தேடுதல்

புதன் மறைக்கல்வியுரையின்போது - 090621 புதன் மறைக்கல்வியுரையின்போது - 090621 

திருத்தந்தையின் மறைக்கல்வியுரை - இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள்

இறைவேண்டலையும் தினசரி பணிகளையும் சமநிலைப்படுத்தி, ஆன்மீகப் பலனை அடைய முடியும் என்பதை, துறவு இல்ல பாரம்பரியம் நமக்குக் கற்றுத்தருகிறது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

இறைவேண்டல் குறித்த தன் புதன் மறைக்கல்வித்தொடரை அண்மைய சில வாரங்களாக, கோவிட்-19 பெருந்தொற்றுக் கட்டுப்பாட்டு விதிகளைப் பின்பற்றி, வத்திக்கானின் புனித தமாசோ வளாகத்தில் நடத்திவருகிறார் திருத்தந்தை பிரான்சிஸ். திருப்பயணிகளின் கூட்டம், கோவிட் விதிகளுக்கு இயைந்தவகையில், இடைவெளிவிட்டு அவ்வளாகத்தில் அமர்ந்திருக்க, ஜூன் 09, இப்புதன்கிழமையன்று, இறைவேண்டலில் நிலைத்திருப்பதன் முக்கியத்துவம் குறித்து தன் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ். புனித பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் மடலின் 5ம் பிரிவிலிருந்து ஒரு பகுதி, பல்வேறு மொழிகளில் முதலில் வாசிக்கப்பட்டது. அதன்பின், திருத்தந்தை தன் கருத்துக்களை வழங்கினார்.

எவரும் தீமைக்குப் பதில் தீமை செய்யாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுள் ஒருவருக்கொருவர் மட்டுமன்றி, எல்லாருக்கும், எப்பொழுதும் நன்மை செய்யவே நாடுங்கள்.  எப்பொழுதும், மகிழ்ச்சியாக இருங்கள்.  இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள். எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே. தூய ஆவியின் செயல்பாட்டைத் தடுக்க வேண்டாம். இறைவாக்குகளைப் புறக்கணிக்க வேண்டாம்.(1 தெச 5,15-20)

அன்பு சகோதரரே, சகோதரிகளே, இறைவேண்டல் குறித்த நம் மறைக்கல்வித்தொடரில் இன்று, இறைவேண்டலில் நிலைத்திருப்பதன் முக்கியத்துவம் குறித்து சிந்திப்போம். இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள் (1தெச.5,15-20) என்ற புனித பவுலின் வார்த்தைகளை ஆழ்ந்து தியானித்த திருஅவையின் ஆன்மீக எழுத்தாளர்கள், இடைவிடாது தொடர்ந்து இறைவேண்டலிலேயே நிலைத்திருப்பது சாத்தியமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர். இரஷ்ய தவ வாழ்வுப் பாரம்பரியம், 'இயேசு கிறிஸ்துவே, இறைமகனே, பாவியாகிய என் மீது இரக்கமாயிரும்' என்ற வார்த்தைகளை மீண்டும் மீண்டும் எடுத்துரைக்கும், இதயத்தின் இறைவேண்டலை உருவாக்கியது. இந்த வார்த்தைகள், நாம் சுவாசிக்கும் மூச்சுக்காற்றுபோல் இன்றியமையாத ஒன்றாக மாறின.   கிரேக்க துறவி Evagrius அவர்களோ, நாம் நம் தினசரி வேலைகளில் கவனமாக ஈடுபட்டிருந்தாலும், நம் இதயத்தில் இடைவிடாது நிலைத்து எரிந்து கொண்டிருக்கும் தீபத்திற்கு, இறைவேண்டலை ஒப்பிடுகிறார்.

இவ்வாறு, இறைவேண்டல், வாழ்வின் பின்னணியில் இருந்துகொண்டு, நம் வாழ்வின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆழமான அர்த்தத்தை வழங்கிக்கொண்டிருக்கிறது. நமக்கென நேரத்தை ஒதுக்க கடவுளால் முடிகின்றபோது, நாமும் அவருக்கென நேரத்தை ஒதுக்க முடியும். இறைவேண்டலையும் தினசரி பணிகளையும் சமநிலைப்படுத்தி, ஆன்மீகப் பலனை அடைய முடியும் என்பதை, ஆழ்நிலை தியான துறவு இல்லப் பாரம்பரியம் நமக்குக் கற்றுத்தருகிறது. இந்த சமநிலைப்பாட்டை நம் வாழ்விலும் ஏற்பதன் வழியாக, நாமும்,  இறைவனோடு ஒன்றிப்பில் வளர்வதோடு, தெய்வீக அன்பின் நெருப்பு நம் இதயங்களில் தொடர்ந்து எரிந்துகொண்டிருப்பதை காக்க முடியும்.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வியுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 11ம் தேதி, இவ்வெள்ளிக்கிழமையன்று திருஅவையில் சிறப்பிக்கப்பட உள்ள, இயேசுவின் தூய்மைமிகு இதயம் பெருவிழா குறித்து நினைவூட்டி, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 June 2021, 11:22

அண்மைய மறைக்கல்வியுரைகள்

அனைத்தையும் படிக்கவும் >