பிரான்ஸ் நாட்டு சாரணர் இயக்கத்தினர் சந்திப்பு பிரான்ஸ் நாட்டு சாரணர் இயக்கத்தினர் சந்திப்பு 

பிரான்ஸ் நாட்டு சாரணர் இயக்கத்திற்கு திருத்தந்தை உரை

பிரான்ஸ் நாட்டு சாரணர் இயக்கத்தினர், உயிர்த்துடிப்புள்ள கிறிஸ்தவர்களாக, பிரமாணிக்கமுள்ள சாரணர்களாக வாழ திருத்தந்தை அழைப்பு

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பிரான்ஸ் நாட்டில், “கத்தோலிக்க சாரணர் இயக்கம் (Scouts Unitaires de France)” ஒன்று துவக்கப்பட்டதன் ஐம்பதாம் ஆண்டையொட்டி, மே 14, இவ்வெள்ளியன்று, திருப்பீடத்தில், தன்னை சந்தித்த, அந்த இயக்கத்தின் ஐம்பது பிரதிநிதிகளுக்கு உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த இயக்கம், மக்கள் மத்தியில், நம்பிக்கையை விதைக்கவும், குழுமவாழ்வின் மதிப்பைக் கண்டுணரவும் ஆற்றிவரும் நற்பணிகளை ஊக்கப்படுத்துவதாகத் தெரிவித்தார்.

மனித உறவுகளும், நம்பகத்தன்மையுள்ள எடுத்துக்காட்டான மனிதர்களும் குறைந்துவரும் ஒரு சமுதாயத்தில், குறிப்பாக, தற்போதைய பெருந்தொற்று, உடன்பிறந்த உணர்வு, மற்றும், புதிய நட்பை வளர்ப்பதற்குரிய வாய்ப்புக்களைக் குறைத்துள்ள இக்காலக்கட்டத்தில், சாரணர் இயக்கம், இளையோருக்கு, உற்சாகமளிக்கும் ஓர் அடையாளமாக விளங்குகின்றது என்று திருத்தந்தை கூறினார்.

இந்த இயக்கத்தின் மூத்த உறுப்பினர்கள், இளையோர், கனவு காணவும், அதன்படி செயல்படவும், வருங்காலத்தை நம்பிக்கையோடு நோக்கவும், ஆண்டவரிடமிருந்து பெற்ற திறமைகளைக் கண்டுணர்ந்து, அவற்றைப் பலனுள்ள முறையில் செலவழிக்கவும்  அழைப்பு விடுத்துவருவதை, திருத்தந்தை பாராட்டிப் பேசியுள்ளார்.

இந்த உலகை, இன்னும் மனிதம் நிறைந்த ஓர் இடமாகவும், திருஅவையை, கடையெல்லைகளுக்குக் கூடுதலாகச் செல்லும் ஒன்றாகவும் அமைப்பதற்குப் பணியாற்ற, சாரணர் இயக்கம் அழைக்கப்பட்டுள்ளது என்றுரைத்த  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த இயக்கத்தினர் இயற்கையோடு கொண்டிருக்கும் உறவு, மற்றவர், சுற்றுச்சூழலை மதித்துப் பாதுகாப்பதற்கு ஒரு செய்தியாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.

பிரான்ஸ் நாட்டு சாரணர் இயக்கம்
பிரான்ஸ் நாட்டு சாரணர் இயக்கம்

சுதந்திரமும், பொறுப்பும் உள்ள மனிதர்களாகவும், மற்றவரையும், சுற்றுச்சூழலையும் மதிக்கின்றவர்களாகவும் இளையோர் மாறுவதற்கு, இந்த இயக்கத்தின் முன்னோர்களிடமிருந்து பெற்ற பாரம்பரியங்களுக்கு ஒத்திணங்கும் முறையில்,  அவர்களை உருவாக்குவதன் அர்ப்பணத்தைப் புதுப்பிப்பதற்கு, இந்த யூபிலி ஆண்டு நல்லதொரு வாய்ப்பாக அமைந்துள்ளது என்றும், திருத்தந்தை கூறினார்.

இந்த இயக்கம், கடந்த ஐம்பது ஆண்டுகளாக, சமுதாயத்திற்கும், திருஅவைக்கும் ஆற்றிவருகின்ற பணிகளில், எல்லாவற்றுக்கும் மேலாக, இறைவேண்டல் வழியாக, வெளிப்படுத்தியுள்ள சான்றுகளுக்கு கடவுளுக்கு நன்றி கூறுவதாகவும் திருத்தந்தை தெரிவித்தார்.

இந்த பிரான்ஸ் நாட்டு சாரணர் இயக்கத்தினரையும், அவர்களின் குடும்பத்தினரையும், அன்னை மரியாவின் பாதுகாவலில் அர்ப்பணித்து செபிப்பதாக உரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனக்காகச் செபிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 May 2021, 16:12