திருத்தந்தை பிரான்சிஸ், உலக லூத்தரன் கூட்டமைப்பின் பிரதிநிதிகள்  திருத்தந்தை பிரான்சிஸ், உலக லூத்தரன் கூட்டமைப்பின் பிரதிநிதிகள்  

ஒன்றிப்பை நோக்கிய பயணத்தில் இயேசு உடன்வருகிறார்

மேற்கத்திய கிறிஸ்தவத்தில் பிரிவினையைத் தடுக்கும் ஒரு முயற்சியாக வெளியிடப்பட்ட Augsburg Confession அறிக்கை, லூத்தரன் கிறிஸ்தவர்களின் நம்பிக்கை, அவர்களின் போதனை, ஆகியவற்றை விளக்குகிறது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மோதல்கள் பாதையை தவிர்த்து, ஒன்றிப்புப் பாதையில் தொடர்ந்து பயணிக்குமாறு லூத்தரன், மற்றும், கத்தோலிக்கரை ஊக்கப்படுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்பயணத்தில் இயேசு உடன்வருகிறார் என்று கூறினார்.

லூத்தரன் கிறிஸ்தவ சபையின் முதன்மையான நம்பிக்கை அறிக்கை மற்றும், பிரிந்த கிறிஸ்தவ சபையின் சீர்திருத்தத்தின் மிக முக்கிய ஏடுகளில் ஒன்றாக அமைந்துள்ள Augsburg Confession வெளியிடப்பட்டதன் 491ம் ஆண்டையொட்டி, ஜூன் 25, இவ்வெள்ளியன்று, திருப்பீடத்தில் தன்னை சந்தித்த, உலக லூத்தரன் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு, உரையாற்றுகையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறினார்.

மேற்கத்திய கிறிஸ்தவத்தில் பிரிவினையைத் தடுக்கும் ஒரு முயற்சியாக வெளியிடப்பட்ட Augsburg Confession அறிக்கை, லூத்தரன் கிறிஸ்தவர்களின் நம்பிக்கை, அவர்களின் போதனை, ஆகியவற்றை விளக்குகிறது.

1980ம் ஆண்டில், கத்தோலிக்கரும், லூத்தரன் கிறிஸ்தவர்களும் ஒன்றுசேர்ந்து, பொதுவான நம்பிக்கை குறித்து ஏற்றுக்கொண்ட அறிக்கையில், ஒரே உடல், ஒரே திருமுழுக்கு, ஒரே கடவுள் என்பது மையப்படுத்தப்பட்டதுபற்றி நினைவுபடுத்திய  திருத்தந்தை, இந்த மூன்று கூறுகள்பற்றி எடுத்துரைத்தார்.

ஒரே கடவுள்

325ம் ஆண்டில் நீசே பொதுச்சங்கத்தில் வெளிப்படுத்தப்பட்டதுபோன்று, நாமும் மூவொரு கடவுளில் நம் பொதுவான நம்பிக்கையைக் கொண்டிருக்கிறோம் என்றுரைத்த  திருத்தந்தை, இந்த நம்பிக்கை அறிக்கை, கத்தோலிக்கருக்கும், லூத்தரன் கிறிஸ்தவர்களுக்கும் மட்டுமல்லாமல், நம் ஆர்த்தடாக்ஸ் சகோதரர்களுக்கும், மற்றும் பல கிறிஸ்தவ குழுமங்களுக்கும் பொதுவான கருவூலம் என்று குறிப்பிட்டார்..

2025ம் ஆண்டில் இடம்பெறவுள்ள, நீசே பொதுச்சங்கத்தின் 1700ம் ஆண்டு நிறைவை நாம் அனைவருமே கொண்டாடவேண்டும், இது, கிறிஸ்தவ ஒன்றிப்புப் பாதைக்கு, ஒரு புதிய உந்துதலை அளிக்கும் என்ற தன் நம்பிக்கையை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவர்கள் மத்தியில் ஒன்றிப்பு பேணிவளர்க்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கிறிஸ்துவில் ஒரே திருமுழுக்கு

அனைத்து கிறிஸ்தவர்களையும் ஒன்றிணைக்கும் திருமுழுக்கு அருளடையாளம், நம்மிடையே பிரிவினைகளைக் களைந்து, பழைய நினைவுகளைக் குணப்படுத்தி, ஒப்புரவுப் பாதையில் முன்னேறிச் செல்ல அடித்தளமாக அமைந்துள்ளது என்றுரைத்த திருத்தந்தை, கிறிஸ்தவ ஒன்றிப்பு, திருவருளின் பயணம் என்று கூறினார்.

அது மனிதர் மத்தியில் நிலவும் உரையாடல்கள் மற்றும், ஒப்பந்தங்களைச் சார்ந்தது அல்ல, மாறாக, அது நம் நினைவுகளையும் இதயங்களையும் குணப்படுத்தும் கடவுளின் அருளைச் சார்ந்தது என்று கூறியத் திருத்தந்தை, கிறிஸ்துவின் ஒரே உடல் என்பது பற்றியும் விளக்கினார்.

கிறிஸ்துவின் ஒரே உடலை, நம் பிரிவினைகளால் காயப்படுத்தியுள்ளோம் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கத்தோலிக்கரும், லூத்தரன் கிறிஸ்தவர்களும், மோதலை விடுத்து ஒன்றிப்பை பேரார்வத்தோடு மேற்கொள்ளவும், ஒன்றிணைந்த திருஅவையாக, திருப்பணி மற்றும், திருநற்கருணை கொண்டாட்டத்தில் ஈடுபடும் வழிகளை ஆராயவும் அழைப்புவிடுத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 June 2021, 15:22