புதன் மறைக்கல்வி உரை 190521 புதன் மறைக்கல்வி உரை 190521 

இறைவேண்டல், பெந்தக்கோஸ்து, Laudato Sí - டுவிட்டர்கள்

"21ம் நூற்றாண்டின் துவக்கத்தில் வாழ்ந்த மனித சமுதாயம், பூமிக்கோளத்தைக் குறித்து பொறுப்புணர்வுடன் செயலாற்றியது என்று நம் சந்ததி நினைவுகூரப்படவேண்டும்" –திருத்தந்தையின் Laudato Sí டுவிட்டர் பதிவு

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மே 19 இப்புதனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவேண்டலில் நாம் எதிர்கொள்ளும் கவனச்சிதைவு, ஆன்மீக வறுமை, சோம்பல் ஆகிய பிரச்சனைகளைக் குறித்து தன் மறைக்கல்வி உரையை வழங்கியதையடுத்து, இம்மூன்று பிரச்சனைகளில் ஒன்றான கவனச்சிதைவு குறித்து, டுவிட்டர் செய்தியொன்றையும் வெளியிட்டார்.

"இறைவேண்டலில் நாம் அடையும் கவனச்சிதைவைக் குறித்து உணர்ந்ததும், அதை, நேருக்கு நேர் சந்திப்பதற்கு உதவியாக, நம் உள்ளங்களை இறைவன் தூய்மையாக்கும்வண்ணம், அதை, அவரிடம் பணிவுடன் அர்ப்பணிக்கவேண்டும்" என்ற சொற்களை திருத்தந்தை தன் முதல் டுவிட்டர் பதிவாக வெளியிட்டார்.

மே 23, வருகிற ஞாயிறன்று நாம் கொண்டாடும் பெந்தக்கோஸ்து திருவிழாவை நினைவுறுத்தி, திருத்தந்தை பதிவிட்ட இரண்டாவது டுவிட்டர் செய்தியில், "நாம் சந்திக்கும் பிரச்சனைகளை ஞானத்துடனும், உறுதியோடும் சந்திப்பதற்கு, தூய ஆவியாரின் கொடைகளை இறைவன் நம்மீது பொழிந்தருள மன்றாடுவோம்" என்ற சொற்கள் இடம்பெற்றிருந்தன.

மே 16 கடந்த ஞாயிறு துவங்கிய Laudato Sí வாரத்தையொட்டி, கடந்த மூன்று நாள்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டு வந்த டுவிட்டர் செய்திகளையடுத்து, மே 19, இப்புதனன்று இதே கருத்துடன், மற்றொரு டுவிட்டர் செய்தியை வெளியிட்டிருந்தார்.

"நிலத்தடி எரிசக்தியைப் பயன்படுத்தி இயங்கிவரும் தொழிநுட்பத்தை உடனடியாக நாம் மாற்றவேண்டும். 21ம் நூற்றாண்டின் துவக்கத்தில் வாழ்ந்த மனித சமுதாயம், பூமிக்கோளத்தைக் குறித்து பொறுப்புணர்வுடன் செயலாற்றியது என்று நம் சந்ததி நினைவுகூரப்படவேண்டும்" என்ற சொற்கள் திருத்தந்தை இப்புதனன்று வெளியிட்ட 3வது டுவிட்டர் பதிவில் இடம்பெற்றன.

Laudato Sí திருமடலில், 2015ம் ஆண்டு மே 24ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கையெழுத்திட்டதன் 5ம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும்வண்ணம், இவ்வாண்டு, மே 16, ஞாயிறு முதல், 23, வருகிற ஞாயிறு முடிய, Laudato Sí  வாரம் கொண்டாடப்படுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 May 2021, 14:40