இத்தாலிய கூடைப்பந்து வீரர்கள் சந்திப்பு இத்தாலிய கூடைப்பந்து வீரர்கள் சந்திப்பு  

இத்தாலிய கூடைப்பந்து வீரர்களை வாழ்த்திய திருத்தந்தை

கூடைப்பந்து விளையாட்டு, வீரர்களின் கண்களை மேல்நோக்கிய இலக்கை நோக்கி பதிப்பதால், மேல்நோக்கிய பார்வையை இளைய சமுதாயத்திற்கு வழங்குவது கூடைப்பந்து விளையாட்டு வீரர்களின் தனி அழைப்பு – திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

1955ம் ஆண்டு, திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள் முன்னிலையில், கூடைப்பந்து விளையாட்டு வீரர்கள், வத்திக்கான், புனித பேதுரு சதுக்கத்தில் விளையாடிய நினைவு, வரலாற்றில் தனியிடம் பெற்றுள்ளது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன்னைச் சந்திக்க வந்திருந்த கூடைப்பந்து விளையாட்டுக் கழகத்தின் பிரதிநிதிகளிடம் கூறினார்.

கூடைப்பந்து விளையாட்டுக் கழகத்தின் 100ம் ஆண்டு நினைவு

கூடைப்பந்து விளையாட்டு இத்தாலி நாட்டில் துவக்கப்பட்டதன் 100ம் ஆண்டு நினைவு இவ்வாண்டு சிறப்பிக்கப்படுவதையொட்டி, திருத்தந்தையைச் சந்திக்க வந்திருந்த இத்தாலிய கூடைப்பந்து விளையாட்டுக் கழகத்தின் பிரதிநிதிகளிடம், திருஅவைக்கும், விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே உள்ள நல்லுறவைக் குறித்துப் பேசினார்.

ஒவ்வொரு மனிதரின் முழுமையான வளர்ச்சியில், விளையாட்டுத் துறையும், திருஅவையும் பல்வேறு வழிகளில் உதவி வருகின்றன என்பதை தன் உரையின் துவக்கத்தில் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இணைந்து விளையாடுதல், வரைமுறைகளைக் கடைபிடித்தல் என்ற இரு அம்சங்கள் விளையாட்டுத் துறையின் இரு முக்கிய பண்புகள் என்று குறிப்பிட்டார்.

குழுவுக்கு முக்கியத்துவம், ஒழுக்கநெறி பயிற்சி

தனிமனித முக்கியத்துவத்தை முன்னிறுத்தாமல், குழுவின் முக்கியத்துவத்தை முன்னிறுத்துவது விளையாட்டின் ஒரு முக்கிய குறிக்கோள் என்பதை வலியுறுத்திய திருத்தந்தை, சுயநலத்தில் வளராமல், அடுத்தவர் நலனில் அக்கறைகொள்ள விளையாட்டுக்கள் சொல்லித்தருவது, இன்றைய உலகின் ஒரு முக்கியத் தேவை என்று கூறினார்.

ஒவ்வொரு விளையாட்டிலும் ஒருவர் சிறந்துவிளங்க, அவர், வரைமுறைகளுக்கு தன்னையே உட்படுத்தி, கடினமான பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்பதை, தன் இரண்டாவது கருத்தாகக் குறிப்பிட்டத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வை சீரமைக்க கற்றுக்கொள்ளவேண்டும் என்று லொயோலாவின் புனித இக்னேசியஸ் கூறிய கருத்தை வலியுறுத்தினார்.

வரைமுறைகளுக்கு உட்பட்ட ஒழுக்கமான வாழ்வு, ஒருவரை கடின உள்ளம் கொண்டவராக மாற்றுவதில்லை, மாறாக, அவரை, பொறுப்புள்ளவராக மாற்றுகிறது என்பதை தன் உரையில் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான இத்தகைய ஒழுக்கம், ஆன்மீக வாழ்வுக்கும் அவசியம் என்பதை எடுத்துரைத்தார்.

கூடைப்பந்து - மேல்நோக்கிய இலக்கு

கூடைப்பந்து விளையாட்டுக்கே உரிய மற்றொரு முக்கிய அம்சம், இவ்விளையாட்டு, எப்போதும் வீரர்களின் கண்களை மேல்நோக்கிய இலக்கை நோக்கி பதிக்கிறது என்பதை தன் மூன்றாவது கருத்தாக குறிப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மேல்நோக்கிய பார்வையை இளைய சமுதாயத்திற்கு வழங்குவது கூடைப்பந்து விளையாட்டு வீரர்களின் தனி அழைப்பு என்பதைக் கூறினார்.

அத்துடன், விளையாட்டில் வரும் வெற்றி, தோல்வி இரண்டையும் சமநிலையான உள்ளத்துடன் ஏற்றுக்கொள்ள பழகிக்கொள்வது, வாழ்க்கையில் நாம் சந்திக்கும் வெற்றி தோல்விகளுக்கு நம்மைத் தயாரிக்கிறது என்பதையும், திருத்தந்தை தன் உரையின் இறுதியில் குறிப்பிட்டார்.

கூடைப்பந்து விளையாட்டு வீரர்கள் அனைவரும், வெற்றியையும், தோல்வியையும் ஒரே சீரான மனதுடன் ஏற்று, இரண்டிலும் அவர்கள் வாழ்வுக்குத் தேவையான பாடங்களைப் பயிலவேண்டும் என்ற அழைப்புடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் உரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 May 2021, 14:38