திருத்தந்தை பிரான்சிஸ் காணொளிச் செய்தி வழங்குதல் - கோப்புப் படம் திருத்தந்தை பிரான்சிஸ் காணொளிச் செய்தி வழங்குதல் - கோப்புப் படம் 

அர்ப்பணிப்பில் புரிந்துகொள்ளப்படும் துறவு வாழ்வு

திருத்தந்தை : உண்மை நிலைகளோடு உரையாடல்களை மேற்கொள்ள, துறவுவாழ்வுத் தவறும்போது, அது பெரும் சுமையாக மாறுகிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இத்தாலியில், தேசிய அளவில், துறவு வாழ்வின் ஐம்பதாவது, வாரம் சிறப்பிக்கப்படுவதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், காணொளி வடிவில், சிறப்புச் செய்தி ஒன்றை வழங்கியுள்ளார்.

கோவிட் பெருந்தொற்றின் காரணமாக, கடந்த ஆண்டு இடம்பெற முடியாமல் இருந்த 49வது தேசிய துறவு வாழ்வின் வாரம், இவ்வாண்டு, 50வது வாரத்துடன் இணைந்து கொண்டாடப்படுவதை தன் காணொளிச் செய்தியில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தகையக் கொண்டாட்டங்கள் இடம்பெறுவதை துவக்கிவைத்த, தற்போதைய கர்தினால் Aquiloso Bocos Merino அவர்களுக்கு தன் பாராட்டுக்களை வெளியிட்டார்.

அர்ப்பண வாழ்வு என்பது, அதன் பயணத்திலும், ஒருவர் தன்னையே அர்ப்பணிப்பதிலும் புரிந்துகொள்ளப்படுகின்றது, மற்றும், உண்மை நிலைகளுடன் மேற்கொள்ளப்படும் உரையாடலில் புரிந்து கொள்ளப்படுகின்றது என தன் செய்தியில் கூறும் திருத்தந்தை, உண்மை நிலைகளோடு உரையாடல்களை மேற்கொள்ள துறவுவாழ்வுத் தவறும்போது, அது பெரும் சுமையாக மாறுகிறது என மேலும் கூறியுள்ளார்.

துவக்க காலத்தில் தங்கள் துறவு சபை கொண்டிருந்த தனிவரத்தின் துணையுடன் பயணம் செய்யும் பாதையில், உண்மை நிலைகளுடனான உரையாடலில், புதுப்பித்தலின் அவசியம் குறித்தும் தன் காணொளிச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அச்சத்தைக் கைவிட்டு, ஒவ்வொரு துறவு சபையும் தன் துவக்ககால தனிவரத்தை உயிர் துடிப்புடன் கொண்டிருப்பது என்பது, அது முன்னோக்கிச் செல்வதையும், வளர்வதையும் குறித்து நிற்கின்றது என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நமக்கு வழிகாட்டும் தூய ஆவியாருடன் கலந்துரையாடலை நடத்தி, முன்னோக்கிச் செல்வோம் எனக் கூறியுள்ளார்.

துறவு வாழ்வின் வளர்ச்சிப் பாதையில், விவேகம், மற்றும் இறைவேண்டலின் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

எல்லைகளையும், தடைகளையும், சுற்றியிருப்பவைகளையும் கண்டு வீண் அச்சம் கொள்ளாமல், தூய ஆவியார் நம்மோடு உரையாடவிருக்கும் அப்பகுதியிலேயே நடைபோடுவோம் என்ற அழைப்பையும் முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூய ஆவியாரின் வளையத்திற்குள்ளயே எப்போதும் தயாராக இருங்கள் என்ற அழைப்பையும், தன் காணொளிச் செய்தியில் முன்வைத்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 May 2021, 15:04