மறைக்கல்வியுரை : கலாத்தியருக்கு எழுதிய திருமடலில் படிப்பினைகள்

புனித பவுல், இயேசு கொணர்ந்த புதியவைகளையும், அதன் வெளிப்பாடாக நம் வாழ்வில் தூய ஆவியார் கொணர்ந்த கனிகளையும் எடுத்துரைக்கிறார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

கடந்த பல வாரங்களாக இறைவேண்டல் குறித்த ஒரு தொடரை தன் புதன் மறைக்கல்வியுரைகளில் வழங்கி வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாரம், வத்திக்கானின் புனித தாமாசோ வளாகத்தில் குழுமியிருந்த விசுவாசிகளுக்கு, புனித பவுல், கலாத்தியருக்கு எழுதிய திருமடலில் காணப்படும் கிறிஸ்தவ படிப்பினைகள் குறித்த ஒரு புதியத் தொடரை துவக்கினார்.

அன்பு சகோதரர்ரே, சகோதரிகளே, புனித பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமடலில் காணப்படும் முக்கிய கருத்துக்கள் குறித்த புதிய மறைக்கல்வித் தொடர் ஒன்றை இன்று துவக்குவோம். புனித பவுல் என்ற திருத்தூதரின் ஆள்தன்மை குறித்தும், கிறிஸ்துவின் அருள்கொடை, அது கொணரும் சுதந்திரம், தூய ஆவியாரில் நாம் கொள்ளும் புதிய வாழ்வில் நம்மிடமிருந்து எதிர்பார்க்கப்படுபவை போன்ற, கிறிஸ்தவச் செய்தியின் மையக் கருத்துக்கள் குறித்தும்  அறிந்துகொள்ள இத்திருமடல் முக்கியமானது. கலாத்தியருக்கு தான் போதித்த நற்செய்தியை மீண்டும் இங்கு வலியுறுத்தி துவக்குகின்றார் புனித பவுல். மனம்திரும்பிய புறவினத்தார் அனைவரும் மோசேயின் சட்டவிதிகளைப் பின்பற்றவேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவர்களின் போதனையால் கலக்கமுற்றிருந்த கலாத்திய இளம் திருஅவைக்கு புனித பவுல் வழங்கிய உறுதியுடன்கூடிய மேய்ப்புப்பணி அக்கறையை இத்திருமடலில் காண்கிறோம்.

இதற்கு பதிலுரையாக, புனித பவுல், இயேசு கொணர்ந்த புதியவைகளையும், அதன் வெளிப்பாடாக நம் வாழ்வில் தூய ஆவியார் கொணர்ந்த கனிகளையும் எடுத்துரைக்கிறார். சிலுவையில் அறையப்பட்டு, உயிர்த்தெழுந்த இயேசு கொணர்ந்த விடுதலையை எவ்வாறு  நம்பத்தகுந்தவகையில் பகிர்வது என்பதை புனித பவுலின் கலாத்தியருக்கு எழுதிய திருமடலை ஆழமாக தியானிப்பதன்வழி தெரிந்து கொள்ளலாம். நம் மீட்பராம் இயேசு கொணர்ந்த விடுதலையை, பணிவுடனும், உடன்பிறந்த உணர்வுடன்கூடிய அன்புடனும், வரலாற்றில் திருஅவையின் தொடர்பயணத்தின் ஒவ்வொரு வேளையிலும், தூய ஆவியாரின் வழிகாட்டுதலை ஏற்பதிலும் பகிர்வோம்.

இவ்வாறு, தன் மறைக்கல்வியுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 24ம் தேதி, இவ்வியானன்று திருஅவையில் சிறப்பிக்கப்படும் புனித திருமுழுக்கு யோவானின் பிறப்புவிழா குறித்து நினைவூட்டி, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 June 2021, 12:02

அண்மைய மறைக்கல்வியுரைகள்

அனைத்தையும் படிக்கவும் >