மடகாஸ்கரில் புதிய பேராலய அர்ச்சிப்பு - திருத்தந்தை செய்தி

Miandrivazo மறைமாவட்டம், வேளாண்மைக்கென மேற்கொண்டுள்ள, வாய்க்கால் திட்டத்திற்கு திருத்தந்தை பாராட்டு

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மே 1, இச்சனிக்கிழமை, தொழிலாளர் புனித யோசேப்பின் திருவிழாவன்று, மடகாஸ்கர்  தீவு நாட்டின் Miandrivazo நகரில், புதிதாக அர்ச்சிக்கப்பட்ட, புனித யோசேப்பு இணை-பேராலய நிகழ்விற்கு, காணொளிச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்

இந்த முக்கிய நிகழ்வில் பங்குகொள்ளும் மடகாஸ்கர் நாட்டின் அனைத்து நம்பிக்கையாளர்களுக்கு தன் ஆசிரையும் தெரிவித்துள்ள திருத்தந்தை, அந்நாட்டில் கல்வி, சமுதாய, மற்றும், சமயப் பணிகளை ஆற்றிவரும் அனைவருக்கும் தன் நல்வாழ்த்துக்களையும் வழங்கியுள்ளார்.

Miandrivazo மறைமாவட்ட மக்கள், வேளாண்மை செய்வதற்கு உதவியாக, அம்மறைமாவட்டம், மேற்கொண்டுள்ள வாய்க்கால்கள் அமைக்கும் திட்டத்தை, சிறப்பாகக் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ள திருத்தந்தை, புனித யோசேப்பு உங்கள் அனைவரையும் பாதுகாக்கவேண்டும் என்று செபிக்கிறேன், கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாரக என்று, தன் காணொளிச் செய்தியை நிறைவு செய்துள்ளார்.

Miandrivazo மறைமாவட்டம் மேற்கொண்டுள்ள, ஐம்பது கிலோ மீட்டருக்கு அதிகமான நீளத்தைக் கொண்ட, வாய்க்கால் திட்டத்தால், இரண்டாயிரம் ஹெக்டேருக்கு மேற்பட்ட நெல் வயல்கள் பயன் அடையும் என்று கூறப்பட்டுள்ளது.

புனித யோசேப்பு இணை-பேராலயம்

மடகாஸ்கரில், இச்சனிக்கிழமையன்று புனித யோசேப்பு இணை-பேராலயம் அர்ச்சிப்பு நிகழ்வை தலைமையேற்று நடத்திய, ஆயர் Marie Fabien Raharilamboniaina அவர்கள், அப்பேராலய கட்டுமான பணிகள் குறித்து வத்திக்கான் செய்திகளுக்கு, பேட்டி ஒன்றை வழங்கியுள்ளார்.

Miandrivazo மறைமாவட்ட மக்கள் ஆயர்
Miandrivazo மறைமாவட்ட மக்கள் ஆயர்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் தந்தைக்குரிய அன்போடு அனுப்பியுள்ள செய்திக்கு நன்றி தெரிவித்த, ஆயர் Marie Fabien அவர்கள், அந்த கட்டுமானப் பணிகளில் உள்ளூர் மக்கள் ஆற்றிய பணிகளை மிகவும் புகழ்ந்து பேசியுள்ளார்.

2019ம் ஆண்டு செப்டம்பரில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மடகாஸ்கருக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டதன் பயனால், ஒரு பெண்ணும், அவரது குடும்பமும், நலவாழ்வு மையம் கட்டப்பட நிதியுதவி செய்தனர் என்றும், இந்த நன்கொடை, அந்தப் பெண்ணுக்கு, யோசேப்பு என்ற பெயர்கொண்ட அவரின் உடன்பிறப்பு விட்டுச்சென்ற சொத்து என்றும், திருத்தந்தை, இப்பேராலயத்தை, புனித யோசேப்புக்கு அர்ப்பணித்துள்ளார் என்றும், ஆயர் Marie Fabien அவர்கள் கூறினார்.

இப்பேராலயம், கல்குவாரிகளில் வேலைசெய்யும், 200 ஏழை ஆண்கள், மற்றும், பெண்கலால் கட்டப்பட்டது என்றும், அந்த மறைமாவட்டத்தில், பல்வேறு கிராமங்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட அன்பியங்கள் உள்ளன என்றும், அண்மையில், 200 பேர் திருமுழுக்கு பெற்றனர் என்றும், ஆயர் கூறினார்.

மடகாஸ்கர் புதிய பேராலயம்
மடகாஸ்கர் புதிய பேராலயம்

மடகாஸ்கர், ஆப்ரிக்கக் கண்டத்தின் தென்கிழக்கே இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். இத்தீவு, உலகிலேயே நான்காவது மிகப்பெரிய தீவு ஆகும்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 May 2021, 15:03