இந்தியாவில் கோவிட்-19 இந்தியாவில் கோவிட்-19 

இந்தியாவில் கோவிட்-19ஆல் துன்புறுவோருடன் திருத்தந்தை தோழமை

இந்தியாவில் பயங்கரமான கோவிட்-19 தொற்றுக்கிருமியால் தாக்கப்பட்டுள்ள அனைவரும் குணமடையவும், அவர்கள் இறைவனின் ஆறுதலைப் பெறவும் திருத்தந்தையின் இறைவேண்டல்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இந்தியாவில் கோவிட்-19 பெருந்தொற்றின் இரண்டாவது அலை, வரலாறு காணாத அளவுக்கு பாதிப்புக்களையும், உயிரிழப்புக்களையும் ஏற்படுத்திவரும் இவ்வேளையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டினர் அனைவரோடும், தனது ஆன்மீக அருகாமை, மற்றும், ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ளார்.

இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவரான, மும்பை பேராயர் கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்களுக்கு, மே 06, இவ்வியாழனன்று அனுப்பியுள்ள செய்தியில், இந்த பயங்கரமான தொற்றுக் கிருமியால் தாக்கப்பட்டுள்ள ஒவ்வொருவரும் குணமடையவும், இறைவனின் ஆறுதலைப் பெறவும், தான் செபிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கோவிட்-19 பெருந்தொற்றால் தாக்கப்பட்டுள்ளவர்கள், அவர்களின் குடும்பங்கள், அவர்களுக்குச் சிகிச்சை அளிப்பவர்கள், குறிப்பாக, இத்தொற்றால் தங்களின் உறவுகளை இழந்து கண்ணீர் சிந்துவோர், ஆகிய அனைவரையும் தான் நினைவில்கொண்டு செபிப்பதாகக் கூறியுள்ள திருத்தந்தை, மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவ அவசர வாகனம் ஓட்டுனர்கள் போன்று, ஓய்வின்றி பணியாற்றும் அனைவரையும் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பெருந்தொற்று சூழலில் பிறரன்பு மற்றும், உடன்பிறந்த உணர்வோடு பணியாற்றும், இந்திய கத்தோலிக்க சமுதாயத்திற்கு, தன் நன்றியைத் தெரிவித்துள்ள திருத்தந்தை, இந்த பெருந்தொற்றால் உயிரிழந்த பொதுநிலை விசுவாசிகள், அருள்பணியாளர்கள், இருபால் துறவியர் ஆகிய எல்லாரையும் நினைவுகூர்ந்துள்ளார்.

மீளாத் துயர்நிறைந்த இந்நாள்களில், அனைவரும், கிறிஸ்துவின் உயிர்ப்பிலிருந்து பிறக்கும் எதிர்நோக்காலும், உயிர்ப்பு, மற்றும், புதிய வாழ்வுக்கு கிறிஸ்து அளித்துள்ள வாக்குறுதியில் அசைக்கமுடியாத நம்பிக்கையாலும் அனைவரும் ஆறுதலடைவார்களாக என்று, தன் செய்தியை நிறைவுசெய்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாலி உதவி

கடும் நெருக்கடியை எதிர்கொள்வதற்கு இந்தியா, நாடுகளின் உதவிக்கு அழைப்புவிடுத்திருக்கும்வேளை, இத்தாலி நாடு உத்தரப் பிரதேச மாநிலத்தின் நொய்டாவிலுள்ள மருத்துவமனைக்கு, ஆக்சிஜன் தயாரிக்கும் கருவியை அனுப்பியுள்ளது. மேலும், இந்தியாவில் 17 இத்தாலிய குடிமக்களுக்கு கோவிட்-19 சிகிச்சையளித்துள்ள இந்திய அரசுக்கு, இத்தாலிய அரசு நன்றி தெரிவித்துள்ளது.

தலத்திருஅவை பணியாளர்கள் இறப்பு

இந்தியாவில், இந்த பெருந்தொற்றை ஒழிப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில், கத்தோலிக்கத் திருஅவை பல்வேறு உதவிகளை ஆற்றிவருகின்றது. மேலும், இப்பெருந்தொற்றால், மே 5, இப்புதனன்று, பாண்டிச்சேரி முன்னாள் பேராயர் அந்தோனி அனந்தராயர் அவர்கள் இறைபதம் அடைந்தவேளை, மே 6, இவ்வியாழனன்று மத்திய பிரதேச மாநிலத்தின் Jhabua ஆயர் Basil Bhuriya அவர்கள் இறைவனடி சேர்ந்தார். இந்தியாவில் இப்பெருந்தொற்றால் தாக்கப்பட்டு, அருள்பணியாளர்கள், மற்றும், துறவறத்தார் பலரும் இறைபதம் சேர்ந்துள்ளனர். இன்னும் சிலர், அக்கிருமியால் தாக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இந்தியாவில், இப்பெருந்தொற்றால் இறந்தவர்களைவிட, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 85 மடங்கிற்கு மேல் என்று செய்திகள் கூறுகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 May 2021, 19:28