மியான்மார் நாட்டு அமைதிக்காக திருத்தந்தையின் திருப்பலி மியான்மார் நாட்டு அமைதிக்காக திருத்தந்தையின் திருப்பலி  

விரக்திக்கு இடம்கொடாமல் செயல்பட விசுவாசம் உதவுகிறது

நட்பு, அன்பு, மற்றும் உடன்பிறந்த உணர்வோடு வாழ்வதற்குரிய மனவுறுதியையும், அமைதி, மற்றும் உடன்பிறந்த உணர்வுக்கான அர்ப்பணத்தையும் ஒவ்வொருவரும் கொண்டிருக்க வேண்டியது அவசியம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கடந்த மூன்றரை மாதங்களாக பல்வேறு துயர்களை அனுபவித்துவரும் மியான்மார் நாட்டு மக்களுடன் தன் அருகாமையையும், ஒருமைப்பாட்டையும் வெளிப்படுத்தும் விதமாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 16, இஞ்ஞாயிறன்று காலையில், புனித பேதுரு பெருங்கோவிலில் சிறப்புத் திருப்பலியை நிறைவேற்றினார்.

இராணுவத்தால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தேதி மியான்மாரில் இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடர்ந்து, பல்வேறு துன்பங்களை அனுபவித்துவரும் அந்நாட்டு மக்களுக்கென திருத்தந்தை நிறைவேற்றிய திருப்பலியில், உரோம் நகரில் வாழும் மியான்மார் நாட்டு மக்கள், அருள்பணியாளர்கள், துறவியர் ஆகியோர் பங்கேற்றனர். இத்திருப்பலியில் திருத்தந்தை வழங்கிய மறையுரையில், இயேசு இன்றைய நற்செய்தியில், 'காத்தருளும்' என வேண்டுவது, இன்றைய மியான்மார் சூழலில் தரும் அர்த்தம் குறித்து விளக்கமளித்தார்.

வன்முறையாலும், மோதல்களாலும் அடக்குமுறைகளாலும் துயருறும் மியான்மாரில் காப்பாற்ற வேண்டியவை உள்ளன என்பதை தன் மறையுரையில் வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றைய மியான்மாரில், விசுவாசத்தைக் காப்பது, ஒன்றிப்பைக் காப்பது, மற்றும், உண்மையைக் காப்பது  என்ற மூன்று சவால்கள் குறித்து எடுத்துரைத்தார்.

தப்பிச் செல்வதற்கு வேறு வழிகளே இல்லை எனத் தோன்றும் வேளைகளில், விரக்திக்கு இடம்கொடாமல் தொடர்ந்து செயல்பட விசுவாசம் நமக்கு உதவுகிறது என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் பார்வையை வானகம் நோக்கி எழுப்பி, பகைமை, மற்றும் பழிவாங்கும் எண்ணங்களுக்கு அடிமையாகாமல், அன்பெனும் இறைவனில் நம் பார்வையை நிலைநிறுத்தி, ஒருவருக்கொருவர் சகோதரராக, சகோதரிகளாக செயல்படுவோமென அழைப்புவிடுத்தார்.

நம்  வாழ்வின் திறவுகோலாக இருக்கும் இறைவேண்டல் என்பது, பிரச்சனைகளில் இருந்து பின்வாங்கிச் செல்வதையோ, அதிலிருந்து தப்பி ஓடுவதையோ குறிப்பிடவில்லை, மாறாக, அன்பையும் எதிர்நோக்கையும் உயிர்த்துடிப்புடன் வைத்திருப்பதை குறிப்பதாகும் எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தன் சீடர்களனைவரும் ஒன்றித்திருப்பார்களாக என இயேசு தன் தந்தையிடம் வேண்டிதை மறையுரையில் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிரிவினை எனும் நோயை தூர விலக்கிவைத்து, அன்பு, மற்றும் உடன்பிறந்த உணர்வு கொண்ட ஒரே குடும்பமாக அனைவரும் ஒன்றித்திருக்கவேண்டும் என அழைப்புவிடுத்தார்.

நட்பு, அன்பு, மற்றும் உடன்பிறந்த உணர்வோடு வாழ்வதற்குரிய மனவுறுதியையும், அமைதி, மற்றும் உடன்பிறந்த உணர்வுக்கான அர்ப்பணத்தையும் ஒவ்வொருவரும் கொண்டிருக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி, ஒன்றிப்பில் மற்றவர்களை மதித்தலையும், பேச்சுவார்த்தைகளை ஊக்குவிப்பதையும் திருஅவையாகிய நாம் செய்யவேண்டிதை சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உண்மையைக் காப்பதன் முக்கியத்துவம் என்பது, கோட்பாடுகளால் உருவான அமைப்புமுறையைக் காப்பதாகாது, மாறாக, இயேசுவுக்கும் அவர் நற்செய்திக்கும் விசுவாசமாக இருப்பது, எனவும் எடுத்துரைத்த திருத்தந்தை, நற்செய்தியின் உண்மைகளை நமக்கேற்றதுபோல் மாற்றிக்கொள்ளாமல், நற்செய்திக்கு விசுவாசமாகவும், அமைதிக்காப்பாளர்களாகவும் செயல்படுவதற்குரிய அர்ப்பணத்தின் தேவையையும் எடுத்துரைத்தார்.

அனைத்து இதயங்களையும் அமைதியை நோக்கி இறைவன் திருப்புவாராக என ஜெபித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்பிக்கையிழக்காமல் அனைவரும் முன்னோக்கி நடைபோடுவோம் என்ற அழைப்பை விடுத்து, அனைவரோடும் இணைந்து மியான்மார் நாட்டில் அமைதி நிலவ செபித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 May 2021, 13:31