செபமாலை செபிக்கும் திருத்தந்தை - 010521 செபமாலை செபிக்கும் திருத்தந்தை - 010521  

'பெருந்தொற்றால் காயம்பட்ட உலகம் முழுமைக்கும்' செபமாலை

பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை உலகம் முழுவதும் உள்ள திருத்தலங்களின் இறைவேண்டல் வழியாக இணைத்து, அன்னைமரியாவின் கைகளில் ஒப்படைப்போம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

உலகெங்கும் பரவியுள்ள கோவிட்-19 பெருந்தொற்று முடிவுக்கு வரவேண்டும் என்ற வேண்டுதலுடன், மே மாதம் முழுவதும், உலகின் அனைத்து திருத்தலங்களிலும், செபமாலை பக்தி முயற்சி மேற்கொள்ளப்படும்வேளை, மே மாதத்தின் முதல் நாளான இச்சனிக்கிழமை, உரோம் நேரம் மாலை 6 மணிக்கு, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்பக்தி முயற்சியை துவக்கி வைத்தார்.

அன்னை மரியாவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட மே மாதத்தில், கோவிட்-19 பெருந்தொற்றை இறைவன் முடிவுக்குக் கொணரவேண்டும் என்ற சிறப்பு வேண்டுதலுடன், அன்னை மரியாவின் பரிந்துரையை நாடி, இந்த முயற்சி, உலகெங்கிலும் உள்ள திருத்தலங்களில் மேற்கொள்ளப்படுகின்றது.

"திருஅவை முழுவதிலுமிருந்து இறைவனை நோக்கி இடைவிடாத செபம் எழுந்தது" என்ற தலைப்பில் நடைபெறும் இந்த உலகளாவிய முயற்சியை, இச்சனிக்கிழமையன்று, 'பெருந்தொற்றால் காயம்பட்ட உலகம் முழுமைக்கும்' எனக்கூறி துவக்கிவைக்க வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, இளையோர் குழு ஒன்று, மெழுகுத்திரிகளை ஏந்திய வண்ணம் வரவேற்று, மிகத்தொன்மையயான சகாய மாதா திருஉருவப்படம் வைக்கப்பட்டிருக்கும், புனித பேதுரு பெருங்கோவிலுக்கு உள்ளேயுள்ள சிறு திருப்பலி மேடைக்கு அழைத்துச்சென்றது.

இந்த பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை உலகம் முழுவதும் உள்ள திருத்தலங்களின் இறைவேண்டல் வழியாக இணைத்து, அன்னைமரியாவின் கைகளில் ஒப்படைப்போம்  என்ற அழைப்புடன், இவ்வழிபாட்டில், தன் உரையைத் துவக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த மே மாத செபத்தொடரில் பங்கேற்கும் 31 திருத்தலங்களுக்கு அனுப்பப்பட உள்ள செபமாலைகளை ஆசீர்வதித்தார்.

இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை திருத்தலம், பிரான்ஸ் நாட்டின் லூர்து நகர் அன்னை மரியா திருத்தலம், போர்த்துக்கல் நாட்டின் பாத்திமா அன்னை மரியா திருத்தலம், உட்பட, உலகின் அனைத்து கண்டங்களின் திருத்தலங்களில், இந்த பக்தி முயற்சி நடைபெறுகிறது.

மே மாதம் 31ம் தேதி, திருத்தந்தையின் பங்கேற்புடன் நிறைவு செய்யப்படும் இந்த தொடர் பக்திமுயற்சி, ஒவ்வொரு நாளும், உரோம் நேரம் மாலை 6 மணிக்கு, திருப்பீடத்தின் அதிகாரப்பூர்வ அலைவரிசைகளின் வழியே, நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 May 2021, 14:47