தென் கொரிய திருத்தூதுப் பயணத்தில் ஆயர்Lazzaro தென் கொரிய திருத்தூதுப் பயணத்தில் ஆயர்Lazzaro  

அருள்பணியாளர் பேராயத்தின் புதிய தலைவர் ஆயர் Lazzaro You

தென் கொரியாவில், 1951ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி பிறந்த, ஆயர் Lazzaro You Heung-sik அவர்கள், 2005ம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதியிலிருந்து Daejeon மறைமாவட்ட ஆயராகப் பணியைத் துவக்கினார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

தென் கொரியாவின் Daejeon மறைமாவட்ட ஆயர் Lazzaro You Heung-sik அவர்களை, அருள்பணியாளர் பேராயத்தின், புதிய தலைவராக, ஜூன் 11, இவ்வெள்ளியன்று, நியமித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆயர் Lazzaro You Heung-sik

தென் கொரியாவில், 1951ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி பிறந்த, ஆயர் Lazzaro You Heung-sik அவர்கள், 1979ம் ஆண்டு அருள்பணித்துவ வாழ்வுக்கு திருநிலைப்படுத்தப்பட்டார். 2003ம் ஆண்டில் Daejeon மறைமாவட்ட வாரிசு ஆயராக நியமிக்கப்பட்ட இவர், 2005ம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதியிலிருந்து அம்மறைமாவட்ட ஆயராகப் பணியைத் துவக்கினார்.

அருள்பணியாளர் பேராயத்தின் தலைவராக, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 69 வயது நிரம்பிய, ஆயர் Lazzaro அவர்கள், தலைமைப் பொறுப்பை ஏற்கும்வரை, அப்பேராயத்தின் இப்போதைய தலைவர் கர்தினால் Beniamino Stella அவர்கள், தொடர்ந்து பணியில் இருப்பார் என்றும் திருத்தந்தை அறிவித்துள்ளார்.

79 வயது நிரம்பிய கர்தினால் Beniamino Stella அவர்கள், 2013ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதியன்று, அருள்பணியாளர் பேராயத்தின் தலைவராகப் பணியைத் தொடங்கினார்.

அருள்பணியாளர் பேராயம்

திருத்தந்தை 4ம் பயஸ் அவர்கள், 1564ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதி, அருள்பணியாளர் அவையை உருவாக்கினார். பின்னர், 1587ம் ஆண்டு திருத்தந்தை 5ம் சிக்ஸ்துஸ் அவர்கள் அதன் பணிகளை விரிவுபடுத்தினார். பின்னர், திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்கள், 1967ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி, அருள்பணியாளர் அவையை, அருள்பணியாளர் பேராயம் என்று பெயரிட்டார்.

மேலும், ஜூன் 11, இவ்வெள்ளியன்று, சிராகூசா நகரின் திருத்தூதர் பவுல் பங்குத்தளத்தின் இளையோரை, வத்திக்கானின் திருத்தந்தையர் அறையில் சந்தித்து, தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

COMECE எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆயர் குழுவின் பிரதிநிதிகளையும் இவ்வெள்ளியன்று திருத்தந்தை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 June 2021, 14:58