கரங்களுடன் அனைவரையும் வரவேற்பதாக இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாழ்வுப் பயணத்தில் சோர்வடைவோருக்கு உரமூட்டி ஊக்கமளிக்கும் உணவாக திருநற்கருணை உள்ளது என மேலும் எடுத்துரைத்தார்.

இயேசு அப்பத்தை பிட்டு வழங்கிய நிகழ்வை தன் மறையுரையில் மூன்றாவது உருவகமாக எடுத்துக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவனின் எல்லையற்ற அன்பை வெளிப்படுத்தும் திருநற்கருணையைப் பெறும் நாம் ஒவ்வொருவரும், நம் சகோதரர் சகோதரிகளின் துயர்களைப் பகிர்பவர்களாக, அவர்களின் தேவைகளில் உதவுபவர்களாக இருக்கவேண்டும் என்ற அழைப்பை விடுத்தார்.

கிறிஸ்துவின் திருஉடல் திருஇரத்த திருவிழாவன்று திருநற்கருணை பவனி இடம்பெறுவதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் வெளியில் சென்று சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் இயேசுவைக் கொண்டுசெல்ல வேண்டும் என்பதை இப்பவனி நினைவுறுத்தி நிற்கின்றது என மேலும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 June 2021, 13:24