திருத்தந்தையின் மியான்மார் திருத்தூதுப் பயணம் (நவம்பர், 2017) திருத்தந்தையின் மியான்மார் திருத்தூதுப் பயணம் (நவம்பர், 2017) 

உரோம் மியான்மார் குழுமத்திற்காக திருத்தந்தை திருப்பலி

ஒவ்வொரு நாளும் நாம் செபிக்கும் செபமாலையில், மியான்மார் திருஅவைக்காக, ஓர் அருள் நிறை மரியே செபத்தை அர்ப்பணிப்போம் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மியான்மாரில், இவ்வாண்டு பிப்ரவரியில் இடம்பெற்ற இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பைத் தொடர்ந்து, உயிரிழப்புகள் அதிகரித்துவரும்வேளை, உரோம் மாநகரில் வாழ்கின்ற அந்நாட்டு மக்களுக்கென்று திருப்பலி நிறைவேற்றி, அந்நாட்டிற்காகச் செபிக்கத் தீர்மானித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆண்டவருடைய விண்ணேற்றம் பெருவிழாவாகிய மே 16, ஞாயிறன்று, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில், உரோம் நேரம் காலை பத்து மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நகரில் வாழும் மியான்மார் குழுமத்திற்காகத் திருப்பலி நிறைவேற்றுவார் என்று, திருப்பீட தகவல் தொடர்பகம் அறிவித்துள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 02, கடந்த ஞாயிறு, 'வானக அரசியே' வாழ்த்தொலி உரைக்குப்பின், மியான்மார் நாட்டின் அமைதிக்காக செபமாலை செபிக்க வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளவேளை, அதற்கு அடுத்த நாளே, அந்நாட்டு நம்பிக்கையாளர்களுக்காக, அவர் திருப்பலி நிறைவேற்றவிருக்கும் செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மே மாதத்தில், உலகின் ஒவ்வொரு திருத்தலத்திலிருந்தும் செபமாலை செபிக்கும் பக்திமுயற்சி இடம்பெற்றுவரும் இவ்வேளையில், நாம் தினமும் செபிக்கும் செபமாலையில், மியான்மார் திருஅவைக்காக, ஓர் அருள் நிறை மரியே செபத்தை அர்ப்பணிப்போம் என்றும், திருத்தந்தை அழைப்பு விடுத்திருந்தார்.

ஏறத்தாழ 5 கோடியே 40 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் மியான்மார் நாடு, பங்களாதேஷ், இந்தியா, சீனா, லாவோஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளை எல்லைகளாகக் கொண்டிருக்கின்றது. புத்த மதத்தினர் பெரும்பான்மையாக உள்ள இந்நாட்டில், 2017ம் ஆண்டு நவம்பரில், திருத்தூதுப் பயணம் மேற்கொண்டதன் வழியாக, அந்நாட்டிற்குச் சென்ற முதல் திருத்தந்தை என்ற பெயரும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு கிடைத்துள்ளது.

மியான்மாரில், இவ்வாண்டு பிப்ரவரி முதல் தேதியன்று ஆட்சிக்கவிழ்ப்பை மேற்கொண்டு, நாட்டை ஆட்சிசெய்துவரும் அந்நாட்டு இராணுவம் மேற்கொண்டுவரும்  அடக்குமுறையில் இதுவரை 766 பேர் உயிரிந்துள்ளனர் என்று, அரசியல் கைதிகளுக்கு உதவும் அமைப்பு ஒன்று கூறியுள்ளது. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 May 2021, 14:54