எருசலேம் நகரில் தொடரும் பதட்ட நிலை எருசலேம் நகரில் தொடரும் பதட்ட நிலை 

எருசலேமின் வன்முறை தாக்குதல்கள் முடிவுக்கு வர அழைப்பு

திருத்தந்தை : பல மதங்கள், மற்றும் பல கலாச்சாரங்கள் ஒன்றிணைந்து வாழும் எருசலேம் நகரின் தனித்துவம் மதிக்கப்பட்டு காப்பாற்றப்படவேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் வானொலி

எருசலேம் தெருக்களில் பாலஸ்தீனிய கிளர்ச்சியாளர்களுக்கும் இஸ்ராயேல் காவல்துறைக்கும் இடையே இடம்பெற்றுவரும் வன்முறை தாக்குதல்கள் முடிவுக்கு வரவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

எருசலேமில் அண்மைய நாட்களில் அதிகரித்துவரும் வன்முறை மோதல்கள் குறித்து, தன் ஞாயிறு 'வானக அரசியே' வாழ்த்தொலி உரைக்குப்பின் ஆழ்ந்த கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வன்முறைகளை கைவிட்டு, இருதரப்பினரும் பொதுவான ஒரு தீர்வைக்காண முன்வரவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

எருசலேம் நகர், அமைதி மற்றும் இறைவேண்டலின் இடமாக திகழ வேண்டுமேயொழிய, வன்முறைகளின் இடமாக அல்ல, என விண்ணப்பம் ஒன்றை விடுத்த திருத்தந்தை, பல மதங்கள், மற்றும் பல கலாச்சாரங்கள் ஒன்றிணைந்து வாழும் எருசலேம் நகரின் தனித்துவம் மதிக்கப்பட்டு காப்பாற்றப்படவேண்டும் என்ற நோக்கத்தில், அனைவருக்கும் பொதுவான ஒரு தீர்வு காணப்படவேண்டும் என அழைப்புவிடுத்தார்.

மோதல்களை உடனடியாக நிறுத்துங்கள், ஏனெனில், வன்முறை வன்முறைகளையே பிறப்பிக்கும் என மேலும் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பாலஸ்தீனிய இஸ்லாமியர் தங்கள் புனித இரமதான் மாதத்தில், ஒவ்வொரு நாளும் உண்ணா நோன்பை நிறைவுசெய்யும் மாலை வேளையில், எருசலேமின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வழக்கமாகக் கூடுவதை இஸ்ராயேல் அரசு தடைசெய்ததைத் தொடர்ந்து, இந்த மோதல்கள் துவங்கின.

வன்முறை தாக்குதல்களுக்குப்பின், இந்தத் தடையை இஸ்ரேல் அரசு நீக்கியுள்ளபோதிலும், கடந்த வாரத்தில் இஸ்ரேல் அரசு, கிழக்கு எருசலேமின் மாவட்டம் ஒன்றிலிருந்து பாலஸ்தீனியர்கள் பலரை வெளியேற்ற உள்ளதாக அறிவித்ததைத் தொடர்ந்து, வன்முறை மோதல்கள் மீண்டும் துவங்கி இடம்பெற்று வருகின்றன.

அண்மையத் தாக்குதல்களில் 136 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும், இதில் பெரும்பான்மையினர், காவல்துறையின் இரப்பர் குண்டுகளால் முகத்திலும், கண்களிலும் காயமடைந்துள்ளதாகவும், பாலஸ்தீனிய செம்பிறைச் சங்கம் அறிவித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 May 2021, 12:50