காஸாப் பகுதியில் நடைபெற்றுவரும் மோதல்கள் காஸாப் பகுதியில் நடைபெற்றுவரும் மோதல்கள் 

இஸ்ரேல், பாலஸ்தீனா - அமைதிப் பேச்சுவார்த்தைகள்

திருத்தந்தை : இஸ்ராயேல், மற்றும் பாலஸ்தீனியத் தலைவர்கள், ஆயுதங்கள் மீதான தங்கள் மோகத்தைக் கைவிட்டு, அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு அனைத்துலக சமுதாயத்தின் உதவியுடன் முன்வரவேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

தொடர் மரணங்களையும், பேரழிவுகளையும் கொணரும் வன்முறைகளைக் கைவிட்டு, அமைதிகாக்க முன்வரவேண்டும் என, இஸ்ரேல், மற்றும், பாலஸ்தீனிய தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனாவுக்கும் இடையே அண்மையில் மீண்டும் துவங்கியுள்ள மோதல்களில் பல குழந்தைகள் உயிரிழந்துள்ளது, கொடூரமானது, மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என, தன் 'வானக அரசியே' வாழ்த்தொலி உரைக்குப்பின் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவர்களின் மரணங்கள், இக்கால மக்கள் வருங்காலத்தைக் கட்டியெழுப்புவதில் அல்ல, மாறாக, அதனை அழிப்பதிலேயே ஆர்வமாக இருப்பதன் அடையாளமாக உள்ளன என்றார்.

தற்போது இஸ்ரேல், மற்றும் காஸாப் பகுதியில் இடம்பெற்றுவரும் வன்முறைகள், தொடர் மரணங்களையும் பேரழிவுகளையும் கொணர்வதுடன், மனித உடன்பிறந்த உணர்வுக்கும், அமைதியான இணக்கவாழ்வுக்கும் ஊறுவிளைவிப்பவைகளாக உள்ளன என்ற கவலையை வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வன்முறைகள் உருவாக்கும் காயங்களைக் குணப்படுத்த, அமைதிப் பேச்சுவார்த்தைக்கு  உடனடியாகத் திரும்புவது அத்தியாவசியமானது என்று கூறியத் திருத்தந்தை, இஸ்ரேல், மற்றும் பாலஸ்தீனியத் தலைவர்கள், ஆயுதங்கள் மீது கொண்டிருக்கும் ஆர்வத்தைக் கைவிட்டு, அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு, அனைத்துலக சமுதாயத்தின் உதவியுடன் முன்வரவேண்டும் என அழைப்பு விடுத்தார்.

இஸ்ரயேலர்களும், பாலஸ்தீனியர்களும், கலந்துரையாடல், மற்றும் மன்னிப்பின் பாதையைக் கண்டுகொள்ளவும், அமைதி, மற்றும் நீதியைக் கட்டியெழுப்புவதில் பொறுமையுடன் செயல்படுபவர்களாகவும், சகோதரர்களாக ஒன்றிணைந்து வாழ்வதற்குரிய நம்பிக்கையை படிப்படியாக வளர்ப்பவர்களாகவும் செயல்பட, அனைவரும் தொடர்ந்து இறைவேண்டல் செய்யுமாறு அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இஸ்ரேல், பாலஸ்தீனா மோதல்களில் உயிரிழந்த குழந்தைகளுக்கு அனைவரும் இறைவேண்டல் செய்யுமாறும் அழைப்பு விடுத்து, தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த மக்களோடு இணைந்து, 'அருள் நிறை மரியே' செபத்தை செபித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 May 2021, 15:17