அழிவுக்குள்ளாகிவரும் பாலஸ்தீனிய அரபு கிராமம் அழிவுக்குள்ளாகிவரும் பாலஸ்தீனிய அரபு கிராமம் 

மத்தியக்கிழக்குப் பகுதியில் அமைதி நிலவ – திருத்தந்தை செய்தி

மத்தியக்கிழக்குப் பகுதியில் அடிக்கடி எழும் வன்முறை என்ற நஞ்சை விடுத்து, நம்பிக்கை என்ற நீரால் அனைத்துப் பிரிவினரும் வளப்படுத்தப்படவேண்டும் – திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மத்தியக்கிழக்குப் பகுதியில் அமைதி நிலவவேண்டி, அங்கு வாழும் கத்தோலிக்கர்கள், ஜூன் 27, இஞ்ஞாயிறன்று மேற்கொண்ட திருவழிபாடுகளை ஊக்கப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மடல் ஒன்றை அனுப்பினார்.

மத்தியக்கிழக்குப் பகுதிகளில் பணியாற்றும் கத்தோலிக்க முதுபெரும் தந்தையர்களுக்கு திருத்தந்தை அனுப்பியுள்ள இம்மடலில், அப்பகுதிகளில், குறிப்பாக, புனிதபூமி, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் தான் மேற்கொண்ட திருத்தூதுப் பயணங்களை நினைவுகூர்ந்துள்ளார்.

திருக்குடும்பத்தின் பாதுகாப்பில்...

அமைதி வேண்டி மேற்கொள்ளப்பட்ட இந்த ஞாயிறு திருவழிபாட்டு நிகழ்வுகளில், மத்தியக்கிழக்குப் பகுதி திருக்குடும்பத்தின் பாதுகாப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளதைக் குறித்து தன் மகிழ்வை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனு உருவான இறைமகனைப் பாதுகாத்த திருக்குடும்பம், மத்தியக்கிழக்குப் பகுதியில் வாழும் கத்தோலிக்கர்களின் அடையாளத்தையும் பாதுகாக்கவேண்டும் என்ற வேண்டுதலை எழுப்பியுள்ளார்.

கத்தோலிக்கர்கள் தங்கள் அடையாளத்தையும், உரிமைகளையும் மற்றவர்கள் புரிந்து ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும்போது, அப்பகுதியில் தங்கள் சாட்சிய வாழ்வின் வழியே, கிறிஸ்தவ விழுமியங்களை நிலைநாட்டுவதும் கத்தோலிக்கர்களின் கடமை என்பதை, திருத்தந்தை தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

வன்முறை என்ற நோயிலிருந்து பாதுகாப்பு

மத்தியக்கிழக்குப் பகுதியில் அடிக்கடி எழும் வன்முறை என்ற நோயிலிருந்து அப்பகுதி பாதுகாக்கப்பட வேண்டும் என்ற வேண்டுதலை தன் செய்தியில் எழுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வன்முறை என்ற நஞ்சை விடுத்து, நம்பிக்கை என்ற நீரால் அனைத்துப் பிரிவினரும் வளப்படுத்தப்படவேண்டும் என்ற விண்ணப்பத்தை வெளியிட்டுள்ளார்.

மத்தியக்கிழக்குப் பகுதியின் வரலாற்றில், பல கலாச்சாரங்கள் தோன்றி மறைந்துள்ளன என்பதை, தன் செய்தியில் குறிப்பிடும் திருத்தந்தை, ஆபிரகாம் காலம் முதல், இறைவனின் வார்த்தை ஓர் அணையாத விளக்காக நம் பாதைக்கு ஒளியூட்டி வருகிறது என்பதையும் எடுத்துரைத்துள்ளார்.

மண்ணுலகிற்கு உப்பாக விளங்கும் கத்தோலிக்கர்

மத்தியக்கிழக்குப் பகுதியில் வாழும் அனைத்து கத்தோலிக்கரும், மண்ணுலகிற்கு உப்பாக விளங்குமாறும், கத்தோலிக்கத் திருஅவையின் சமுதாயக் கோட்பாடுகளின் அடிப்படையில், அப்பகுதியின் திருஅவையைக் கட்டியெழுப்பும்படியும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் செய்தியின் வழியே அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், இஞ்ஞாயிறன்று வழங்கிய நண்பகல் மூவேளை செப உரையின் இறுதியில் மத்தியக்கிழக்குப் பகுதியில் வாழும் கத்தோலிக்கர்களை சிறப்பாக நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தங்கள் துயரங்கள் நடுவே, அவர்களுக்கு இறைவன் துணிவையும், விடாமுயற்சியையும், நம்பிக்கையையும் வழங்க, அனைவரும் செபிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 June 2021, 15:00