உரோம் Scholas Occurrentes  தலைமையகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் உரோம் Scholas Occurrentes தலைமையகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் 

போர் இடம்பெறும் பகுதியில் அரசியல் தோல்வியடைகின்றது

தண்ணீர் ஓடும்போது தூய்மையாக இருக்கும், அது தேங்கி நிற்கும்போது மாசடையும் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உரோம் மாநகரில் அமைந்துள்ள, உலகளாவிய Scholas Occurrentes பாப்பிறை நிறுவனத்தின் தலைமையகத்திற்கு, மே 20, இவ்வியாழனன்று சென்று, அந்த நிறுவனம் மேற்கொண்டுள்ள புதிய முயற்சிகளை ஆசிர்வதித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

Scholas Occurrentes அமைப்பின், உரோம் தலைமையகத்தில், இளையோர், மற்றும், பலரைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டின் வாஷிங்டன், இஸ்பெயின் நாட்டின் வலென்சியா, அர்ஜென்டீனா நாட்டின் Chaco, ஆஸ்திரேலியாவின் சிட்னி ஆகிய நகரங்களில், புதிய நடவடிக்கைகள் துவக்கப்படுவதை அறிவித்தார்.

இளையோர் எவ்வாறு அரசியலில் மாற்றம் கொணரமுடியும் என்று, ஓர் இளைஞர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்தை, போர்கள் இடம்பெறும் பகுதிகளில் அரசியல் தோல்வியடைகின்றது, போரைத் தவிர்ப்பதற்கு கலந்துரையாடலில் ஈடுபட முடியாத ஓர் அரசியல், தோல்வியடைந்த அரசியல் என்று கூறினார்.  

இந்த அமைப்பில் கல்விசார்ந்த திட்டங்களில் பங்குபெறும் இளையோரில் சிலர், பனியன்கள் உட்பட சில பரிசுகளை திருத்தந்தைக்கு வழங்கினர். குறிப்பாக, இரு இத்தாலிய இளைஞர்கள், வாழ்வின் மரம், மரத்தாலான பழங்கால யாழ்போன்ற இசைக்கருவி ஆகிய இரண்டையும் திருத்தந்தையிடம் காண்பித்து, அவற்றில் ஒன்றைத் தெரிவுசெய்யுமாறு கூறினர்.

அர்ஜென்டீனாவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட Scholas Occurrentes அமைப்பு, தற்போது உலகளாவிய அமைப்பாக, 190 நாடுகளில் பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது.

சந்திப்பு கலாச்சாரத்தை உருவாக்கவும், இளையோர், அர்த்தமுள்ள முறையில் கல்வி கற்கவும் உதவும் நோக்கத்தில், Scholas Occurrentes அமைப்பு துவக்கப்பட்டது. 

பெருந்தொற்று காலத்தில் கடினமாக உழைக்கின்ற இளையோரிடம், கடினமாக உழைப்பது என்றால் என்ன என்ற கேள்வியை எழுப்பிய திருத்தந்தை, உடலளவில் வெளியே செல்ல இயலாவிடினும், மனத்தளவில் செல்லமுடியும் என்று, ஒரு சிறுவன் பதில் கூறியதையடுத்து, ஒருவர் தனக்குள்ளே முடங்கிப்போனால், மோசமடைவார், அதனால் வெளியே சென்று பணியாற்றவேண்டும் என்றார்.

தண்ணீர், ஓடும்போது, தூய்மையாக இருக்கும், அது தேங்கி நிற்கும்போது, மாசடையும் என்பதை, இதற்கு ஓர் எடுத்துக்காட்டாக திருத்தந்தை கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 May 2021, 15:16