பன்னாட்டு தூதர்களுக்கு திருத்தந்தை உரை வழங்குதல் பன்னாட்டு தூதர்களுக்கு திருத்தந்தை உரை வழங்குதல் 

அக்கறை கலாச்சாரத்திற்கு துணிச்சலான நடவடிக்கைகள் அவசியம்

தற்போது உலகளவில் நிலவும் பல்வேறு பிரச்சனைகள், வருங்காலத் தலைமுறைகளுக்கு நாம் எத்தகைய உலகை விட்டுச்செல்ல இருக்கிறோம் என்பது பற்றி சிந்திப்பதற்கு, அழைப்பு விடுக்கின்றன – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் தான் சந்தித்த, இலங்கை, நேபாளம், பங்களாதேஷ், சிங்கப்பூர் உள்ளிட்ட 9 நாடுகளின் தூதர்களுக்கு உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்போதைய கொரோனா பெருந்தொற்று, நாம் அனைவரும், ஒரே மனிதக் குடும்பத்தின் உறுப்பினர்களாக, ஒருவரையொருவர் சார்ந்திருக்கிறோம் என்ற உணர்வை உருவாக்கியுள்ளது என்று கூறினார்.

இந்தப் பெருந்தொற்று உருவாக்கியுள்ள பல்வேறு நெருக்கடிகளிலிருந்து, உலகளாவிய சமுதாயம் வெளிவருவதற்கு முயற்சித்துவரும் இவ்வேளையில், உலக அளவில், அக்கறை கலாச்சாரத்தை வளர்ப்பதற்கு, உறுதியான, மற்றும், துணிச்சலான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியது அவசியம் என்று திருத்தந்தை கூறினார்.

ஒருமைப்பாடு, மனித மாண்பை மதித்தல், ஒருவர் ஒருவருக்கு உதவுதல், சமுதாய நீதி ஆகியவற்றுக்கு ஆற்றுகின்ற பணியில், புதிய உறவுகள், மற்றும், ஒத்துழைப்பு அமைப்புகளை அமைக்கவும், நாம் தூண்டப்படுகிறோம் என்று, திருத்தந்தை கூறினார்.

உலகின் பல்வேறு பிரச்சனைகள்

புலம்பெயர்வு, காலநிலை மாற்றம், மனிதாபிமான பிரச்சனைகள், பல நாடுகளின் பொருளாதாரக் கடன் சுமைகள், இயற்கைக்கு நாம் செலுத்தவேண்டிய சூழலியல் கடன் போன்ற உலகளாவியப் பிரச்சனைகள், அரசியல் அல்லது, பொருளாதாரத்தால் மட்டும் தீர்க்கப்படவேண்டியவை அல்ல, மாறாக, அவை, நீதி, மற்றும், அறநெறி சார்ந்த விவகாரங்கள் என்றும், திருத்தந்தை குறிப்பிட்டார்.

இந்தப் பிரச்சனைகள், வருங்காலத் தலைமுறைகளுக்கு நாம் எத்தகைய உலகை விட்டுச்செல்ல இருக்கிறோம் என்பது பற்றி சிந்திப்பதற்கு, அழைப்பு விடுக்கின்றன என்றும், உலகளாவிய வளர்ச்சித் திட்டங்களில், மனிதர் மையப்படுத்தப்படவேண்டியது முக்கியம் என்றும், இதில் அரசுத்தூதர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

புதிய அரசுத்தூதர்கள் மேற்கொள்ளவிருக்கும் பணிகளுக்கு, தன் நல்வாழ்த்துக்களையும், செபங்களையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெரிவித்தார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 May 2021, 15:08