தேடுதல்

லொரேத்தோ அன்னை மரியா லொரேத்தோ அன்னை மரியா  (AERONAUTICA MILITARE)

இந்த மே மாதத்தில், “மாரத்தான்” செபங்களைத் தொடர்வோம்

மே 09, இஞ்ஞாயிறன்று, இத்தாலியின் லொரேத்தோ அன்னை மரியா திருத்தலத்தில், மூத்தகுடிமக்களுக்காக செபமாலை செபிக்கப்படும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் இவ்வுலகினின்று முற்றிலும் ஒழியவேண்டும் என்று, இந்த மே மாதத்தில், அன்னை மரியாவிடம், செபமாலை பக்திமுயற்சி வழியாக மன்றாடுவோம் என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று, மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

“இந்த மே மாதத்தில், உலகின் முக்கியமான அன்னை மரியா திருத்தலங்கள் வழியாக,  “மாரத்தான்” செபங்களைத் தொடர்வோம். இன்று நண்பகலில், இத்தாலியின் பொம்பெய் அன்னை மரியா திருத்தலத்தில், செபமாலை அன்னை மரியாவை நோக்கி எழுப்பப்படும்  வேண்டுதலில், ஆன்மீக முறையில் பங்குகொள்ள அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்” என்ற சொற்கள், மே 08, இச்சனிக்கிழமையன்று, திருத்தந்தை வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

உலகெங்கும் கோவிட்-19 பெருந்தொற்று முடிவுக்கு வரவேண்டும் என்ற நோக்கத்திற்காக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்த அழைப்பின்பேரில், இந்த மே மாதத்தில், உலகின் முப்பது அன்னை மரியா திருத்தலங்களில், மாரத்தான் செபமாலை பக்திமுயற்சி நடைபெற்று வருகிறது.

புதியவழி நற்செய்தி அறிவிப்பு திருப்பீட அவை, மாரத்தான் செபமாலை பக்திமுயற்சி நடைபெறும் இந்த முப்பது திருத்தலங்களின் பெயர்களையும், ஒவ்வொரு திருத்தலத்திலும் வேண்டப்படும் கருத்துக்களையும் அறிவித்துள்ளது.

இந்த ஏற்பாட்டின்படி, மே 08, இச்சனிக்கிழமையன்று அர்ஜென்டீனா நாட்டு லுஹான் அன்னை மரியா திருத்தலத்தில், ஊடகத்துறையில் பணியாற்றும் அனைவருக்காகவும் செபமாலை செபிக்கப்பட்டது. மே 09, இஞ்ஞாயிறன்று, இத்தாலியின் லொரேத்தோ அன்னை மரியா திருத்தலத்தில், மூத்தகுடிமக்களுக்காகச் செபமாலை செபிக்கப்படுகிறது.

08 May 2021, 15:13