உரோம் மறைமாவட்ட திருத்தொண்டர்கள் சந்திப்பு உரோம் மறைமாவட்ட திருத்தொண்டர்கள் சந்திப்பு  

திருத்தொண்டர்களின் தாழ்ச்சியுள்ள பணி, நற்செய்தியின் மணமாக..

உரோம் மறைமாவட்டத் திருத்தொண்டர்கள், தாழ்ச்சியுள்ளவர்களாக, நல்ல கணவர்களாக, நல்ல தந்தையராக, ஏழைகளின் உணர்வுகளைப் புரிந்துகொள்பவர்களாக வாழுமாறு திருத்தந்தை அழைப்பு

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உரோம் மறைமாவட்டத்தில் பணியாற்றும் திருத்தொண்டர்கள், மற்றும், அவர்களின் குடும்பத்தினரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 19, இச்சனிக்கிழமையன்று, திருப்பீடத்தில் சந்தித்து, திருத்தொண்டர்கள் பற்றி, இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்க ஏடுகளில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை மையப்படுத்தி, தன் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார்.

திருத்தொண்டர்கள், திருப்பணியாளர் நிலைக்காக அல்ல, தொண்டுக்காகவே என்று, திருஅவை பற்றிய கோட்பாட்டு விளக்கத்தில் (எண் 29) கூறப்பட்டுள்ளது என்றுரைத்த திருத்தந்தை, இது, திருஅவை என்ற உடலில், எவரும், ஒருவர் மற்றவருக்கு மேம்பட்டவர் அல்ல என்பதை எடுத்துரைக்கின்றது என்று கூறினார்.

தம்மையே ஊழியர் என்ற நிலைக்குத் தாழ்த்திய இயேசு போன்று, நாம் அனைவரும் பணியாளர்களாக இருப்பதற்கு அழைக்கப்பட்டுள்ளோம் என்றும், இயேசுவின் சீடர்களுக்கு, அன்புகூர்தல் என்பது, தொண்டுபுரிவதாகும், தொண்டுபுரிதல் என்பது ஆட்சி செய்வதாகும், மற்றும், அதிகாரம் என்பது, தொண்டுபுரிவதில் அடங்கியுள்ளது என்றும், திருத்தந்தை கூறினார்.

தொண்டு மனப்பான்மையில் நாம் வாழவில்லையெனில், எல்லாத் திருப்பணிகளும் தன்னிலே வெறுமையானதாக இருக்கும், மற்றும், பலன்களைத் தராது என்றுரைத்த திருத்தந்தை, அருள்பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்துவருவது, அவர்களின் பணியைத் திருத்தொண்டர்கள் ஆற்றுவதற்கு வழியமைக்கிறது, ஆயினும், திருத்தொண்டர்களின் பணியின்தன்மை அதுவல்ல என்று கூறினார்.

திருத்தொண்டர்கள், "அன்புகூரும் கடமையும், வழிநடத்தும் கடமையும் பூண்டுள்ளவர்கள்" (L.G.29) என்பதைக் குறிப்பிட்ட திருத்தந்தை, கிறிஸ்தவத்தின் தொடக்ககால நூற்றாண்டுகளில், திருத்தொண்டர்கள், நம்பிக்கையாளர்களின், குறிப்பாக, ஏழைகள், மற்றும், நோயாளிகளின் தேவைகளை நிறைவேற்றி வந்தனர் என்றும், உரோம் மறைமாவட்டமும், இந்த பழங்கால மரபை, மீண்டும் செயல்படுத்த முயற்சிக்கின்றது என்றும் கூறினார்.

மேலும், உரோம் மறைமாவட்ட திருத்தொண்டர்கள், தாழ்ச்சியுள்ளவர்களாக, நல்ல கணவர்களாக, நல்ல தந்தையர்களாக, மற்றவரின், குறிப்பாக, ஏழைகளின் உணர்வுகளைப் புரிந்துகொள்பவர்களாக வாழுமாறு அழைப்பு விடுப்பதாகக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  திருத்தொண்டர்கள் ஆற்றிவரும் நற்பணிகளுக்கு நன்றி தெரிவித்ததோடு, தனக்காகச் செபிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 June 2021, 14:50