தேடுதல்

புதன் மறைக்கல்வியுரை 190521 புதன் மறைக்கல்வியுரை 190521 

திருத்தந்தை: சோதனைகள் மத்தியில் இடைவிடாமல் செபிக்க...

படிப்பு, மற்றும், வேலை போன்று, இறைவேண்டலுக்கும், ஒருமுகச் சிந்தனையும், மனக்கட்டுப்பாடும் தேவைப்படுகின்றன

மேரி தெரேசா: வத்திக்கான்

மே 19, இப்புதன் உள்ளூர் நேரம் காலை 9.15 மணியளவில், வத்திக்கானின் புனித தமாசோ வளாகத்தில், கோவிட்-19 பெருந்தொற்று விதிமுறைகளுக்கு உட்பட்டு அமர்ந்திருந்த விசுவாசிகளுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவேண்டலில் நாம் பொதுவாக எதிர்கொள்ளும் கவனச்சிதைவு, ஆன்மீக வெறுமை, சோம்பல் ஆகிய பிரச்சனைகள் பற்றி, தன் மறைக்கல்வியுரையை வழங்கினார்.  இந்நிகழ்வில் முதலில், லூக்கா நற்செய்தி, பிரிவு 21லிருந்து ஒரு சிறிய பகுதி வாசிக்கப்பட்டது. அதற்குப்பின், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதலில், இத்தாலியத்தில் தன் மறைக்கல்வி உரையை ஆற்றியபின், அராபியம் உட்பட, சில ஐரோப்பிய மொழிகளில் அவரின் உரை இடம்பெற்றது.

இயேசு, “உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தாலும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறும் அந்நாள் திடீரென வந்து ஒரு கண்ணியைப்போல் உங்களைச் சிக்க வைக்காதவாறும் எச்சரிக்கையாய் இருங்கள். மண்ணுலகு எங்கும் குடியிருக்கும் எல்லார்மீதும் அந்நாள் வந்தே தீரும். ஆகையால் நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்புவதற்கும் மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கும் எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள் என்றார்” (லூக்.21:34-36).

திருத்தந்தையின் புதன் மறைக்கல்வியுரை

அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே, கிறிஸ்தவ இறைவேண்டல் பற்றிய நம் புதன் மறைக்கல்வித் தொடரில், இறைவேண்டல் செய்யும்போது, பொதுவாக நாம் எதிர்கொள்ளும் சில இன்னல்கள் பற்றி இன்று சிந்திப்போம். இவற்றில் முதல் இன்னல் கவனச்சிதைவு. படிப்பு, மற்றும், வேலை போன்று, இறைவேண்டலுக்கும், ஒருமுகச் சிந்தனையும், மனக்கட்டுப்பாடும் தேவைப்படுகின்றன. இதற்கு, விழிப்புணர்வு என்ற புண்ணியத்தை வளர்த்துக்கொள்ள நாம் அழைக்கப்படுகின்றோம். இதன் வழியாக, நம் வாழ்வில் ஒவ்வொரு நாளும், ஆண்டவரின் வருகையை எதிர்பார்த்து, அவர்    விருப்பத்தை ஆற்றுவதில் கவனம் செலுத்துகிறோம். இறைவேண்டல் செய்யும்போது பொதுவாக நாம் எதிர்கொள்ளும் இரண்டாவது இன்னல், ஆன்மீக வறட்சி. அதாவது, நம் இதயங்கள் வறட்சியான நேரங்களை எதிர்கொள்ளும்போது, நமக்கு ஏற்படும் ஆன்மீக வெறுமை. இதனையே கத்தோலிக்க மறைக்கல்வி ஏடும், “சிந்தனைகள், நினைவுகள், மற்றும், உணர்வுகள் ஆகியவற்றுக்காக, ஏன் ஆன்மீகம் சார்ந்தவற்றுக்காகக்கூட” (எண்.2731) எவ்வித ஆர்வமின்றி இருக்கும் நிலை என்று குறிப்பிட்டுள்ளது. நம்பிக்கை வாழ்வு, ஆன்மீக ஆறுதலின் நேரங்களை மட்டுமல்லாமல், ஆண்டவரின் துன்பங்களில் நாம் பங்குகொள்ளும்போது ஏற்படும் ஆன்மீக வறட்சியையும் உள்ளடக்கியுள்ளது என்பதை ஆன்மீகப் போதகர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். அடுத்து, இறைவேண்டல் செய்யும்போது பொதுவாக நாம் எதிர்கொள்ளும் மூன்றாவது இன்னல், ஒருவித ஆன்மீகச் சோம்பல். இது, இறைவேண்டலை முற்றிலுமாகக் கைவிடும் ஓர் ஆபத்தான சோதனைக்கு நம்மை இட்டுச்செல்கின்றது. புனிதர்கள், தங்களின் இறைவேண்டலில் இதேமாதிரியான பிரச்சனைகளைச் சந்தித்தனர். ஆன்மீக வாழ்வில் காணப்படும் உண்மையான முன்னேற்றம், பல கடின துன்பங்களுக்கு மத்தியிலும், உறுதியான மனத்தோடு நிலைத்திருந்த யோபு போன்று, தினமும் விடாமனஉறுதியோடு நிலைத்திருப்பதிலிருந்து கிடைக்கின்றது என்பதையும், புனிதர்கள் நமக்குச் சொல்லித்தருகின்றனர். நம் தனிப்பட்ட வாழ்வில் இறைவேண்டலில் முன்னேற நாம் முயற்சிக்கும்போது, அன்புநிறை இறைத்தந்தை, தம் மகன், மற்றும், தூய ஆவியார் வழியாக, நமக்கு அருள் பொழிவார் என்பதில் நம்பிக்கை வைத்து, மனஉறுதியோடு  நாம் இருக்க மன்றாடுவோம். நமக்குத் தேவைப்படும் இறைவேண்டல், நாம் இறைவனிடம் மிக நெருங்கிச் செல்ல அழைத்துச்செல்லவேண்டும் என்பதே.

புதன் மறைக்கல்வியுரை 190521
புதன் மறைக்கல்வியுரை 190521

இவ்வாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவேண்டலில், நாம் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனைகள் மத்தியில், வெதுவெதுப்பான இதயத்தோடு இல்லாமல், விடாமுயற்சியோடு செபிக்கவேண்டும் என்பது பற்றி எடுத்துரைத்தார். மே 23, வருகிற ஞாயிறன்று கொண்டாடப்படவிருக்கும் தூய ஆவியார் பெருவிழாவுக்கு நாம் தயாரித்துவரும் இவ்வேளையில், அவரின் கொடைகள், திருப்பயணிகள், மற்றும், அவர்களின் குடும்பங்களை நிறைக்கட்டும் என்று செபித்து, தன் அப்போஸ்தலிக்க ஆசிரையும் திருத்தந்தை அளித்தார்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 May 2021, 14:05

அண்மைய மறைக்கல்வியுரைகள்

அனைத்தையும் படிக்கவும் >