Meter அமைப்பினர் சந்திப்பு Meter அமைப்பினர் சந்திப்பு 

சிறாருக்கெதிரான பாலியல் கொடுமை, ஒருவித உளவியல் கொலை

சிறாருக்கெதிரான பாலியல் முறைகேடுகளிலிருந்து அவர்களைப் பாதுகாப்பது, அனைத்து அரசுகளின் கடமை - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

சிறார் பாலியல் முறையில் பயன்படுத்தப்படுவது, உளவியல் அளவில் கொலை என்றும், பலநேரங்களில், சிறாருக்கெதிரான இந்தக் கொடுமைகள், அவர்களின் குழந்தைப்பருவ நிலையை அழித்துவிடுகின்றன என்றும், இதனால், சிறாருக்கெதிரான பாலியல் முறைகேடுகளிலிருந்து அவர்களைப் பாதுகாப்பது, அனைத்து நாடுகளின் கடமை என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

பாலியல் முறையில் பயன்படுத்தப்படும் சிறாரைப் பாதுகாக்கும் பணிகளை, 1989ம் ஆண்டிலிருந்து இத்தாலி மற்றும், ஏனைய நாடுகளில் ஆற்றிவரும் Meter என்ற அமைப்பின் பிரதிநிதிகளை, மே 15, இச்சனிக்கிழமையன்று, வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த அமைப்பினர், நற்செய்திகூறும் நல்ல சமாரியர் போன்று, எத்தனையோ முறைகள், வலுவற்றவரை வரவேற்று, ஆறுதலும், பாதுகாப்பும் அளித்துள்ளனர் என்றும், எத்தனையோ சிறாரின் ஆன்மீகக் காயங்களைக் குணப்படுத்தியுள்ளனர் என்றும் கூறியத் திருத்தந்தை, இவற்றுக்கு திருஅவை நன்றிக்கடன்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இந்த அமைப்பினரின் பணிகள், இவ்வுலகில், சிறியோர், மற்றும், பாதுகாப்பற்றவர் மீது, திருஅவை கொண்டிருக்கும் அன்பை, காணக்கூடியதாக ஆக்குகின்றன என்றும் உரைத்த திருத்தந்தை, சிறாரின் உரிமைகளை, பல்வேறு வழிகளில் மீறுகின்ற மனித வர்த்தகர்கள் மற்றும், சிறாரை முறைகேடாகப் பயன்படுத்துகின்ற அனைவரையும் கண்டுபிடிக்கவேண்டியது அரசுகளின் கடமை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

அதேநேரம், பள்ளிகள், விளையாட்டுத்திடல்கள், பொழுதுபோக்கு மையங்கள், கலாச்சார அமைப்புகள், துறவறக்குழுமங்கள் என, சமுதாயத்தின் எல்லாத் துறைகளிலும், சிறார் பாலியல்முறையில் பயன்படுத்தப்படுவது தடைசெய்யப்படவேண்டும், மற்றும், அத்துறைகள், அம்முறைகேடுகளுக்கு எதிராய் கண்டனம் தெரிவிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, இவ்வாறு செயல்படவேண்டியது, அவைகளின் கடமை என்பதையும் குறிப்பிட்டார்.

சிறாரைப் பாதுகாக்கும்  Meter அமைப்பு
சிறாரைப் பாதுகாக்கும் Meter அமைப்பு

பாலியல் முறைகேடுகளுக்குப் பலியாகும் சிறாருக்கு உதவிகள் வழங்கப்படவேண்டும் என்பதையும் வலியுறுத்திக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வரவேற்று, பாதுகாப்பளிக்கும், ஓர் இல்லத்திற்கு, இந்த Meter அமைப்பை ஒப்பிடலாம் என்றும்,  கூறினார்.

சிறாருக்கெதிரான பாலியல் முறைகேடுகள் தொடர்ந்து இடம்பெற்றுவரும் இவ்வுலகிற்கு, இந்த அமைப்பினரின் பணி மிகவும் தேவைப்படுகின்றது என்றும், தனிப்பட்ட, மற்றும், குழு இறைவேண்டல், இறைவார்த்தைக்குச் செவிமடுத்தல், திருப்பலியில் பங்குகொள்ளுதல் போன்றவற்றின் வழியாக, தினமும், கடவுளோடு உள்ள உறவை வளர்க்குமாறும், திருத்தந்தை கேட்டுக்கொண்டார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 May 2021, 15:23