பெருந்தொற்றிலிருந்து உலகை காப்பாற்றுமாறு செபமாலை

கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து இவ்வுலகைக் காத்தருள, அன்னை மரியாவின் பரிந்துரையை வேண்டி, இந்த மே மாதம் முழுவதும் செபமாலை பக்தி முயற்சி மேற்கொள்ளப்பட்டது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இவ்வுலகில், எவரும் ஒதுக்கப்படாமல், அனைவரும் கோவிட்-19 பெருந்தொற்று தடுப்பூசிகளைப் பெறுவதற்கு விரைவில் வாய்ப்புகளைப் பெறுவார்கள் என்று தான் நம்புவதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 31, இத்திங்கள் மாலையில் கூறினார்.

கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து இவ்வுலகைக் காத்தருள, அன்னை மரியாவின் பரிந்துரையை வேண்டி, அவருக்கென அர்ப்பணிக்கப்பட்ட மே மாதம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட செபமாலை பக்திமுயற்சியை, மே 31, இத்திங்கள் மாலையில் வத்திக்கான் தோட்டத்தில் திருத்தந்தை நிறைவு செய்துவைத்தார்.

சிக்கல்களை, அல்லது, முடிச்சுக்களை அவிழ்க்கும் அன்னை மரியாவின் திருஉருவம் அடங்கிய படத்தின் முன்பாக, இப்பக்தி முயற்சியை தலைமையேற்று வழிநடத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த உலகினரை, பொருளாதார மற்றும், ஆன்மீக அளவில் அடக்கி ஒடுக்கியுள்ள முடிச்சுக்களை அவிழ்க்குமாறு உருக்கமாக மன்றாடினார்.

இந்த பெருந்தொற்றிலிருந்து இந்த உலகம் முழுவதும் காப்பாற்றப்படுமாறும், உலகில் அனைவரும், தடுப்பூசிகளைப் பெற வாய்ப்புக்கள் பெறுமாறும், அன்னை மரியாவிடம் மன்றாடுவோம் என்றுரைத்த திருத்தந்தை, இந்த மே மாதம் முழுவதும் நடைபெற்ற தொடர் செபமாலை பக்திமுயற்சியில் மிகுந்த ஆர்வத்துடன் பங்குபெற்ற இறை மக்கள் அனைவருக்கும் தன் நன்றியையும் தெரிவித்தார்.

மேலும், இந்த மாரத்தான் செபமாலை பக்திமுயற்சியில், பங்குபெற்ற உலகின் முப்பது திருத்தலங்களுக்கும் திருத்தந்தை, இச்செபவேளையில் நன்றி கூறினார்.

மே 31, இத்திங்கள் மாலையில் வத்திக்கான் தோட்டத்தில் நடைபெற்ற இப்பக்தி முயற்சியில், முதல் கட்டமாக, ஜெர்மனியின் Augsburg நகரில் வணங்கப்பட்டு வரும் 'சிக்கல்களைத் தீர்க்கும் கன்னி மரியா'வின் திருஉருவம் பவனியாக கொண்டுவரப்பட்டது. அப்பவனியில், Augsburg ஆயர் Bertram Johannes Meier அவர்கள் தலைமையில், சாரணர் படையினர், சில குடும்பங்கள், வித்தெர்போ நகரின் Santa Maria della Grotticella பங்கில், திருநற்கருணையை முதன் முதலாக வாங்கிய சிறார், இருபால் துறவியர், கத்தோலிக்க கழகத்தைச் சார்ந்த சில இளையோர், புதுமணத் தம்பதியர், கருவுற்ற தாய்மார், மற்றும், காதுகேளாதோர் குடும்பத்தினர் என, ஏறத்தாழ 300 பேர் பங்குபெற்றனர்.

மேலும், இந்த செபநிகழ்வில், செபமாலையின் ஒவ்வொரு பத்து மணி செபத்தையும், ஒரு சிக்கலுடன் தொடர்புபடுத்தி, வெவ்வேறு கருத்துக்களுக்காக மன்றாட்டுக்கள் எழுப்பப்பட்டன. இந்த பக்திமுயற்சியின் இறுதியில், Augsburg ஆயர், Meier அவர்கள், 'சிக்கல்களைத் தீர்க்கும் கன்னி மரியா'வின் திருஉருவப் படத்தின் பிரதியை, திருத்தந்தைக்கு பரிசாக வழங்கினார்.

"திருச்சபை கடவுளிடம் உருக்கமாக வேண்டியது" (திருத்தூதர் பணிகள் 12:5) என்ற மையக்கருத்துடன், புதிய வழி நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீட அவை, இந்த மாரத்தான் செபமாலை பக்தி முயற்சியை ஒருங்கிணைத்தது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 June 2021, 15:37